Wednesday, November 08, 2006

உலகை உலுக்கிய கார்ட்டூன்கள்

பிப்ரவரி 3ம் தேதி இரவு 10.30 மணியளவில், தென்னாப்பிரிக்காவின் ஜெகன்னஸ்பர்க் உயர்நீதிமன்றம் அவசர உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சிகளோ, சில குறிப்பிட்ட கார்ட்டூன்களை எந்த ஒரு வடிவத்திலும் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தென்னாப்பிரிக்க தேசிய பத்திரிக்கையாளர்கள் இந்த விஷயத்தில் நீதிமன்ற குறுக்கீட்டை எதிர்த்தாலும் தாங்கள் அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டனர். தற்போதைய சூழலில் அந்த கார்ட்டூன்களை வெளியிடுவது தேசப் பாதுகாப்பிற்கும், உள்நாட்டு அமைதிக்கும் ஊறுவிளைக்கும் செயல் என தென்னாப்பிரிக்கா தீர்மானித்து விட்டது. உலகின் எந்தப்பத்திரிக்கையும் தற்போது வெளியிட முன்வராத அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூன் முகமதுநபியை சித்தரித்து வரையப்பட்டதாகும். தங்களை வருத்தப்பட வைக்கும் ஒரு செயலுக்காக சட்டப+ர்வமான ஒரு தடையை வாங்கிய தென்னாப்பிரிக்க முஸ்லிம் அமைப்பும் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்த பத்திரிக்கைகளும் உண்மையில் அந்நாட்டிற்கு மிகப்பெரும் நன்மையை செய்துவிட்டன என்றே கருதலாம்.
கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜிலான்ட்ஸ் - போஸன் என்ற செய்தித்தாளில் முகமதுநபியை சித்தரித்து பன்னிரண்டு கார்ட்டூன்கள் வரையப்பட்டன. இதுவே இந்தப் பிரச்சனையின் தொடக்கம். தொடர்ந்து அந்தக் கார்ட்டூன்களில் சில ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும், நிய+சிலாந்திலும், ஜோர்டனிலும் சில பத்திரிக்கைகள் மறுப்பதிப்பு செய்யவே பிரச்சனை ப+தாகரமானது. உலகின் முஸ்லீம் நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன.
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் கார்ட்டூனை வெளியிட்ட செய்தித்தாளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டென்மார்க் அரசைக் கேட்டுக் கொண்டன. ஆனால் பத்திரிக்கை சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பதனால் டென்மார்க் அரசால் கார்ட்டூனை வெளியிட்ட ஜிலான்ட்ஸ் - போஸன் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. சவ+தி அரேபியா, குவைத் போன்ற அரபி பேசும் நாடுகளில் டென்மார்க் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன. இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ஐ.நா.வில் டென்மார்க் மேல் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டன. ஆனால் கார்ட்டூன் வெளியிட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவோ அல்லது மீண்டும் அதைப் பிரசுரம் செய்யாமல் தடுக்கவோ டென்மார்க்கின் அரசியல் சட்டத்தில் இடமில்லை எனக் கூறி டென்மார்க் அரசு எந்தவிதமான உத்திரவாதமும் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் சில முஸ்லிம் அமைப்புகள் டென்மார்க் தண்டனைச் சட்டம் பிரிவு 140 மற்றும் 266பி ஆகியவற்றின்படி ஜிலான்ட்ஸ் - போஸன் தண்டனைக்குரிய குற்றம் செய்திருப்பதாக டென்மார்க் போலிஸில் புகார் தெரிவித்திருக்கின்றன. பிரிவு 140ன் படி எவரையும் அவர் சார்ந்திருக்கும் மதம் சம்மந்தமான மறுக்க முடியாத கொள்கைகளை களங்கப்படுத்துவதன் மூலமாக மனம் வருந்தச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். பிரிவு 266பி-ன் படி எவரையும் அவரது மதம் சார்ந்து மிரட்டுவதும், மனம் வருந்தச் செய்வதும், மரியாதைக் குறைவாக நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை இறுதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி கார்ட்டூன்களை வெளியிட்டதனை குற்றம் என எடுத்துக் கொள்ள எந்தவித முகாந்திரமும் இல்லை என முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் கார்ட்டூன் வெளியிடப்பட்ட விவகாரத்தை குற்றம் எனத் தீர்மானிக்கும் போது பேச்சுரிமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறிவிட்டது.
