Monday, December 21, 2009

ஈழம்: சூழல் மாறும்!



இனவிடுதலைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடியவர்கள் எல்லோரும் அவர்களது வாழ்நாளிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. உண்மையான போராளிகள் அதை எதிர்பார்க்கவும் முடியாது. அதுவும் ஆயுதப் போராட்டம் என்றால், வாழும் காலத்தில் இலக்கை எட்டும் வாய்ப்பு மிகவும் அரிது. அப்படிப்பட்டதொரு நிலைதான் ஈழத்துக்காகப் போராடியவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போராட்டம் முடிந்து போனதற்கான அடையாளம் இல்லை. சமகால ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் அத்தியாயம் அவ்வளவுதான்.

விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக ஒடுக்கப்பட்டு விட்டதால், ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைக் காட்டி, போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிடம் நிரந்தரமானதல்ல என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் இலங்கை அரசுக்கே கூட அந்த அச்ச உணர்வு உண்டு. ஆனால் எந்த வகையான போராட்டம் இனி தொடரப்போகிறது? போராட்டத்துக்கு தலைமை ஏற்கப்போவது யார்? என்பன போன்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் தமிழ் பேசும் அனைவரிடமும் இருக்கிறது.

எப்படியும் விடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு ஓர் இனம் காத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டுமானால், இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும். குறைந்தபட்சம் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமலிருக்கலாம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் உச்ச நாள்களில் நடந்த மர்மங்களே இன்று வரைக்கும் விலகாத நிலையில், நாள்தோறும் புதிய கதைகள் புனையப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கதைகள் தார்மிக ரீதியாகத் தமிழர்களுக்கு ஆதரவானவை போன்று தோன்றினாலும், இன விடுதலைக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் பணியைத்தான் அவை செய்கின்றன. தமிழர்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

போராட்டக்காரர்கள் பிரிந்து கிடப்பதாகவும், சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசியவிடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் என்று கூறி வருபவர்களை யாரும் நம்ப வேண்டாம்  அவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என்பன போன்ற அறிவுரைகளும் நடமாடுகின்றன. சில ஊடகங்கள் ஒரு தரப்பை நல்லவர்களாகவும், மற்றவர்களை மோசக்காரர்களாகவும் காட்டுகின்றன.

ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள், இன்று துரோகிகளாகவும், இலங்கை அரசின் கைப்பாவைகளாகவும் மாறி இருக்கிறார்கள். ராணுவத்துக்குத் தலைமையேற்று பயங்கரமான சித்திரவதைக் கொலைகளை அரங்கேற்றியவர்கள் ஆபத்பாந்தவர்களாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்கள். மக்களைக் குழப்புவதற்காக நடத்தப்படும் இந்த ராஜதந்திர விளையாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளும் சிலரின் பேனாக்களும்கூட சிக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் குழப்பமான சூழலைக் கண்டு தமிழர்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. உலகின் எல்லா வகையான விடுதலைப் போராட்டங்களிலும் வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கத்தான் செய்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்துக்குக்கூட இது பொருந்தும். ஈழத் தமிழர் போராட்டம் அடுத்த நிலைக்கு உருமாற வேண்டிய நேரம் இது. அரசியல் ரீதியாகவோ வேறு வழியிலோ ஒரு சீரிய தலைமையின்கீழ் தமிழர்கள் ஒன்றுபடும்வரை இந்தக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

ஆனால், ஈழத்திலும் அது தொடர்பாக உலகமெங்கும் உள்ள போராட்டக்காரர்கள் மத்தியிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சிறுசிறு கருத்து மோதல்களையும் அலசி ஆராய்ந்து, அவசரப்பட்டு ஒவ்வொருவரையும் துரோகிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் முத்திரை குத்துவது, புதிய தலைமை உருவாவதைத் தாமதப்படுத்துவதற்குத்தான் உதவும். இந்த விஷயத்தில் புலனாய்வு செய்வது இப்போதைக்கு அவசியமே இல்லை. ஊகங்களை வெளியிடுவதையும், கண்மூடித்தனமாகக் குற்றம்சாட்டுவதையும்,  தவிர்த்தாலே, போராட்டம் அடுத்தகட்டத்துக்கு விரைவாக முன்னேறும்.

அதிபர் தேர்தல் சமீபித்திருக்கும் இந்த வேளையில், பொன்சேகாவுக்கு சில தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சில கட்சிகள் தனித்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேறு சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. இதில் எது தவறு, எது சரியென்று கூறுவதற்கில்லை.

தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் இப்போது நமக்குத் தெரியாது. நல்லதும் நடக்கலாம், தீயதும் நடக்கலாம். இந்தச் சூழலில் தமிழ்க்கட்சிகளை தமிழர் ஆதரவு ஊடகங்களும் உலகெங்கும் வசிக்கும் போராட்டக்காரர்களும் விமர்சிப்பது, தமிழர்களுக்குள் பிளவைத்தான் ஏற்படுத்தும். ஒன்றுபடுவதைத் தாமதப்படுத்தும். எல்லோரும் தங்களது பொறுப்புணர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை இப்போது தவிர்க்கலாம்.

சொந்த மண்ணில் முள்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களை, மறு குடியமர்த்தும் பணிகளை வலியுறுத்துவது ஒன்றே தமிழ் அரசியல்கட்சிகளும் போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொள்வோரும் இப்போதைக்குச் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். மற்ற வேலைகளைப் பிறகு பார்க்கலாம். சூழல் மாறும்.


...

.

3 comments:

ரோஸ்விக் said...

//ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டுமானால், இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும். குறைந்தபட்சம் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமலிருக்கலாம்.//

வழிமொழிகிறேன்.

தமிழ் உதயம் said...

நாடு கடந்த தமிழிழம் சரியான திசை நோக்கி செல்வதாக நம்புகிறேன். அர்ப்பணிப்புணர்வுடன் பல்வேறு பக்கம் இருந்து வரும் எதிர்ப்புகளை விவேகத்துடன் எதிர் கொண்டு செயல் பட்டால் ஈழம் சாத்தியமாகும். சர்வதேசம், ஐ நா நேர்மையாக இருக்கும் பட்சத்தில் எட்டும் தொலைவில் தான் தமிழிழம்.

துபாய் ராஜா said...

உண்மைதான். தமிழர்தம் போராட்டம் முற்றிலுமாக அடக்கப்படவில்லை. தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.