Tuesday, December 22, 2009

எனது நண்பர்கள்-4: சமூக எல்லைகளைக் கடந்தவர்- அ. செல்வதரன்

நான் பள்ளியில் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே புத்தகங்களை எழுதி வெளியிட்டவர் செல்வதரன். நானும் எனது ஊர்க்காரர்கள் பலரும் அவரது உயரத்தைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறோம். சிற்றிதழ் நடத்தியது, மாவட்ட ஆட்சியரை அழைத்து விழா நடத்தியது என இருபது வயதுக்குள்ளாகவே, பெரிய மனிதருக்குரிய செல்வாக்கு அவருக்கு சுயமாகவே கிடைத்தது.

செயல்களை உரிய நேரத்தில் முடிப்பதில் அவர் காட்டும் அக்கறையும், தோல்விகளையும் இழப்புகளையும் பக்குவமாகக் கையாளும் அணுகுமுறையும் வியப்புக்குரியவை. எல்லா விஷயங்களிலும் நூறு சதவீத நேர்மை இவரிடம் உண்டு. உறவு முறிந்தாலும் கோடிகள் இழந்தாலும் நேர்மையைக் கைக்கொண்டிருப்பவர்.  அநீதிகளை நோக்கி இப்பவும் அக்கினிப் பார்வை பார்க்கக் கூடியவர். முகத்துக் நேரே இவர் கூறும் விமர்சனங்களால் போலியானவர்கள் பொசுங்கிப் போவார்கள். அந்த உக்கிரத்தையும் தாண்டி இவருக்கு மிகப் பெரிய நட்பு வட்டம் உண்டு. உள்வட்டத்தில் நான் இருப்பது எனது இப்போதைய வாழ்நாள் சாதனைகளுள் ஒன்று.

திருமணத்தைக்கூட இலக்கியச் சங்கமமாக நடத்திய இவருக்கு, தமிழால் எந்த வகையான பொருளாதார வலுவும் கிடைக்கவில்லை. அவர் அதையெல்லாம் எதிர்பார்த்ததாகவும் தெரியவில்லை. புத்தகங்களையும் வேறு வகையான படைப்புகளையும் உருவாக்குவதற்காக அவர் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கும்போதெல்லாம், நான் நிஜமாகவே வேதனைப்படுகிறேன். இவருடன் ஒப்பிடுகையில் ஊதியத்துக்காக எழுத்துப் பணியில் இருக்கும் எனக்கு கடும் வலியுடன் அவமான உணர்ச்சி மிகும்.

ஜேசீஸ் என்னும் இளைஞர் அமைப்பில் நான் தலைவராக இருந்த காலத்தில், அந்த அமைப்பு  சார்பில் லெமனா என்கிற பெயரில் தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தினோம். இந்தப் புத்தகம் வெளிவருவதற்காக விடிய விடிய உழைத்தவர் செல்வதரன். இத்தனைக்கும் அந்தப் புத்தகத்தில் அவர் எந்தப் பொறுப்பிலும் இருக்கவில்லை. நானும் இன்னொருவரும்தான் முக்கியப் பொறுப்பிலிருந்தோம். அப்போதெல்லாம் இந்த இதழ் தயாரிப்பு பணியில் அசட்டையாகத்தான் நான் இருந்தேன். இன்றைக்கு அந்த இதழை எடுத்துப் படிக்கும்போதுதான் எவ்வளவு பெரிய இலக்கியப் பணியைத்  தவற விட்டிருக்கிறேன் எனத் தெரிகிறது.

அவருடைய எல்லாப் பண்புகளையும் கற்றுக்கொள்ள முயற்சித்து, இன்று வரைக்கும் எனக்குத் தோல்விதான்.

அடுத்தது: எளிமையிலும்  எளிமை - ம. ரெங்கநாதன்


முந்தையவை:

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்

 எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்

எனது நண்பர்கள் - 3: ஜெபஸ்டின் காசிராஜன் - எ கம்ப்ளீட் மேன்


Monday, December 21, 2009

ஈழம்: சூழல் மாறும்!



இனவிடுதலைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடியவர்கள் எல்லோரும் அவர்களது வாழ்நாளிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. உண்மையான போராளிகள் அதை எதிர்பார்க்கவும் முடியாது. அதுவும் ஆயுதப் போராட்டம் என்றால், வாழும் காலத்தில் இலக்கை எட்டும் வாய்ப்பு மிகவும் அரிது. அப்படிப்பட்டதொரு நிலைதான் ஈழத்துக்காகப் போராடியவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போராட்டம் முடிந்து போனதற்கான அடையாளம் இல்லை. சமகால ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் அத்தியாயம் அவ்வளவுதான்.

விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக ஒடுக்கப்பட்டு விட்டதால், ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைக் காட்டி, போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிடம் நிரந்தரமானதல்ல என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் இலங்கை அரசுக்கே கூட அந்த அச்ச உணர்வு உண்டு. ஆனால் எந்த வகையான போராட்டம் இனி தொடரப்போகிறது? போராட்டத்துக்கு தலைமை ஏற்கப்போவது யார்? என்பன போன்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் தமிழ் பேசும் அனைவரிடமும் இருக்கிறது.

எப்படியும் விடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு ஓர் இனம் காத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டுமானால், இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும். குறைந்தபட்சம் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமலிருக்கலாம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் உச்ச நாள்களில் நடந்த மர்மங்களே இன்று வரைக்கும் விலகாத நிலையில், நாள்தோறும் புதிய கதைகள் புனையப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கதைகள் தார்மிக ரீதியாகத் தமிழர்களுக்கு ஆதரவானவை போன்று தோன்றினாலும், இன விடுதலைக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் பணியைத்தான் அவை செய்கின்றன. தமிழர்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

போராட்டக்காரர்கள் பிரிந்து கிடப்பதாகவும், சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசியவிடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் என்று கூறி வருபவர்களை யாரும் நம்ப வேண்டாம்  அவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என்பன போன்ற அறிவுரைகளும் நடமாடுகின்றன. சில ஊடகங்கள் ஒரு தரப்பை நல்லவர்களாகவும், மற்றவர்களை மோசக்காரர்களாகவும் காட்டுகின்றன.

ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள், இன்று துரோகிகளாகவும், இலங்கை அரசின் கைப்பாவைகளாகவும் மாறி இருக்கிறார்கள். ராணுவத்துக்குத் தலைமையேற்று பயங்கரமான சித்திரவதைக் கொலைகளை அரங்கேற்றியவர்கள் ஆபத்பாந்தவர்களாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்கள். மக்களைக் குழப்புவதற்காக நடத்தப்படும் இந்த ராஜதந்திர விளையாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளும் சிலரின் பேனாக்களும்கூட சிக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் குழப்பமான சூழலைக் கண்டு தமிழர்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. உலகின் எல்லா வகையான விடுதலைப் போராட்டங்களிலும் வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கத்தான் செய்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்துக்குக்கூட இது பொருந்தும். ஈழத் தமிழர் போராட்டம் அடுத்த நிலைக்கு உருமாற வேண்டிய நேரம் இது. அரசியல் ரீதியாகவோ வேறு வழியிலோ ஒரு சீரிய தலைமையின்கீழ் தமிழர்கள் ஒன்றுபடும்வரை இந்தக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

ஆனால், ஈழத்திலும் அது தொடர்பாக உலகமெங்கும் உள்ள போராட்டக்காரர்கள் மத்தியிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சிறுசிறு கருத்து மோதல்களையும் அலசி ஆராய்ந்து, அவசரப்பட்டு ஒவ்வொருவரையும் துரோகிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் முத்திரை குத்துவது, புதிய தலைமை உருவாவதைத் தாமதப்படுத்துவதற்குத்தான் உதவும். இந்த விஷயத்தில் புலனாய்வு செய்வது இப்போதைக்கு அவசியமே இல்லை. ஊகங்களை வெளியிடுவதையும், கண்மூடித்தனமாகக் குற்றம்சாட்டுவதையும்,  தவிர்த்தாலே, போராட்டம் அடுத்தகட்டத்துக்கு விரைவாக முன்னேறும்.

அதிபர் தேர்தல் சமீபித்திருக்கும் இந்த வேளையில், பொன்சேகாவுக்கு சில தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சில கட்சிகள் தனித்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேறு சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. இதில் எது தவறு, எது சரியென்று கூறுவதற்கில்லை.

தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் இப்போது நமக்குத் தெரியாது. நல்லதும் நடக்கலாம், தீயதும் நடக்கலாம். இந்தச் சூழலில் தமிழ்க்கட்சிகளை தமிழர் ஆதரவு ஊடகங்களும் உலகெங்கும் வசிக்கும் போராட்டக்காரர்களும் விமர்சிப்பது, தமிழர்களுக்குள் பிளவைத்தான் ஏற்படுத்தும். ஒன்றுபடுவதைத் தாமதப்படுத்தும். எல்லோரும் தங்களது பொறுப்புணர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை இப்போது தவிர்க்கலாம்.

சொந்த மண்ணில் முள்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களை, மறு குடியமர்த்தும் பணிகளை வலியுறுத்துவது ஒன்றே தமிழ் அரசியல்கட்சிகளும் போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொள்வோரும் இப்போதைக்குச் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். மற்ற வேலைகளைப் பிறகு பார்க்கலாம். சூழல் மாறும்.


...

.

Wednesday, December 16, 2009

காலம் கடந்து உனக்கொரு காதல் கவிதை!





நீ பூக்களை விற்றுக் கொண்டிருந்தாய்
நான் மீனுக்கு விலை பேசினேன்.

பறக்க வேண்டிய காலம் வந்த பின்னும்
முட்டைச் சிறைக்குள்
ஒளிந்திருந்த என்னை
பூக்கொடுத்து அழைத்தாய்

என் குரல்வளைக் கொப்புளங்கள் வெடித்து
தனித்தனித் தீவுகளாய்
நான் பேசிய வாக்கியங்களை
உன் பூக்களால் கவிதைகளாக்கினாய்.

இதயத்தில் முட்களை
நிரப்பியிருந்த எனக்கு
பூக்களின் மொழியைக்
கற்றுக்கொடுத்தாய்

நான் நடக்க வேண்டும் என்பதற்காகவே
தெருவெங்கும் பூக்களைப் பரப்பினாய்.

அப்போதெல்லாம் பூக்களின் மணம்
எனக்குத் தெரியவில்லை.
கூடையையும் நான் தொட்டதில்லை.

முடிவு சமீபித்த வேளையில்தான்
நான் நுகரவே கற்றுக் கொண்டேன்.

வாய்திறந்து பூக்களை யாசிக்கிறேன்
நீ கூடையை யாருக்கோ விற்றுவிட்டு
பாலைவனத்தின் வெப்பநிலையைப் பேசுகிறாய்.


..

Tuesday, December 15, 2009

தப்பு செய்ய விருப்பம்!




அப்போது எனது தவறுகளுக்கு
முழு அனுமதி இருந்தது.

தவறுகள் ரசிக்கப்பட்டன.

தவறுகளை எல்லோரும்
புரிந்து கொண்டார்கள்.

இன்னொரு முறை செய்
என்றுகூடச் சொன்னார்கள்.

தவறுகளை எல்லோரிடமும் சொல்லி
பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

எந்தத் தவறுக்கும்
தண்டனையே இல்லாதிருந்தது.

ஒரே தவறைத்
திரும்பத் திரும்பச் செய்யலாம்.
வேண்டுமென்றே கூடச் செய்யலாம்.

எதற்கும் வெட்கமே இல்லை.
அவமானமும் இல்லை.

பயமும் இல்லை.
கவலையும் இல்லை.

அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து,
பள்ளியில் சேர்த்தார்கள்.

ப்ச்..

..

Monday, December 14, 2009

தகவல் உரிமைச் சட்டம்: புலியைப் பூனையாக்கி...

பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சிவப்பு நிற அரசு எண்ணெய் நிறுவனத்திலிருந்து ஒரு தகவலைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்காக நகல் கட்டணமாக ரூ.100ம் சேர்த்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்த ஆயில் நிறுவன தகவல் அதிகாரி, 40 பக்க நகலுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.10 வீதம் ரூ.400 அனுப்ப வேண்டும் என பதில் எழுதினார்.

நம்மவர், மிரளவில்லை. கட்டண விதிமுறையைக் காட்டி, ஒருபக்கத்துக்கு ரூ.2 போதும் என மற்றொரு கடிதம் எழுதினார். அந்த அதிகாரிகள் நம்மவரை இழுத்தடிக்க நினைத்தார்கள் போலும். ரூ. 400 கொடுத்தால்தான் தகவல். இல்லையென்றால் முடியாது எனப் பிடிவாதமாகச் சொல்லி விட்டார்கள்.

நம்மவர், தில்லியிலுள்ள தலைமைத் தகவல் ஆணையரிடம் முறையிட்டார். ஆயில் நிறுவன அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை நடந்து முடிந்து. ஏற்கெனவே செலுத்தப்பட்ட கட்டணத்தில் தகவல் நகலைக் கொடுக்கும்படி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. நம்மவருக்கு கேட்ட தகவல் உரிய கட்டணத்தில் கிடைத்தது.

கதை முடிந்துவிடவில்லை....

வழக்கு நடந்தபோது, தில்லிக்கும் சண்டீகருக்கும் ஆயில் நிறுவன அதிகாரிகள் வந்து போன செலவு எவ்வளவு எனக் கேட்டு இன்னொரு மனுவை அனுப்பினார். பதில் வந்தது. பலமுறை விமானத்தில் சென்று வந்ததற்கு சில லட்சங்கள் வரை செலவாகிவிட்டதாக. முன்னூறு ரூபாய் கட்டணத்துக்காக செலவிடப்பட்டது லட்சக் கணக்கில். எல்லாம் அரசுப் பணம். மக்கள் பணம்.

பல சமயங்களில் அரசு நிர்வாகத்தின் இதுபோன்ற அவலட்சணங்களை தகவல் சட்டம் வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

மன்மோகன் அரசின் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுவது இந்தச் சட்டம். இந்தச் சட்டப்படி, அரசு வேலைகளைக் கண்காணிக்கலாம், ஆவணங்களைச் சரிபார்க்கலாம், அலுவலகங்களைச் சோதனையிடலாம். அதெப்படி, இப்படியொரு சட்டத்தை நமது அரசியல்வாதிகள் அனுமதித்தார்கள். தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக் கொண்டதெப்படி? அவர்கள் சிக்கிக்கொள்ள அவர்களே வலை தயாரித்தது ஏன் என்பன போன்ற சந்தேகங்களெல்லாம் நமக்கு உண்டு.

தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அவ்வப்போது, இந்தச் சட்டம் அரசியல்வாதிகளை அவ்வப்போது சீண்டத் தவறியதில்லை. பார்த்தார்கள்,  அந்தச் சட்டத்தின் கொடுக்குகளையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கிவிட்டார்கள்.

சட்டத்திலிருந்து விலக்களிக்கிறேன் என்று கூறி, எங்கெல்லாம் ஊழல் நடக்கச் சாத்தியமோ அங்கெல்லாம், தகவல் சட்டத்துக்கு வேலையில்லை என்று கூறிவிட்டார்கள். இவர்களது கணக்குப்படி, பிரதமர் அலுவலக நடவடிக்கைகள், அமைச்சர்களின் சொத்து விவரம் போன்றவை மக்கள் தெரிந்துகொள் அவசியமில்லாதவை. இப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளையும் இந்த விலக்குப் பட்டியலில் சேர்த்துவிட முனைத்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் தவிர வேறு யாரால் பெரிய ஊழலைச் செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

போகிற போக்கைப் பார்த்தால், பள்ளிக்கூடங்களை மட்டும்தான் சோதனையிட முடியும். ஸ்கூல் வாத்தியார் லஞ்சம் வாங்குகிறாரா என்று மட்டும்தான் நம்மால் கண்காணிக்க முடியும் போலிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குகிறது என்பதை இந்த விலக்குப் பட்டியலைப் பார்த்தாலே சொல்லிவிட முடியும்.

இந்தப் பதிவில் நான் எந்த மாநிலத்தையும் குறை சொல்ல முனையவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் இந்த விலக்குப் பட்டியல் வழியாக ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் நேர்மையாகச் செயல்படத் துணிந்திருக்கின்றன என்று தெரியும்.


.

Friday, December 11, 2009

எனது நண்பர்கள் - 3: ஜெபஸ்டின் காசிராஜன் - எ கம்ப்ளீட் மேன்

நட்பு நீடித்திருக்க அலைவரிசை ஒத்துப்போக வேண்டுமென்பார்கள். சிலருக்கு ஓரிருவர்தான் நண்பர்களாக வாய்ப்பார்கள். பொறுமை, சகிப்புத்தன்மை, கோபம், விட்டுக் கொடுப்பது, எல்லைகளை வரையறுத்துக்கொள்வது, உதவி செய்வது, புத்திசாலித்தனம், அறிவு எனப் பல்வேறு காரணிகள் நட்புகொள்ள உதவுவதாகக் கூறப்படுகிறது. சொல்லும் மொழியும்கூட நட்பை உருவாக்குகின்றன. ஆனால் இவற்றைக் கொண்டு, அறிவாளிக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் என்றோ, அடிக்கடி கோபம் கொள்பவருக்கு குறைவான நண்பர்கள் இருப்பார்கள் என்றோ சொற்களால் வரையறுக்க முடிவதில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த நட்பு கொள்வதற்கான வரையறை ஜெபஸ்டின்.

வயதில் மிகச் சிறியவரான ஜெபஸ்டினிடமிருந்து நட்புவட்டத்தை பெருக்கிக்கொள்ள விரும்புவோர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்றே நான் நினைப்பதுண்டு. எதையோ தெரிந்துகொள்வதற்காக எனக்கு அறிமுகமாகிய ஜெபஸ்டினிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை பல உண்டு.

நட்புக்கான காரணிகளாக மேற்சொன்ன குணங்கள் கொண்ட பலதரப்பட்டவர்களையும் ஜெபஸ்டினால் நட்பு கொள்ள முடிந்திருக்கிறது. தாய்,  தந்தை, சகோதரன் போன்றவர்கள்  அமைந்ததும்கூட  இவரது  குணங்களுக்கு  காரணமாக இருக்கலாம். தற்போது பெரிய நிறுவனம் ஒன்றில் பதவியில் இருக்கும் ஜெபஸ்டின் இப்போதும் எனக்கு நண்பர் என்பதில் எனக்குப் பெருமைதான்.

புளியங்குடி புரோட்டா கடைகள், சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா, ஜேசிப் புராஜக்ட் என நாங்கள் பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கிறது.

அடுத்தது

சமூக எல்லைகளைக் கடந்தவர்: அ. செல்வதரன்

முந்தையவை:

 எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்


ஊடகங்களை தாஜா செய்யும் கூகுள்

காசு கொடுத்​தால்​தான் செய்தி கிடைக்​கும் என்​கிற நிலை இப்​போது இல்லை.​ இணை​யம் வந்த பிறகு செய்​தி​களை இல​வ​ச​மா​கத் தெரிந்​து​கொள்ள முடி​வ​து​டன் செய்​தி​களை பல்​வேறு ஊட​கங்​கள் எந்​தெந்​தக் கோணத்​தில் வெளி​யி​டு​கின்​றன என்​பதை ஒப்​பிட்​டுப் பார்க்​க​வும் வழி இருக்​கி​றது.​ செய்​தி​கள் திரட்​டப்​பட்டு திறந்​த​வெ​ளி​யில் கொட்​டப்​ப​டு​கின்​றன.​ யாருக்கு என்ன விருப்​பமோ அதை எடுத்​துக் கொள்ள வேண்​டி​ய​து​தான்.​

பெ​ரும்​பா​லான செய்தி இணைய தளங்​க​ளில் உல​வு​வ​தற்கு எந்​தக் கட்​ட​ண​மும் கிடை​யாது.​ அச்​சில் வரும் செய்​தித்​தாள்​கள் ​ இது​போன்ற இணைய தளங்​களை நடத்​தும்​போது,​​ விளம்​பர வரு​வாய் என்​பது யானைப் பசிக்​குச் சோளப்​பொறி போன்​ற​து​தான்.​ இத​னால் சில இணைய தளங்​கள் செய்​தி​க​ளைப் படிப்​ப​தற்கு சந்தா வசூ​லிக்​கின்​றன.​ சில இணைய தளங்​க​ளில் பிரத்​யே​கச் செய்​தி​க​ளுக்கு மட்​டும் சந்தா செலுத்​தி​னால் போதும்.​ ஆனால்,​​ இணை​யச் செய்​தித் திரட்​டி​கள் இதற்​கெல்​லாம் வெடி வைக்​கின்​றன.​ செய்தி இணைய தளங்​க​ளில் உள்ள செய்​தி​க​ளைத் திரட்​டி​கள் இல​வ​ச​மாக வெளி​யிட்​டு​வி​டு​வ​தால்,​​ சந்தா வசூ​லிப்​பது என்​பதே அர்த்​த​மில்​லா​த​தா​கி​வி​டு​கி​றது.​

பெ ​ரும்​பா​லான இணை​யச் சேவை​க​ளைப் போன்றே,​​ செய்​தித் திரட்​டி​க​ளி​லும் முத​லி​டத்​தில் இருப்​பது கூகுள் நிறு​வ​னம்​தான்.​ செய்​தி​க​ளைத் தேடு​வ​தற்​காக இணை​யத்​தில் மேய்​ப​வர்​கள் பெரும்​பா​லும் பயன்​ப​டுத்​து​வது கூகுள் நியூஸ் எனப்​ப​டும் கூகு​ளின் செய்​தித் திரட்டி சேவை​தான்.​ இந்​தச் சேவை​யில் இணைத்​துக் கொள்​ளும்​படி செய்தி இணைய தளங்​கள் விண்​ணப்​பித்​து​விட்​டால்,​​ முக்​கி​யச் செய்​தி​க​ளின் பட்​டிய​லில் அந்​தக் குறிப்​பிட்ட இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​ப​டும் செய்​தி​யும் பட்டிய​லி​டப்​ப​டும்.​ அதன் மூலம் இணை​ய​த​ளத்​தைப் பார்ப்​ப​வர்​க​ளின் எண்​ணிக்கை அதி​க​ரிக்​கும்.​ அது விளம்​பர வரு​வாய்க்கு உத​வும்.​ பொது​வாக,​​ இந்​தத் திரட்​டி​கள் வழி​யாக இணைய தளங்​க​ளுக்கு வரு​வோ​ரின் விகி​தம் கிட்​டத்​தட்ட பாதி அள​வுக்கு இருப்​ப​தால்,​​ இவற்​றில் இணைத்​துக் கொள்​ளாத செய்தி இணைய தளங்​களே இல்லை என​லாம்.​
÷அ​தே​போல்,​​ எல்லா இணைய தளங்​க​ளி​லு​முள்ள செய்​தி​க​ளை​யும் ஒரே இடத்​தில் பார்க்க முடி​யும் என்​ப​தால் நேர​டி​யாக இணைய தளங்​க​ளுக்​குச் செல்​வ​தை​விட திரட்​டி​க​ளைப் பார்​வை​யி​டு​வ​தையே இன்​றைய இணைய வாச​கர்​கள் வழக்​க​மாக வைத்​தி​ருக்​கின்​ற​னர்.​ இத​னால்,​​ திரட்​டி​க​ளும் வரு​வாய் ஈட்​டிக்​கொள்​கின்​றன.​ ஒட்​டு​மொத்​த​மா​கப் பார்த்​தால்,​​ செய்தி இணைய தளங்​க​ளும் செய்​தித் திரட்​டி​க​ளும் ஒன்​றை​யொன்று சார்ந்​தவை.​ இந்​தச் சார்​புத் தன்​மை​யில் சம​நிலை எப்​போ​தெல்​லாம் தவ​றிப்​போ​கி​றதோ,​​ அப்​போ​தெல்​லாம் இரு தரப்​புக்​கும் இடையே மோதல்​கள் ஏற்​ப​டு​கின்​றன.​

ஊ​டக பெரும்​புள்​ளி​யான ரூபர்ட் முர்​டாக் அண்​மை​யில் கூகுள் நிறு​வ​னத்​து​டன் மோதி​ய​தால்,​​ விவ​கா​ரம் வெளிச்​சத்​துக்கு வந்​தது.​ அவ​ருக்​குச் சொந்​த​மான சில இணைய தளங்​க​ளி​லுள்ள சந்தா செலுத்​திப் பார்க்க வேண்​டிய பங்​கங்​களை கூகுள் இல​வ​ச​மாக வெளி​யிட்டு வந்​த​தால் இந்​தப் பிரச்னை உரு​வா​னது.​ முர்​டாக்​கின் கோரிக்​கை​களை கூகுள் கண்​டு​கொள்​ள​வில்லை.​ இத​னால் அதி​ருப்​தி​ய​டைந்த அவர்,​​ தனது முக்​கிய செய்தி இணைய தளங்​களை கூகுள் செய்​தித் திரட்​டி​யின் பட்​டியலி​லி​ருந்து எடுத்​து​வி​டப்​போ​வ​தாக அறி​வித்​தார்.​ ஆனா​லும் கூகுள் அசைந்து கொடுக்​க​வில்லை.​ எங்​கள் வளர்ச்​சிக்கு யாரும் தேவை​யில்லை என இரு​த​ரப்​புமே பிடி​வா​த​​மாக இருந்து வந்​தன.​

இப்​ப​டி​யொரு சூழ்​நி​லை​யைப் பயன்​ப​டுத்தி,​​ கூகு​ளில் இருந்து இணைய தளச் செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளைப் பிரிப்​ப​தற்கு வியூ​கம் வகுத்​தது மைக்​ரோ​சா​ஃப்ட்.​ கூகு​ளில் இருந்து வெளி​யேறி தனது பிங் திரட்​டி​யில் இணைத்​துக் கொள்​வ​தற்​காக செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளு​டன் அந்த நிறு​வ​னம் பேரம் பேசி வரு​வ​தா​க​வும் செய்தி வெளி​யா​னது.​ முக்​கி​யச் செய்தி இணைய தளங்​க​ளிலி​ருந்து பிரத்​யே​கச் செய்​தி​க​ளைப் பெற்று அவற்றை பிங் திரட்​டி​யில் இணைத்​துக் கொள்ள மைக்​ரோ​சா​ஃப்ட் முயன்று வரு​வ​தா​கக் கூறப்​பட்​டது.​ பிங் தேடு​பொ​றியை அறி​மு​கம் செய்த பிறகு தேடல் மற்​றும் விளம்​ப​ரச் சந்​தை​யில் மைக்​ரோ​சா​ஃப்ட் வேக​மாக முன்​னே​றி​யி​ருப்​ப​தா​க​வும் புள்ளி விவ​ரங்​கள் வெளி​யி​டப்​பட்​டன.​

மைக்​ரோ​சா​ஃப்​டின் காய் நகர்த்​தல்​கள் கூகுள் செய்​தித் திரட்​டியை பெரு​ம​ளவு பாதிக்​கச் செய்​யும் என்று கரு​தப்​பட்​டது.​

இ ​தற்கு மேல் பிடி​வா​த​மாக இருந்​தால்,​​ வரு​வாயை இழக்க வேண்​டி​யி​ருக்​கும் என்​பதை உணர்ந்த கூகுள்,​​ தற்​போது புதிய திட்​டத்தை வெளி​யிட்​டி​ருக்​கி​றது.​ இதன்​படி,​​ சந்தா செலுத்​திப் பார்க்​க​வேண்​டிய இணை​ய​ த​ளங்​க​ளில் 5 பக்​கங்​களை மட்​டுமே இல​வ​ச​மா​கப் பார்க்க அனு​ம​திக்​கும் வகை​யில் திரட்​டியை மாற்றி அமைத்​தி​ருக்​கி​றது.​ ​ அதற்கு மேல் பார்க்க முயன்​றால் சம்​பந்​தப்​பட்ட இணைய தளத்​தின் சந்தா செலுத்​து​வ​தற்​கான பக்​கம் காட்​டப்​ப​டும்.​ இதற்​காக "ஃபர்ஸ்ட் க்ளிக் ஃப்ரீ' என்​கிற சேவையை கூகுள் தொடங்​கி​யி​ருக்​கி​றது.​

ஆ​யி​னும் இதெல்​லாம் இணைய தளச் செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளைச் திருப்​தி​ய​டைச் செய்​யாது என்றே கரு​தப்​ப​டு​கி​றது.​ ஒரு​வர் ஓர் இணைய தளத்​தில் 5 பக்​கங்​க​ளுக்கு மேல் பார்ப்​பது என்​பதே அரி​து​தான்.

அப்​ப​டிப் பார்க்க வேண்​டிய தேவை ஏற்​பட்​டால்,​​ வேறு இணைய தளத்​துக்​குச் சென்று அங்கு இல​வ​ச​மா​கக் கிடைக்​கக்​கூ​டிய 5 பக்​கங்​க​ளைப் பார்க்க முடி​யும்.​ இத​னால்,​​ இல​வ​ச​மாக 5 பங்​கங்​களை அனு​ம​திப்​ப​தென்​பது இந்த விவ​கா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைத்​த​தா​கி​வி​டாது.​

ஊட​கங்​க​ளுக்கு எதி​ரான மோத​லில் தனது நிலையி​லி​ருந்து கூகுள் இறங்கி வந்​தி​ருப்​ப​தற்கு முக்​கி​யக் கார​ணம்,​​ இந்​தப் போட்​டி​யில் மைக்​ரோ​சா​ஃப்ட் நுழைந்​து​வி​டக்​கூ​டாது என்​ப​து​தான்.​ அதன் நோக்​க​மும் கிட்​டத்​தட்ட நிறை​வே​றி​விட்​டது.​ ஆனால்,​​ சண்டை முடிந்​து​வி​ட​வில்லை;​ சமா​தா​னம் பேச​வும் ஆளில்லை.​

--

.

Sunday, December 06, 2009

ஒரு நாள் போட்டிக்கு டிராவிட் தேவையா?

99 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தூணாகத் திகழ்ந்தவர் டிராவிட். கன்சிஸ்டன்சி என்று சொல்வார்களே அது அப்போது அவரிடம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்றபோது, டெண்டுல்கரை விட டிராவிட்தான் எங்களுக்கு சவாலாக இருப்பார் என ஸ்டீவ் வாக் சொன்னார். அந்த அளவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வீரராக இருந்து வந்தவர் டிராவிட். அவருடைய கவர் டிரைவின் அழகு அனைவரும் ரசிக்கும் ஒன்று. டிராவிட் ஆட வந்ததிலிருந்து இன்று வரைக்கும் அவரது அதிதீவிரக ரசிகன் நான்.

இன்று அவருக்குப் பெருத்த அடையாளச் சிக்கல். இப்போது இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த சதங்கள், அவருக்கு அணியில் நிலையான இடத்தைப் பெற்றுத் தந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் அவரால் என்ன சாதிக்க முடியும்.

இரு வகையில் அவருடையே தேவை இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஒன்று அவருடையே விக்கெட் காக்கும் திறன்.  அடுத்தடுத்து விக்கெட் விழும் பிட்ச்களில் டிராவிட்டை தவிர வேறு யாராலும் மட்டை போட முடியாது. இரண்டாவது ஸ்லிப் ஃபீல்டிங்.

ஆனால், அணியில் அவரைச் சேர்த்தால், ஒரு அசாதாரண நிலை ஏற்படுகிறது. அவர் மைதானத்துக்குள் நுழைந்ததுமே சராசரி ரன் விகிதம் படுத்து விடுகிறது. இது இருபது ஓவர் யுகம். ஒரு ஓவருக்கு 4 அல்லது 5 ரன்கள் எடுத்து கடத்திக் கொ்ணடடிருக்க முடியாது. அப்படிச் செய்வது அடுத்துவரும் ஆட்டக் காரர்கள் மீது சுமையை ஏற்றுவது போலாகிறது.

தற்போதுள்ள இளம் வீரர்களின் ஸ்டைலோடு ஒத்துப் போகும் ஆட்டமாகவும் டிராவிட்டின் ஆட்டம் இல்லை. சுவர் சுவர் என்று சொல்லியே அவரை அதிரடியாக ஆடவிடாமல் செய்து விட்டார்கள்.

இது போகட்டும், அதான், வரிசையாக சச்சின், கம்பீர், சேவக், தோனி, யுவராஜ் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களே, டிராவிட்டை கொண்டுபோய் எந்த இடத்தில் சேர்ப்பது? மூன்றாவது இடத்தில் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அதைவிட ஒரு பத்து ஓவரை கட் செய்யச் சொல்லிவிடலாம்.

டிராவிட் நல்ல மனிதர், எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர், பந்துகளை செல்லமாகத் தட்டுபவர். ஆனால், ஒருநாள் போட்டியின் வேகத்துக்கு மட்டும் ஈடுகொடுக்க முடியாதவர். என்னைக் கேட்டால், டெஸ்ட் ஆட்டங்களுக்கு மட்டும் அவர் போதுமென்று சொல்வேன். அவர் சிரமப்படுவதைப் பார்க்க என்போன்ற ரசிகர்களால் முடியவில்லையே என்ன செய்வது?




--

Friday, December 04, 2009

ஹார்டு டிஸ்க்கை விற்கப் போகிறீர்களா? ஆபத்து...


பொதுவாக் நம்து பழைய கணினியோ அல்லது மொபைல் போனோ கொஞ்சம் பழையதாகிப் போனால், அதை நாம் தூக்கி எறிந்து விடுவதில்லை. முடிந்த வரை ஒரு விலை போட்டு யாருக்காவது கொடுத்துவிடவே விரும்புவோம்.

ஆனால், இவை இரண்டிலுமே ஆபத்து இருக்கிறது. கணினியில் உள்ள ஹார்டு டிஸ்க் மற்றும் மொபைல் போன், கேமரா ஆகியவற்றிலுள்ள மமெரி கார்டு ஆகிவற்றில் இருந்து நாம் சேமித்து வைத்த ரகசியத் தகவல்களை பிறர் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதான் எல்லாத்தையுமே அழிச்சுட்டோமே என்கிறீர்களா?

நீங்கள் என்னதான் அழி்த்தாலும் அதிலிருந்து தகவல்களை மீட்டெடுக்கும் வசதிகள் இப்போது நிறையவே இருக்கின்றன.

கொஞ்சம் விவரமானவர்கள் அதான் ஃபார்மட் பண்ணியாச்சே... இன்னும் என்ன பிரச்னை எனக் கேட்கக்கூடும். என்னதான் பார்மட் செய்தாலும், அதிலிருந்தும் தகவல்களை எடுக்க முடியும்.

சரி இதற்கு என்னதான் வழி?

ஒரே வழிதான். ஹார்ட் டிஸ்ட் மற்றும் மெமரி கார்டுகளை உடைத்துத் தூக்கிப் போடுவது.

வேறு என்ன செய்தாலும், ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள் அதிலுளள தகவல்களைப் படித்து விடுவார்கள். அந்தரங்கங்களும், ரகசியங்களும் பிறரிடம் மாட்டிக் கொள்ளும். வங்கிக் கணக்குகள் போன்றவை மற்றவர்கள் கைக்குப் போனால் பொருளாதார இழப்பு ஏற்படும். வேறு மாதிரியானவை சிக்கினால், மரியாதை போய்விடும்.


ஏற்கெனவே விற்று விட்டீர்களா? மனதைத் திடப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது.

பலமுறை எச்சரிக்கப்பட்ட விஷயம்தான் இது. கணினியில் புதிதாகப் புகுந்து விளையாடுவோருக்காக மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

-

Thursday, December 03, 2009

தடம் மாறும் ஊடகங்கள்? - 1


ஊடகம் என்பது பலதரப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கியது. அவர்களுள் செய்தியாளர்கள், துணை ஆசிரியர்கள் ஆகியோர் மிக அடிப்படையான பணிகளைச் செய்வோர். பத்திரிகைத் தலைமையின் கொள்கைக்கு ஏற்றபடிதான் இவர்கள் நடந்து கொள்ள வேண்டியிருந்தாலும், முடிந்தவரை சமூக அக்கறை கொண்ட செய்திகளை இவர்களால் வழங்க முடியும்.

மின்னணு ஊடகமாக இருந்தாலும், அச்சு ஊடகமாக இருந்தாலும் திறமையான செய்தியாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம். செய்தியாளர்கள், ஊடகங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுகின்றனர். அதிகாரம்மிக்க இடங்களில் ஊடுவியும், மக்களோடு மக்களாகக் கலந்தும் தரமான செய்திகளைச் சேகரிக்க வேண்டிய பொறுப்புமிக்க பணி அவர்களுடையது. சில இடங்களில் அதிகாரமாகவும், சில இடங்களில் பணிவாகவும், சில இடங்களில் நாசூக்காகவும் செய்தியாளர்கள் செயல்படவேண்டியிருக்கிறது. அடிப்படையாகவே பலதரப்பட்ட விஷயங்களில் அறிவும், மனிதர்களைக் கையாளும் திறமையும், முடிவெடுக்கும் திறனும், அபாரமான நினைவாற்றலும், புத்திசாலித்தனமும், நடப்புகளை உற்றுநோக்கும் ஆர்வமும் செய்தியாளர்களிடம் இருக்க வேண்டும். செய்திகளைத் தர வேண்டுமென்பதற்காக ஊடகத்தின் கொள்கையும் சட்டத்தையும் மீற முடியாது. தரமான செய்திகளைத் தவறவிடவும் கூடாது. மனசாட்சிக்கும் மதிப்பளிக்கவேண்டும். இப்படி எல்லா இலக்கணங்களும் பொருந்திய செய்தியாளர்கள் குறைந்துவிட்டனர். ஊடகங்கள் எல்லாமே வணிகமயமாகிவிட்டதால், செய்தியாளர்களும் அதற்கேற்றாற்போல் நடந்துகொள்கின்றனர். பேரும் புகழும் கிடைக்கிறது என்பதற்காக அடிப்படையான மரபுகளைக்கூட இன்றைய செய்தியாளர்கள் பலர் பின்பற்றுவதில்லை. கல்லூரியிலும் இவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லை. பணியில் சேர்ந்தபிறகு கற்றுக்கொடுக்கவும் ஆளில்லை.

அப்படி எந்த இலக்கணமுமே இல்லாமல், மாவீரர் தினத்தில் பொட்டு அம்மான் வரப் போவதாக ஒரு பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டது. இதற்கான எந்த உறுதியான மூலத்தையும் அந்தச் செய்தி சுட்டிக் காட்டவில்லை. எல்லாம் வெறும் ஊகம். அப்படியொரு ஊகத்தை அப்போது வெளியிட வேண்டிய அவசியமேயில்லை. அந்தச் செய்தி வெளியிடப்பட்டதன் நோக்கம் என்ன? தமிழர்களை உற்சாகப்படுத்தவா? அல்லது இலங்கைப் படையை எச்சரிக்கை செய்யவா? ஏற்கெனவே நொந்து போயிருக்கும் தமிழர்களை மேலும் ஏமாற்றியதாகாதா இது?

ஒரு செய்தி கவனிக்கப்படாமலேயே கூட போகலாம். ஆனால், வெற்று பதற்றத்தை ஏற்படுத்தும் செய்தியை பிரம்மாண்டமாக்கவே கூடாது. இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது.

எளிய முறையில் யுஎஸ்பி டாஸ் பூட் டிஸ்க்

முக்கியம்: டாஸ் பூட் டிக்ஸ் மூலம் 32 ஜிபிக்கு குறைவான ஃபேட் டிரைவ்களை மட்டுமே அணுக முடியும். சில நேரங்களில் டாஸ் மூலமாக மட்டுமே பூட் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் அப்போது இந்த டிஸ்கை பயன்படுத்தலாம்.


பொதுவாக ஃபிளாப்பி டிஸ்குகளை ஃபார்மேட் செய்வதற்கு எக்ஸ்ப்ளோரரில் டிரைவ் லெட்டர் மீது வலது கிளிக் செய்து ஃபார்மேட் செய்வோம். அப்போது create dos boot disk என்ற தேர்வு இருக்கும். ஆனால, யுஎஸ்பி டிரைவை ஃபார்மேட் செய்யும்போது இந்தத் தேர்வு மறைந்து போயிருக்கும். இதனால், யுஎஸ்பி டிரைவை பூட் டிஸ்க்காக மாற்ற முடியாது.

இந்த மறைந்து போன தேர்வுகளைச் தெரியச் செய்வதற்காக windows enabler என்னும் சிறிய டூல் இருக்கிறது. இணையத்தில் தேடினால் எளிதாக கிடைக்கும்.  இதை இயக்கிவிட்டு, யுஎஸ்பி டிரைவை பார்மட் செய்தால், create dos boot disk தேர்வை செலக்ட் செய்ய முடியும். இப்போது ஃபார்மட் செய்தால் பூட் டிஸ்க் தயார். கவனிக்கவும், இந்த பூட் டிஸ்க் பிளாப்பி போல 1.44 எம்.பி அளவுக்குதானஅ இரு்ககும்.

எச்பி இணையதளத்தில் இதற்கான வேறு சில வழிமுறைகளும் இருக்கின்றன. யுஎஸ்பி டிரைவிலேயேயிலேயே எக்ஸ்பி இயக்க அமைப்பைப் பதிவு செய்யவும் வழியிருக்கிறது.


முடியாததை முடித்து வைக்கும் விண்டோஸ் எனாப்லர் (xp, 2000,98)

விண்டோஸ் இயக்க அமைப்பில் சில நேரங்கள் மெனுக்கள், செக் பாக்ஸ்கள், பட்டன்கள் ஆகியவை கிளிக் செய்ய முடியாதபடி செயல்படாத நிலையில் (disabled) மறைந்து போயிருக்கும். அவற்றை கிளிக் செய்தாலும் எந்த வேலையு்ம் நடக்காது. இவற்றையெல்லாம் தெரியச் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட கருவிதான் விண்டோஸ் எனாப்லர். இணையத்தில் தேடினால் இது கிடைக்கும். இதை இயக்கிவிட்டு, disabled ஆக உள்ள பட்டன்கள், செக் பாக்ஸ்கள், மெனுக்களில் கிளிக் செய்தால் அவை இயங்கும்.

கவனம்: அவசியத் தேவை இல்லாமல் இதைப் பயன்படுத்தவது இயக்க அமைப்பைக் குலைக்கும்.

யுஎஸ்பி டிரைவில் காணாமல் போன கோப்புகளை கண்டறிய...


அண்மையில் நண்பர் ஒருவர் வந்தார். தனது யுஎஸ்பி டிரைவில் மிக முக்கியமான கோப்புகள் இருப்பதாகவும் ஆனால், அவற்றைப் பார்க்க முடியவில்லை என்றும் சொன்னார். யுஎஸ்பி டிரைவை வாங்கிப் பார்த்தேன். புராபர்ட்டீஸ் பார்த்தால் கிட்டத்தட்ட முழுக் கொள்ளளவும் கோப்புகளால் இடம்பிடித்திருக்கின்றன. ஆனால், திரையில் எதுவும் திரையில் தெரியவில்லை.

கோப்புகள் அனைத்தும் "ஹிடன்" ஆக் இருக்கும் எடுத்துவிடலாம் என்றேன்.

அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். எல்லாம் டிரை பண்ணியாச்சு என்றார்.

நானும் எக்ஸ்புளோரில் உள்ள வ்யூ ஆப்சனில் சென்று முயற்சி செய்து பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை.

புரிந்துவிட்டது. ஒரே வழி டாஸ் ப்ராம்ட்.

ஸ்டார்ட்->ரன் சென்று cmd என டைப் செய்தேன்

டாஸ் பிராம்ட் வந்தது.

J: என டைப் செய்தேன்(j என்பது யுஎஸ்பி டிரைவ் எழுத்து)

மறைந்திருக்கும் ஹிடன் கோப்புகளை எடுப்பதற்காக அந்தக் காலத்தில் படித்த டாஸ் கட்டளையைப் பயன்படுத்தினேன்.

atrrib /s / d -h -s -r என டைப் செய்து விட்டு dir கட்டளையைக் கொடுத்தேன்..

எல்லா கோப்புகளும் தெரிந்தன. xcopy கட்டளையைக் கொடுத்து தேவையான இடத்தில் அவற்றை சேமித்தேன்.


கட்டளைகள் விவரம்

j:
atrrib /s / d -h -s -r  ( s - all files, d - all directories, h-hidden, s- system, r-readonly)
dir
xcopy /s  . D:  ( புள்ளி வைத்தால் எல்லா கோப்புகளும் என அர்த்தம், s- all directories d: destination)

Tuesday, December 01, 2009

இஸ்லாமுடன் முறுக்கிக் கொள்ளும் சுவிட்சர்லாந்து!


சர்வதேச அரங்கில் அரசியல் சாராநிலையையும் மதச்சார்பின்மையையும் கட்டிக்காக்கும் நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது சுவிட்சர்லாந்து. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக எந்த நாட்டுடனும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. இரு உலகப்போர்களின்போதும் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொண்டது. ஆதரவு தேடிவந்த அச்சு நாடுகளுடனும் நேச நாடுகளுடனும் வெறுப்பைச் சம்பாதித்தபோதும், நடுநிலைமை தவறவில்லை என சுவிட்சர்லாந்தைப் பற்றி வரலாறு சொல்கிறது. கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைத்த இரண்டாவது நாடு என்கிற பெருமையும் சுவிட்சர்லாந்துக்கு உண்டு. அரசு இயற்றும் சட்டங்களை கருத்தறியும் தேர்தல்கள் மூலமாக மக்கள் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்க முடியும். அந்த அளவுக்கு மேம்பட்ட மக்களாட்சியைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நாடாகவும் சுவிட்சர்லாந்து கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தனித் தன்மைகளைக் கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்து, தனது அடையாளங்களை இழக்கும் அபாயத்தில் இப்போது சிக்கியிருக்கிறது.
÷சுமார் 78 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் முஸ்லிம்கள். யுகோஸ்லாவியா போன்ற பால்கன் நாடுகளிலிருந்தும்  துருக்கியப் பிரதேசங்களில் இருந்தும் இவர்கள் வந்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், இதுவரையில் பெரிய அளவிலான மத வன்முறைகள் ஏதும் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் இல்லை. வெளிநாடுகளிடம் எப்படி நல்லபேர் எடுத்திருக்கிறதோ, அதே போல் உள்நாட்டிலும் சர்ச்சைகள் எழாவண்ணம் அடுத்தடுத்து வரும் அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக அங்கு மதங்களுக்கு இடையே கசப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
÷சில காலம் முன்பு தனது பணியாளர்கள் தொப்பி வைத்து வருவதற்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் நிர்வாகிகள் தடை விதித்ததையடுத்து சர்ச்சை கிளம்பியது. சிறிய அளவிலான போராட்டத்திலேயே இந்தத் தடை உடைக்கப்பட்டது. இதேபோல், பள்ளிகளில் நீச்சல் பயிற்சியின்போது உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை மாணவிகள் அணிவதற்கும் போராட்டத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவிலான விமர்சனங்கள் எழவில்லை. நாட்டின் பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கசப்பு ஏற்படுவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.
÷நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கும் முஸ்லிம்களுக்கு சுமார் 150 மசூதிகளே இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றிலும் நான்கில் மட்டுமே சிறிய வகையிலான மினார்கள் எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மசூதிகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொழுகை நடத்துவதற்கான அறைகளும், கட்டங்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் மினார்கள் அமைக்க அனுமதி கோரினால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அனுமதி தருவதில்லை என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வந்தது. மினார்கள் என்பது மதம் பரவுவதற்கான மூலமாகவும் அடையாளமாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணம்.
இந்த நிலையில், 2004}ம் ஆண்டில் மசூதி ஒன்றில் மினார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் புதிய வடிவிலான பிரச்னை தலைதூக்கியது. மத அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவே மினார்கள் அமைக்க திட்டமிடப்படுவதாக அந்த மசூதியைச் சுற்றியிருந்தவர்கள் சிலர் கூறியதால் விஷயம் விவகாரமானது. அரசியல் ரீதியாகவும் மத அடிப்படையிலும் மினார் அமைப்பதற்கு நெருக்கடி தரப்பட்டது.
÷ஒருவழியாக குறிப்பிட்ட அந்த மசூதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மினார் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனால், அதனால் எழுந்த பிரச்னையின் தீவிரம் குறையவேயில்லை. இதுவே தேசிய அளவிலான பிரச்னையாக உருவெடுத்தது. மினார்கள் அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என சில மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. மினார் கட்ட அனுமதிப்பது ஷரியத் போன்ற பிரத்யேகமான சட்டத்தை பின்பற்றச் சொல்வதற்கு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்பட்டது. கொஞ்ச காலத்தில் மக்களுக்கான போராட்டம்  என்பது போன்ற தோற்றம் இதற்கு ஏற்பட்டது.
÷இதன்பிறகுதான் சுவிட்சர்லாந்து அரசு விழித்துக் கொண்டு நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க முடிவெடுத்தது. வெவ்வேறு தருணங்களில் கூடிய இரு அவைகளும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மினார்கள் தடை செய்யப்படுவதை நாட்டு மக்கள் விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை காக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.
÷ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து வரும் சவிட்சர்லாந்து மக்கள் கட்சி, மினார்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டது. அவ்வளவுதான், மினார்கள் பிரச்னை அரசியல் பிரச்னையானது. தெருக்களிலிருந்து இணையம் வரையிலும் பிரசாரம் செய்யப்பட்டது. மினார்கள் கட்டுவது உலகப் பிரச்னையானது.
÷சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை முன்பே கூறியதுபோல், மக்கள்தான் பிரதானம். மற்ற நாடுகளுடனான அரசியல் உறவுகள், பன்னாட்டு நிறுவனங்களுடனான உறவுகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிலும் மக்கள் கருத்தறியப்படுகிறது. அந்த வகையில் மினார்கள் கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டதால், இதையும் மக்கள் முடிவுக்கே விட்டுவிட சுவிட்சர்லாந்து அரசு தீர்மானித்தது. அதன்படி, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நடந்து முடிந்திருக்கிறது.
÷இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, இஸ்லாமிய நாடுகளுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான உறவில் அதிர்வு ஏற்பட்டது. தடை விதிப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துவிட்டால், உலக அரங்கில் சுவிட்சர்லாந்தின் மரியாதை சரிந்துபோகும் என்பதை உணர்ந்த அரசு, மினார்களுக்குத் தடை விதிக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனப் பிரசாரம் செய்தது. கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முந்தைய கணிப்புகளில், மினார் அமைக்கத் தடை கோருவதை நிராகரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பாளர்கள் என்று கூறப்பட்டது.
÷ஆனால், முடிவுகள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கின்றன. மினார்கள் கட்டுவ தற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்து 57% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
   இந்த முடிவுக்கு மொத்தமுள்ள 26 பிரதேசங்களில் 22 பிரதேசங்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் இந்தத் தடை சட்டமாக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
÷சுவிட்சர்லாந்தின் அரசியலிலும் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நிகழ்வாகவே இந்தத் தேர்தல் முடிவு கவனிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளாலும், மினார் கட்டுவதற்கு விதிக்கப்படும் தடைகளாலும் இஸ்லாம் இன்னும் வீரியமாகப் பரவும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சட்டங்களால் மதங்கள் பரவுவதைத் தடுக்க முயன்ற பல்வேறு நாடுகளின் நிலைமையை, சகிப்புத்தன்மை கொண்டவர்களாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்து மக்கள் உணராமல் போனது ஆச்சர்யம்தான். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், எல்லாம் மேம்பட்ட ஜனநாயகத்தில் அரசியல் படுத்தும் பாடு!

காக்கா கதையும் சாம்பியன்ஸ் கோப்பையும்

இந்திய கிரிக்கெட் அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பை கிடைக்காமல் போனது பற்றி இப்போது தெருமுனைகளிலும், பஸ் ஸ்டாப்களிலும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.
  ஏன் தோற்றீர்கள் என தோனியிடம் கேட்டால், தம்மையும் பிரெட் லீயையும் போல பவுலர்கள் யாருமில்லாததுதான் காரணம் என்பார். நமது பந்துவீச்சாளர்களின் பேச்சைப் பார்த்தால், "எப்படிப் போட்டாலும் அடிக்கறாங்கப்பா' என எதிரணியினர் மீது பழிபோடத் தயாராக இருப்பது தெரிகிறது
  சிலர் தென்னாப்பிரிக்க பிட்சை காரணம் சொல்வார்கள். வேறு சிலர் டக்வொர்த் லீவிûஸ வம்புக்கு இழுப்பார்கள். இன்னும் சிலர் பந்து, பேட், ஸ்டம்ப் கேமரா, ஷூ, எதிரணியினர் ஹேர்ஸ்டைல், அம்பயரின் தொப்பி, சைடு ஸ்கிரீன், சனிப்பெயர்ச்சி, சீயர் லீடர்ஸ் இல்லாதது என எதையாவது சொல்லி ரசிகர்களை இம்சிப்பார்கள்.
  ஆனால், ரசிகர்கள் இப்போது பாகிஸ்தான் வீரர்கள் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள்தானே இந்திய அணியை ஜெயித்தும் கெடுத்தார்கள்; ஆஸ்திரேலியாவிடம் தோற்றும் கெடுத்தார்கள்.
  இந்திய அணி தோற்றுப் போனதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். சமீபகாலமாக இந்திய அணிக்குச் சிறந்த கேப்டன்கள் கிடைக்கவில்லை. கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த், அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, திராவிட் என யாருமே வெற்றிகரமாக இருந்ததில்லை. இந்திய அணிக்குக் கேப்டனாகிவிட்டால், அவர் சிறந்த கேப்டனாக இருக்கவே முடியாது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில வெற்றிகளைப் பெற்றதுமே தமது தலைமையால்தான் அணி ஜெயிக்கிறது என்று தோனி எண்ணிக்கொண்டார். அதனால்தானோ என்னவோ, யுவராஜ், சேவக் ஆகியோருடன் முட்டிக் கொண்டார்.
  ஆல் ரவுண்டராக ஆட வேண்டும் என்கிற தோனியின் எண்ணம் நியாயமானதுதான். ஆனால், ஆல் இன் ஆல் ரவுண்டராக வரலாற்றில் இடம்பிடிக்கப் போராடும் அவரது நிலையை நினைத்தால் ஆப்பசைத்த குரங்கின் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஒருவர் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கலாம். அல்லது பவுலராகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகச் செயல்படலாம். கீப்பராகவும் பவுலராகவும் செயல்படுவேன் என அடம்பிடித்தால் எப்படி? வேறு யாராவது கேப்டனாக இருந்தால் இந்த மாதிரியான வாய்ப்பெல்லாம் இவருக்குத் தருவார்களா?
  அடுத்தது, ராகுல் திராவிட் வருகையினால் ஏற்பட்ட அசாதாரணமான நிலை. அவரது ஆட்டம் அணிக்குப் பலமா அல்லது பலவீனமா என்பதை திருவுளச் சீட்டு மூலமாகத்தான் அறிய வேண்டும். அந்த அளவுக்கு நன்மையும் செய்கிறார், இம்சையும் செய்கிறார். ரசிகர்கள், எதிரணியினர், அம்பயர் என அனைவரின் பொறுமையையும் அவர் சோதிப்பார். ஆவேசம் வந்தாலன்றி பந்தை செல்லமாகத் தட்டி மட்டுமே பழக்கப்பட்டவர். கிரீஸýக்குள் பந்து கிடந்தாலும் ரன் எடுப்பது போல பாவ்லா காட்டியே கடுப்பேற்றுவார். இதனால், அவரோ அல்லது உடன் ஆடுபவரோ அவுட் ஆகி வெளியேறுவதுதான் மிச்சம். அவரது வருகை அணியின் ரன் சேர்க்கும் முறையை மாற்றிவிட்டது என்பது மட்டும் தெளிவு.
  சேவாக்கும் யுவராஜும் தற்செயலாக சாம்பியன்ஸ் கோப்பையில் ஆடவில்லையா, அல்லது தோனி புகழைக் கொஞ்சம் தட்ட வேண்டும் என்று திட்டமிட்டே புறக்கணித்தார்களா எனத் தெரியவில்லை. எப்படியோ தாங்கள் இருவரும் அணியில் இருந்தால்தான் பலம் என்பதை தோனிக்குப் புரிய வைத்துவிட்டார்கள். இதற்காக ஒரு கோப்பையை இழக்க வேண்டுமா?
  அடுத்தது, ஐபிஎல் அணியில் எல்லோரும் டி20 ஆட்டங்கள் நிறைய ஆடிவிட்டதால், பழக்கத்தை மாற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள். 5 ஓவர் தொடர்ந்து வேகப்பந்து வீசுவதும், 10 ஓவர்களுக்கு மேல் பேட் செய்வதும், 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்வதும்கூட வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். இதுவும் அணியின் மோசமான ஃபார்முக்கு காரணம்.
  அதற்காக இந்திய அணி, எப்போது நல்ல ஃபார்மில் இருந்தது எனக் கேட்கக்கூடாது. நம் அணி அவ்வப்போது சாம்பியனாகும், பிறகு நோஞ்சான்களிடம் கூடத் தோற்கும். இது நீண்டகால உண்மை. அதை மறந்துவிட்டு, கோப்பையை ஜெயிப்பார்கள் என்று கனாக் காண்பது அறியாமை.
  காரணம் எதுவாக இருந்தாலும், இந்திய அணியின் தோல்வி வேறொரு திருப்பத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றே தெரிகிறது. அசாருதீன் கேப்டனாக இருந்தபோது, அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு டெண்டுல்கரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு கங்குலியிடமும், பின்னர் திராவிட்டிடம் வழங்கப்பட்டது. கடந்த உலகக் கோப்பையில் தோற்றதும் தோனிக்கு கிரீடம் சூட்டப்பட்டது. இப்படி காகம் வடை திருடிய கதைபோல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பதவி போய்கொண்டிருக்கிறது.
  இது எல்லா அணிகளுக்கும் பொதுவானதுதான் என்றாலும், கேப்டன்கள் அனைவரும் பதவிக்கு வந்ததும் ஃபார்மை பறிகொடுப்பதும், பதவிபோன பிறகு நன்றாக ஆடி தொடர்ந்து அணியில் நீடித்திருப்பதும் இந்திய அணியின் பிரத்யேக அடையாளம். சமீபகால கேப்டன்களில் டெண்டுல்கர் தவிர வேறு யாருக்கும் பதவி போன பிறகு உரிய மரியாதை தரப்படவில்லை.
  இப்போதைய நிலையில், காகத்தின் வாயிலிருக்கும் வடையைப் பறிப்பதற்குரிய இன்னொரு தருணம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. வடையைத் தக்கவைத்துக் கொள்வது காகத்தின் சாமர்த்தியம்.

பலவீனமாகும் ரயில் பாதுகாப்பு!

சில நாள்களுக்கு முன்பு மதுரா அருகே நின்று கொண்டிருந்த மேவார் எக்ஸ்பிரஸ் மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதி 22 பேர் பலியானார்கள்.

  இந்தக் கோரச் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், மும்பையில் கல்யாணை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மீது மேம்பால கான்கிரீட் இடிந்து விழுந்து 3 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. இன்னொருபுறம், கோல்கத்தாவில் ஒரு ரயிலையே மாவோயிஸ்டுகள் கடத்தியிருக்கின்றனர்.

  இதில் மூன்றாவது சம்பவம், சிக்கல்கள் நிறைந்த பல்வேறு அரசியல், சமூகப் பின்னணிகளைக் கொண்டது. ஆனால், முதல் இரு சம்பவங்களுக்கும் ரயில்வே நிர்வாகமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இப்போது நடந்துவரும் சம்பவங்களைப் பார்த்தால், யாரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.

  மதுரா விபத்துக்கு இருவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிவப்பு சிக்னலைக் கடக்கும்போது டிரைவர் கவனக்குறைவாக இருந்ததுதான் முக்கியக் காரணமாக ரயில்வே தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், சிக்னல் குறைபாடும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ரயில்வே அமைச்சரே மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

   இந்த இரு காரணங்களில் எது சரியாக இருந்தாலும், ரயில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

  எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட பிறகும், ஒரு சிறு கவனக்குறைவுகூட பெரும் விபத்தை ஏற்படுத்தும் அளவுக்குத்தான் ரயில் பாதுகாப்பு இருக்கிறது. ஒரு மனிதத் தவறு, அதுவும் சிறு கவனக்குறைவு கூட பலரைப் பலிவாங்கும் விபத்துக்குக் காரணமாக அமைந்துவிடுவது வேதனையளிக்கும் விஷயம்.

  மனிதத் தவறுகளை முழுமையாகத் தவிர்த்துவிட முடியாது என்பது உண்மைதான். அதேநேரத்தில், மனிதத் தவறுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

  ரயில்வேயில் இப்போது டிரைவர்களுக்கு "ஓவர்டைம்' எனப்படும் கூடுதல் பணிநேரம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. இந்த முறைப்படி பணிநேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் ரயிலை இயக்குவோருக்கு பணப் பயனும், வேறு சலுகைகளும் கிடைக்கும்.

  அதேபோல் ஓய்வு நேரத்தில் பணி வழங்கப்பட்டாலும் இதுபோன்ற சலுகைகளும், கூடுதல் ஓய்வும் கிடைக்கும். அதாவது சலுகைகளைக் காட்டி, டிரைவர்களைக் கூடுதல் நேரம் பணியாற்ற வைக்கிறது ரயில்வே. இந்த முறைதான் டிரைவர்களின் கவனக்குறைவுக்கும், பெரும்பாலான ரயில் விபத்துகளுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன என ஒருசாரார் கூறுகின்றனர்.

  ரயில்வேயில் பாதுகாப்புக்கென புதிய ஊழியர்களைத் தேர்வு செய்வதும், டிரைவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, "ஓவர்டைம்' முறையை முடிவுக்குக் கொண்டு வருவதும் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.

  நிதீஷ் குமார் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில் பாதுகாப்புக்கென பத்தாண்டுத் திட்டம் (2003-2013) வகுக்கப்பட்டது. ரயில் என்ஜின் கேபின்களை நவீனப்படுத்துவது, ரயில்கள் மோதுவதைத் தவிர்க்கும் கருவிகளைப் பயன்படுத்துவது, சிக்னல்களை மேம்படுத்துவது ஆகியவை அதில் கூறப்பட்டிருந்தன. ஆனால் இன்றளவும் இவைகளெல்லாம் ஆங்காங்கே பயன்படுத்தப்படுகின்றனவேயன்றி முழுவீச்சிலான செயல்பாட்டுக்கு வரவில்லை.

  விபத்துகள் நடப்பது ஒருபுறமிருக்க மீட்புப் பணிகளிலும் ரயில்வே நிர்வாகம் சுணக்கம் காட்டுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்தவகையில் மும்பையில் நடந்த விபத்து ரயில்வே வரலாற்றில் புதிய கறையை ஏற்படுத்தியிருக்கிறது.

  இந்த விபத்தின்போது, மேம்பால கான்கிரீட் இடிந்து விழப்போவது தெரிந்ததும், அவசர பிரேக்கை டிரைவர் பயன்படுத்தியிருக்கிறார். இதனால், பாலத்தின் இடிபாடுகள் எஞ்சின் மீதே விழுந்து அவரை நசுக்கிவிட்டன. பலரது உயிரைக் காப்பாற்றிய அவரது உயிர் சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பிரிந்திருக்கிறது.

  எஞ்சினில் சிக்கியிருந்த டிரைவரை மீட்பதற்கு உரிய உபகரணங்கள் இல்லை என்பதும், இருந்த ஒன்றிரண்டு உபகரணங்களும் சரியாகச் செயல்படும் நிலையில் இல்லை என்பதும் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களாக இருக்கின்றன. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களைக்கூட அரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு, ஆம்புலன்ஸ் வசதிகள் பெருகியிருக்கின்றன.

   இவற்றுக்கெல்லாம் ஒருங்கிணைப்பு வசதிகள்கூட கிடையாது. இருந்தாலும் தகவல் கிடைத்தும் மீட்புப் பணிகளில் இறங்கிவிடுகிறார்கள். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

  ஆனால், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பான ரயில்வேயில், விபத்து நடந்த சில மணி நேரத்துக்குப் பிறகுதான் மருத்துவக் குழு சென்றிருக்கிறது. அதுவும் தனது ஊழியரே விபத்தில் சிக்கியிருந்தபோதும் அவரைக் காப்பாற்ற ரயில்வேயால் இயலவில்லை. எவ்வளவு பெரிய பலவீனம் இது.

  இந்த இரு விபத்துகளும் ஒப்பீட்டளவில் சிறியவைதான். எனினும், இவை நடந்த விதங்கள் மிகவும் அபாயகரமானவை. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகாவது ரயில் விபத்துகளுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய அரசு முற்பட வேண்டும்.

இலங்கைப் போரும் ஐஎம்எஃப் நிதியும்

இலங்கையில் ஆயுதச் சப்தம் ஓய்ந்து போனதை கொழும்பு பங்குச் சந்தை கொண்டாடியது. பங்குகளின் விலைகள் அசுர வேகத்தில் உயர்ந்தன. டாலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வலுவடைந்தது. இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது. அது சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) சுமார் ரூ. 10,000 கோடி உதவி. அது மட்டும் கிடைத்துவிட்டால், போர் முடிவுக்கு வந்ததன் முழுப் பலனையும் இலங்கை அரசு அடைந்துவிடும்.
  ஆனால், இந்த நிதியை இலங்கை பெறுவதில் சிலர் தடையாக இருக்கின்றனர். அதில் ஒருவர் ராபர்ட் பிளேக். இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக இருந்த இவரை, கடந்த ஏப்ரல் கடைசியில் தெற்காசிய நாடுகளுக்கான விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலராக ஒபாமா நியமித்தார். பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக, இலங்கைக்கு எந்தவிதமான நிதியுதவியும் இப்போதைக்குத் தரக்கூடாது என ஹிலாரிக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையை படித்த ஹிலாரி, "இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதியுதவி வழங்குவதற்கான சூழல் இப்போது இல்லை' என கடந்த 14-ம் தேதி அறிவித்தார். பெரும் பங்காளியான அமெரிக்காவின் அனுமதியில்லாமல் ஐஎம்எஃப் யாருக்கும் நிதியுதவி செய்ய முடியாது.
  இலங்கையில் போர் நடப்பதையோ அல்லது முடிவுக்கு வருவதையோ அமெரிக்கா கொஞ்சம் கூட சட்டைசெய்யவே இல்லை என்பதுதான் உண்மை. புவியியில் அமைவிட ரீதியாக பெரிய முக்கியத்துவமும் இல்லாததும், போர் வேறு எந்த நாட்டுக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுமே இதற்குக் காரணம். அதனால், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டதை இலங்கையில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது. உலகம் எங்கும் இருக்கும் தமிழ் ஆதரவாளர்களும், பிளேக் போன்றோரும்தான் இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதி கிடைப்பதில் தடை ஏற்பட்டதற்குக் காரணம். இந்தப் பட்டியலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடமுண்டு.
  ஹிலாரியின் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாளில் ஐஎம்எஃப் இயக்குநர்களுக்கு மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வராத வரையில் அந்த நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தது. போரால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கான திட்டங்களை முன்வைப்பதுடன், சர்வதேச ஊடகங்களையும் தொண்டு நிறுவனங்களையும் போர்ப் பகுதிக்குள் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
  போர் உச்சகட்டத்தை எட்டியதாக அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது. இலங்கை போர் நடத்தியே மொத்தப் பணமும் கரைந்துபோன சூழலில், ஐஎம்எஃப் நிதியுதவியைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பணமும் கிடைக்கவில்லை என்பது, அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
  அந்த நேரத்தில், நார்வேக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அந்நாட்டு, வெளியுறவுத் துறை அமைச்சரும் இலங்கை அமைதிப் பேச்சுகளில் ஈடுபட்டவருமான எரிக் சோலேம் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். பத்திரிகை சுதந்திரம், போர் நிறுத்தம் பற்றி அவர் கூறிய கருத்துகள் இலங்கை அரசை எரிச்சலடைய வைத்தன. ராஜபட்ச மீது போர்க்குற்றம் சுமத்தவும் அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
  இப்படியொரு இக்கட்டான சூழலில்தான் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக ராஜபட்ச அறிவித்தார். பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் அனைத்துத் தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்தது.
  இலங்கை அரசு வெற்றிச் செய்தியை அறிவித்த ஓரிரு நாள்களிலேயே அதற்கு பெரியதொரு அதிர்ச்சி காத்திருந்தது. கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத, முதலீட்டுக்கு லாயக்கில்லாத நாடுகளுக்கான பட்டியயில் இலங்கை இருப்பதாக எஸ் அண்ட் பி என்ற சர்வதேச கடன்களைப் பொருத்து நாடுகளுக்குத் தரவரிசை வழங்கும் நிறுவனம் அறிவித்தது. நாட்டின் மொத்த வருவாயில் 81% கடன்கள் மூலம் திரட்டப்படுவதையும், அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்துவிட்டதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. வரிகள் மூலம் சொற்ப வருமானமே வருவதாலும், ஏற்றுமதி குறைந்துவிட்டதாலும், இந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமார் ரூ. 5,000 கோடி தவணையைக்கூட இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
  ஐஎம்எஃப் நிதியுதவி உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்றால், இலங்கை அரசு திவால் ஆகும் நிலையில் இருப்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பிளேக், ஹிலாரி போன்றோரை சாடியது போல, எஸ் அண்ட் பி நிறுவனத்தையும் சிங்கள ஊடகங்கள் திட்டியிருக்கின்றன. ஆனால், ஐஎம்ஃப் கடனுக்காக ஆர்வமாகக் காத்திருப்பதிலிருந்தே இலங்கையின் பொருளாதார நிலை வெளிப்படையாகத் தெரிகிறது.
  தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. வடக்குப் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என ஐஎம்எஃப்பிடம் இலங்கை உறுதியளித்திருக்கிறது. ஆனால், கடன் கிடைத்தால் போதும் என்பதற்காக அளிக்கப்பட உறுதிமொழியாக மட்டுமே இது இருக்கக்கூடும்.
  ஏனெனில், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அவசரமாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் பொருளாதார நெருக்கடிதான். ஆனால், சண்டையில் இப்போதைக்கு ராணுவம் வெற்றி பெற்றிருக்கலாம், போர் முடியவில்லை.

திருந்தட்டும் பன்னாட்டு நிறுவனங்கள்!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் ஒன்றுதான் குறி. தங்களுக்கென்று தனியாக ஒரு சட்டத்தையும் நியாயத்தையும் வகுத்துக்கொண்டு, வளரும் நாடுகளை முடிந்த அளவுக்குச் சுரண்டுவார்கள். சுற்றுச்சூழலோ மனித உரிமைகளோ அவர்களுக்கு முக்கியமேயில்லை. அரசியல்வாதிகளையும் அரசையும் சரிக்கட்டிவிட்டு, எந்த இடத்திலும் எதை வேண்டுமானாலும் தயாரிப்பார்கள்.

வெளியேற்றப்படும் மக்களுக்கு நஷ்டஈடு என்ற பெயரில் சொற்பமாகத் தருவார்கள். அரசாங்கமே முன்னின்று நடத்தும் இந்தச் செயல்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது. பயங்கரவாதமும் வன்முறையும் எந்த வகையிலும் நியாயமே இல்லை என்கிற வாதம் இந்தச் சூழலில்தான் எடுபடாமல் போகிறது.

வெளிநாட்டினரைக் கடத்திப்போய் பணம் கேட்டு மிரட்டுவதுதான் நைஜீரியர்களுக்குத் தொழில் என்பதுபோல் இப்போது சித்திரிக்கப்படுகிறது. உண்மையில் அந்நியர் ஆதிக்கத்தின் கீழும் அதற்குப் பிறகும் நைஜீரியா வளம் கொழிக்கும் நாடாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் யாரையும் கடத்த வேண்டிய அவசியம் நைஜீரியர்களுக்கு இருந்ததில்லை. அந்த நாட்டில் எண்ணெய் வளங்கள் இருக்கும் என்பது கண்டறியப்படாத காலத்திலேயே மக்கள் வசதியாக வாழ்ந்தனர். 1958-ல் எண்ணெயைத் தோண்டுகிறோம் என்று கூறிக்கொண்டு ஷெல் நிறுவனம் நைஜர் டெல்டா பகுதிக்குள் நுழைந்த பிறகுதான் பிரச்னை தொடங்கியது.

விவசாயத்துக்குத் தக்க பருவநிலையும், நீராதாரங்களும் நிறைந்திருந்த நிலப் பகுதிகளை ஷெல் ஆக்கிரமித்துக் கொண்டது. எண்ணெயைத் தோண்டி எடுப்பதற்காக போடப்பட்ட பெரிய ஆழ்துளைகள், நிலத்தடியில் நன்னீரையும் உப்புநீரையும் கலக்கச் செய்ததால் குடிநீருக்குக்கூட பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு வழியாக விவசாயம் அழிந்தது. எண்ணெய் வளமே பிரதானமானது. சரி, எண்ணெய் நிறுவனத்திலாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றால், உள்ளூர் மக்களைச் சேர்ப்பதில்லை என்பதில் ஷெல் பிடிவாதமாக இருந்தது. எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜனநாயகம் இருந்தாலும் ராணுவ ஆட்சி நடந்தாலும் அரசை மட்டும் "கவனித்தால்' போதும் என்கிற உத்தியை ஷெல் பயன்படுத்தி வந்தது.

1990-களில் பிரச்னை உச்சகட்டத்தை அடைந்தது. அமைதி வழியில் போராடுவதற்காக தங்களுக்கென்று வாழ்வாதார இயக்கம் என்கிற ஓர் அமைப்பை டெல்டா பகுதியில் வசிக்கும் ஓகோனி இன மக்கள் ஏற்படுத்தினர். இந்த இயக்கத்தின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறை கையாளப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் எண்ணெய் நிறுவனத்துக்காக 30 கிராமங்களை நைஜீரிய ராணுவம் தரைமட்டமாக்கியது. வன்முறையைத் தூண்டியதாக 9 ஓகோனி இனத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களுள் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் கென் சரோ-விவாவும் ஒருவர். அரசின் விசாரணையில் அவர்கள் ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சரோ சொன்னார், "ஷெல் நிறுவனம் ஓகோனி மக்களுக்குச் செய்த கொடுமைகளும், மோசடிகளும் ஒருநாள் உலகத்துக்குத் தெரியவரும்'. ஒரு சமாதான இயக்கம் வன்முறைப் பாதைக்குத் திரும்பிய கதை இது.

போராட்டம் இரண்டு வழியாகப் பிரிந்தது. ஒன்று ஜனநாயக வழி. மற்றொன்று நக்சல் பாதை. பிற போராட்டங்களைப் போல, இரண்டு பிரிவினரும் சண்டையிட்டுக் கொள்வதில்லை. போராட்டத்துக்கு ஜனநாயக வழியில் நிதி திரட்டப்படுவதைவிட, ஆயுதம் தாங்கியவர்கள் மூலம் அதிகமான பணம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு ஜனநாயக வழியிலான மிகப்பெரிய வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. 9 ஓகோனிய தலைவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓகோனியர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. வழக்கை சுமுகமாக முடித்துக் கொள்வதற்காக கொல்லப்பட்ட தலைவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 75 கோடி தர ஷெல் நிறுவனம் முன் வந்திருக்கிறது. இதன் மூலம் 1990-களில் ராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து சதி செய்தது, சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, பிரச்னையை அடக்கி வாசிப்பதற்காக முக்கிய ஊடகங்களை விலைக்கு வாங்கியது போன்ற ஷெல் நிறுவனத்தின் மோசடிகள் அம்பலமாகியிருக்கின்றன.

ஓகோனியர்களின் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி ஒட்டுமொத்தமாக டெல்டாபகுதி நைஜீரியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. எனினும் இந்த இழப்பீடு மட்டுமே நைஜீரிய கடத்தல்களையும் வன்முறைப் போராட்டங்களையும் நிறுத்திவிடப் போவதில்லை. ஓகோனியர்களைப் போல செவ்ரான் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இலேஜா இன மக்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதனால், ஜனநாயக வழியில் போராடுவது மட்டுமே தீர்வாகாது என்றே நைஜீரியர்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எண்ணெய் வருவாயில் ஒரு பகுதியை டெல்டா பகுதியை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது, எண்ணெய் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு இழப்பீடு தருவது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ராணுவ ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலர்ந்த பிறகும்கூட வன்முறைகளும் கடத்தல்களும் குழாய் உடைப்புகளும் முடிவுக்கு வராததற்குஇவைதான் காரணங்கள். ஓகோனி பிரசாரப் பாடல் ஒன்றில் சொல்லப்பட்டது போல, "நம்மை இனியும் உலகம் ஏமாற்ற முடியாது' என்பதை நைஜீரியர்கள் உணர்ந்து விட்டார்கள். புரிந்துகொள்ள வேண்டியது பன்னாட்டு நிறுவனங்களும் அரசும்தான்.

இந்தியா என்கிற பட்டினி தேசம்

பஞ்சமும் பட்டினியும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புதிதல்ல. வீங்கிய தலைகளும் ஒட்டிய வயிறுகளும்தான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் அடையாளம். மழை பொய்த்துப் போவதும், அறுவடை குறைவதும், அதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதும் இங்கு சகஜம். அந்த வகையில் இப்போது, சோமாலியாவைச் சுற்றிய ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சோமாலியா தவிர, எரித்திரியா, கென்யா, டிபெüடி, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இதில் அடக்கம்.
  இங்கெல்லாம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக கடந்த சில மாதங்களாகவே ஐ.நா. எச்சரித்து வந்தது. இப்போது அந்த நிலை வந்தேவிட்டது. சுமார் 1.4 கோடி பேர் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கர்ப்பிணிகளும் குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற சூடான் வழியாகவும், சோமாலியத் துறைமுகம் வழியாகவும் கூடுதலாக உணவை அனுப்ப ஐ.நா. முயன்று வருகிறது.
  உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மழை பொய்த்துப் போவது மட்டுமே காரணமல்ல. அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும் கொள்கைகளும்கூட பஞ்சம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக எத்தியோப்பியாவில் சில இடங்களில்தான் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ஓரளவு மழை பெய்திருந்தும்கூட அறுவடை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் அரசின் கொள்கை.
  ஆப்பிரிக்க உணவுத்தட்டுப்பாடு குறித்து எச்சரித்த ஐ.நா.வின் அதே அமைப்பானது, இந்தியாவிலும் ஒரு தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் எடை குறைவாக, ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. அதிலும், 18-வயதுக்கு உள்பட்டோரில் 50 சதவீதம் பேருக்கு போதுமான ஊட்டச்சத்துக் கிடைக்கவில்லை என அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது.
  ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும், இந்தியர்கள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் விவசாய உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லை.
  மழைநீரைச் சேமிக்கும் குளங்களும் ஏரிகளும் அணைக்கட்டுகளும்கூட குறைவு. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு வலுவான பொருளாதாரக் கட்டமைப்பும் இல்லை.
  ஆனால், இந்தியாவில் வறட்சி காரணமாக விவசாய உற்பத்தி குறைந்தாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டைப் போக்கும் அளவுக்கு பொருளாதார வலு இருக்கிறது.
  அப்படியிருந்தும் ஒருபகுதி மக்கள் ஊட்டச் சத்து இல்லாமல் வாழ்கிறார்கள் என்றால், உணவுப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்காததுதான் காரணம்.
  நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லையென்றாலும்கூட, அடித்தட்டு மக்களால் அணுக முடியாத அளவுக்கு விலைவாசி இருந்தால் ஊட்டச்சத்துக் குறைவும் பட்டினியும் இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.
  பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அந்த நிலையை மாற்ற இந்திய அரசும், மாநில அரசுகள் முயன்று வருகின்றன. ஆனாலும், எல்லா வகையான உணவுப் பொருள்களும் தேவையான அளவுக்குக் கிடைக்கும் வகையில் அந்தத் திட்டம் இன்னும் தீவிரமாக்கப்படவில்லை. வருங்காலத்தில்கூட அது சாத்தியமா என்கிற கேள்வியும் இருக்கிறது.
  பட்டினியால் இறப்பவர்கள் பற்றி இந்தியாவில் இப்போது தகவல் இல்லை. ஆனால், பெரும்பாலான மரணங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக இருக்கிறது. இதுவும் பசி, பட்டினியின் இன்னொரு முகம்தான்.
  இதைத் தவிர்க்க வேண்டுமானால், நமது புதிய பொருளாதாரக் கொள்கையில் சிக்கி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்.
  எல்லா உணவுப் பொருள்களின் விலையும் வெளிச்சந்தையில் விண்ணை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும்போது, பொதுவிநியோகம் குறைந்த விலையில் ஒன்றிரண்டு பொருள்களை மட்டும் தருவது பெரிய பயனைத் தராது. இதற்குப் பதிலாக, மலிவான விலையில் நிறைய உணவுப் பொருள்களை போதுமான அளவுக்குக் கொடுக்கலாம்.
  அனைவருக்குமே தரமான உணவு கிடைக்காதவரை இந்தியாவும் ஒரு பட்டினி தேசம்தான். நாட்டில் ஒரு கூட்டம் எலும்பும் தோலுமாகப் பசித்திருக்க, விண்ணில் சந்திரயானை ஏவுவதாலும், அணுகுண்டுகளை வெடிப்பதாலும் மட்டும் நாம் வல்லரசாகிவிட முடியாது. பட்டினி தேசங்களுக்கு சந்திரயானையும் அணுகுண்டுகளையும் விட முதன்மையான தேவை உணவுதான்.