டென்மார்க் 1849ல் ஜனநாயக நாடாக மாறியதிலிருந்து பேச்சுரிமை அதன் அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமையாக வழங்கப்பட்டு வருகிறது. இது வரையில் இந்த உரிமை எந்தக் காரணத்திற்காகவும் மறுக்கப்பட்டதில்லை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மட்டும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது. டென்மார்க் அரசியல் சட்டப்பிரிவு 77ன்படி எந்தக் குடிமகனும் தன்னுடைய கருத்துக்களை பதிப்பிக்கவோ, எழுதவோ அல்லது பேசவோ முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. தணிக்கையோ அல்லது வேறு எந்த தடுப்பு அளவுகோலோ இது வரையில் டென்மார்க்கில் நிறுவப்படவில்லை. 1938க்கு பிறகு டென்மார்க் அரசியல் சட்டம் பிரிவு 140, இது வரையில் பயன்படுத்தப்பட வில்லை. 1984ல் ஏசுகிறிஸ்துவை சித்தரித்து இரயில் நிலையங்களில் படங்கள் வரையப்பட்டன. 1992ல் ஏசு கிறிஸ்துவை தவறான தொடர்புடையவராக சித்தரித்து ஒரு திரைப்படம் வெளியானது. இவை எதுவுமே அங்கு தண்டனைக்குள்ளாக வில்லை என்பது தான் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்.
எப்படியிருப்பினும் உலகம் முழுவதிலிருக்கும் ஒரு மதத்தின் முக்கியமான நம்பிக்கையை கேலி செய்யும் விதமாக கார்ட்டூன்கள் வரையப்பட்டதால் இப்போது பிரச்சனை சட்டத்தின் எல்லைகளைத் தாண்டிவிட்டது. டென்மார்க் அரசு மற்றும் ஜிலான்டஸ் - போஸன் ஆகியவற்றின் நடவடிக்கையில் திருப்தியடையாத சில இஸ்லாம் அமைப்புகளின் போராட்டங்களின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இதுவரையில் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. பிப்ரவரி 4ம் தேதி சிரியாவில் இருக்கும் டென்மார்க் மற்றும் நார்வே நாட்டு தூதரகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டன. ஆப்கனிலும் ஏமனிலும் நடந்த வன்முறையில் சிலர் இறந்தனர். பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளுக்கான தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டன. டென்மார்க் பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் சில நாடுகள் அதிகாhரப்பூர்வமான தடைகளை விதித்திருக்கின்றன. ஈரான் இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே போய் டென்மார்க்குடன் கொண்டிருந்த எல்லா வர்த்தக உறவுகளையும் பிப்ரவரி 6 முதல் துண்டித்துக் கொள்வதாக அறிவித்து விட்டது.
சில முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்தையோ அல்லது முகமது நபியையோ நிந்தனை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதை சட்டமாகக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானில் இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே இஸ்லாமிய நாடுகள் மதத்தை அவதூறு செய்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுப்பதிலிருந்து தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் அந்நாடுகளின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பல கிறிஸ்துவ அடிப்படைவாத அமைப்புகள் நிறைந்த நாடுகளிலும் கூட மத நிந்தனைத் தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக நார்வே நாட்டில் மத நிந்தனைச் சட்டங்கள் தெளிவாக உள்ளன. இருப்பினும் கடைசியாக அச்சட்டம் 1933ல்தான் பயன்படுத்தப்பட்டது.
உலகின் பல இடங்களில் உள்ள முஸ்லிம்கள், கார்ட்டூன்களை வெளியிட்ட பத்திரிக்கைகளின் மேல் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கோபத்தை ஈமெயில் மூலமாகவோ, பத்திரிக்கைகள் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாக உலகிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் தங்களது எதிர்ப்பை மிகவும் சாத்வீகமான முறையில் தெரிவித்து வருகிறார்கள் என்பதுவும் பிரச்சனை தீர்வதற்காக முஸ்லீம் அல்லாதோருடன் கலந்து பேசி வருகிறார்கள் என்பதுவும் நம்பிக்கைய+ட்டும் செய்தியாகும். சில ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்கள,; சர்ச்சைக்குரிய அந்த கார்ட்டூன்களை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் எனவும், அவை மூலம் எழுப்பப்படும் பிரச்சனைகளை ஆரோக்யமான விவாதம் மூலமாக தீர்த்து தங்களது மதக் கருத்துக்கள் தூய்மையானவை என நிலைநிறுத்த வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
கார்ட்டூன் விவகாரம் எந்தச் சிக்கலும் இல்லாமல், சுமூகமாக முடிவதற்கு டென்மார்க் அரசும், பத்திரிக்கைகளும், இஸ்லாமிய பெரியோர்களும் தங்கள் நிலையிலிருந்து முழுமையான பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர வேண்டும். இங்கிலாந்தின் இஸ்லாமிய மதத் தலைவர், "கார்ட்டூன் விவகாரத்தில் எங்களுக்கு இருக்கும் கோபத்தை சட்டத்திற்கு உட்பட்டு வெளிப்படுத்துவோம்" என்று கூறுகிறார். அதுபோல அந்தந்த தேசங்களின் சட்டங்களை மதித்து நடத்தப்படும் போராட்டங்களே மதிப்பு மிக்கதாக கருதப்படும்.

No comments: