Wednesday, November 08, 2006

மியான்மரில் மனித உரிமை மீறல்கள்

மியான்மரின் மனித உரிமை மீறல்கள்
உலகில் மிக அதிக அளவில் மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் நமது அண்டை நாடான மியான்மரும் ஒன்று. 1962ல் ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து ஆண்டுகளாக பொது மக்களையும் ஜனநாயக சக்திகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதிலேயே அந்த நாட்டின் ராணுவ அரசு தீவிரம் காட்டி வருகிறது.
1962ல் இருந்து ராணுவ வழிகாட்டலின்படி பர்மா பொதுவுடைமை திட்டக் கட்சி 26 வருடங்கள் ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒருமுறை கூட சுதந்திரமாக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் மட்டுமில்லாமல் தனி மனிதனின் கருத்து சுதந்திரம் கூட இல்லாமல் நசுக்கப்பட்டது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ராணுவ ஆட்சிக்கு, எதிராக கிளர்ந்து எழுந்த சில புரட்சி இயக்கங்களும் மாணவ அமைப்புகளும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. இராணுவ அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். நாட்டில் பாரம்பரியம் மிக்க சமூக அமைப்பினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசுக்கு எதிராக கொரில்லாப் போர் முறையை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இவை எதுவுமே ராணுவ ஆதரவு அரசின் கொள்கைப் போக்கை மாற்றப் பயன்படவில்லை.
1988ம் ஆண்டின் மத்தியில் மியான்மர் முழுவதிலும் ஏற்பட்ட உணவுப் பொருள் பற்றாக்குறையின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இந்த காலகட்டத்தில் 8.8.88ல், ரங்கூன் நகரில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கோஷங்களாக எழுப்பிய படி ஆயிரக்கணக்கான மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சென்ற மிகப்பிரமாண்டமான ஊர்வலத்தை நோக்கி போலீஸ் சரமாரியாக சுட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். அதன் பின்னரும் பல கிராமங்களும் நகரங்களும் மக்களே வசிக்க முடியாத அளவுக்கு தரைமட்டமாக்கப்பட்டதாக உலக மனித உரிமைக் கழகம் கூறுகிறது. இந்தத் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையோ அல்லது சேதம் பற்றிய சரியான விபரமோ இன்றளவிலும் வெளி உலகிற்கு தெரியாது. 1989ல் உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக 485 உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல்கள் நடத்த ராணுவ அரசு சம்மதித்தது. தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நேரத்திலும் கூட ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றி சித்திரவதை செய்யப்பட்டார்கள். பல அரசியல் தலைவர்கள் மோசமான நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தலில், மியான்மரின் மிகப் பிரபலமான அரசியல் தலைவரான ஆங் சான் சூ கீ தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சிக்கும் ராணுவ ஆதரவோடு செயல்பட்ட தேசிய ஒருமைப்பாடு ஆட்சிக்கும், சில சமூகக் கட்சிகளின் கூட்டணிக்கும் மும்முனைப்போட்டி இருந்தது. தேர்தலில் ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக கட்சி மொத்தமுள்ள 485 இடங்களில் 392 இடங்களைக் கைப்பற்றியது. சிறு கட்சிகள் 65 இடங்களைக் கைப்பற்றியது. இராணுவ ஆதரவு தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வெறும் பத்து இடங்களைத்தான் கைப்பற்றியது.
மிக மோசமாகத் தோல்வியடைந்த பிறகும் ராணுவ அதிகாரிகள் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தேர்தல் விதிமுறைகளையே மாற்றியமைத்தனர். அதாவது தேர்தல்கள் நடைபெற்றது. பாராளுமன்றத்திற்கு அல்ல எனவும், அரசியல் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான ஒரு குழுவை தேர்ந்தெடுக்கவே தேர்தல்கள் நடத்தப்பட்டன எனவும் கூறினர்.
இதன் பிறகு, ஆங் சான் சூ கியின் ஆதரவாளர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். இதன் காரணமாக சூ கியின் ஆட்சியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் விலகினர். 1995 வரை சூ கியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டடிருந்தார். சூ கீ 1995ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றதனால் வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் 2001ல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இன்று வரையிலும் அவரைக் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக ஓர் மிக மோசமான மனித உரிமை மீறல் நடந்து வருகிறது.
மேலும் மியான்மர் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தலைமையினால் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் சோதனை செய்யப்படாமலேயே இருக்கின்றன. இதனால் மிக அதிக அளவில் எய்ட்ஸ் போன்ற நோய் தாக்கப்பட்டோர் அங்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ராணுவ அரசின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக இடம் பெயர்ந்தோர் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பாமலேயே நாடோடிகளாக அலைகின்றனர். சில சமூகத்தினர் மீது நிலம் வாங்க முடியாதபடி தடைச்சட்டம் அமுலில் இருப்பதால் சொந்தமாக வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அங்கு மிக அதிகமாக இருக்கிறது. சிறு கூலியைப் பெற்றுக்கொண்டு மிக அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அங்குள்ள தொழிலாளர்கள் உள்ளனர். இவற்றிற்கெல்லாம் மேலாக மியான்மர் ராணுவத்தில் குழந்தைகளும் சேர்க்கப்படுகிறார்கள் என்ற உண்மையே, அங்கு எவ்வளவு தூரம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
ஐந்து கோடி மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டிற்கு ஐந்து லட்சம் ராணுவ வீரர்கள் தேவையா என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது. ராணுவத்தினரால் செய்யப்படும் பாலியல் பலாத்காரங்களால் மியான்மர் முழுவதிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது. எனவே இப்பிரச்சனை மியான்மரின் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அரசியல் நெருக்கடி, மக்களின் இடம்பெயர்வு, எய்ட்ஸ் பரவுதல் போன்ற உலகளாவிய பிரச்சனையும் கூட.
இவ்வளவு மனித உரிமை மீறல்களையும் செய்கின்ற ஓர் அரசு எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆட்சியில் இருப்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார உதவிகள் ஓர் முக்கியமான காரணமாகும். அதிலும் குறிப்பாக சீனாவும், இந்தியாவும் செய்து வரும் நிபந்தனையற்ற உதவிகளால் தான் மியான்மரின் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்ற கருத்து உலக நாடுகளிடையே உள்ளது.
உலக நாடுகளின் தலையீட்டால் மியான்மரின் மனித உரிமை மீறல் பிரச்சனை முதன் முறையாக ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் விவாதத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு சபையில் பிலிப்பைன்ஸ் தவிர எந்த நாடும் மியான்மர் அரசுக்கு ஆதரவாக இருக்காது என்று கருதப்படுகிறது. ஒரு வேளை சீனா மியான்மர் அரசை ஆதரித்தால் அது உலக நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆசியாவில் தன்னை ஒரு சிறந்த சக்தியாகக் காட்டி கொள்ள நினைக்கும் சீனா, மியான்மருக்கு ஆதரவளிக்காது எனவும் கூறப்படுகிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை மியான்மர் பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நிச்சயமாக மியான்மரின் ராணுவத் தலைமைக்கு எதிரானதாகவே அமையும் என நம்பப்படுகிறது.
மியான்மரில் ஜனநாயக நம்பிக்கை துளிர்த்திருக்கும் இந்த சூழலில், இந்தியக் குடியரசுத் தலைவர் கலாமின் மியான்மர் பயணம் அந்த நாட்டின் ராணுவத் தலைமைக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவது போன்ற தோற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஏற்கனவே மியான்மரின் ராணுவ அரசோடு இந்தியா பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. இவ்வளவு நெருக்கடியான நேரத்தில் மேலும் மூன்று ஒப்பந்தங்களில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டிருப்பது மியான்மர் மக்களுக்கு நன்மை பயக்கும் செயல் அல்ல. இந்தப் பயணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கும் படி குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்ட போதும் கூட அரசியல் நெருக்கடி காரணமாகவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் இந்தியாவிற்கும், மியான்மரின் ஆட்சியாளர்களுக்கும் நன்மையைத் தருகிறதோ இல்லையோ, மியான்மரின் ஜனநாயக தலைவர்களுக்கும், மக்களுக்கும் துரதிருஷ்டவசமானதுதான்.

No comments: