Wednesday, November 08, 2006

மலை போல் குவியும் மின்கழிவுகள்

நாம் பயன்படுத்த இயலாத அல்லது நமக்கு உபயோகமில்லாத பழைய மின்சாதனப் பொருட்கள் மின்கழிவுகள் எனலாம். இவற்றில் பல நச்சுத் தன்மையுடைய பாகங்கள் இருக்கின்றன என்பதனால் மற்ற பொருட்களைக் காட்டிலும் மின்கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது. எப்பொழுதெல்லாம் நமது மின்சாதனப் பொருட்களின் பாகங்கள் மாற்றப்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் மாற்றப்பட்ட பழைய பாகங்கள் எங்கே போகின்றன என்பதைப்பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. கம்ப்ய+ட்டர்கள், தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் மொபைல் போன்கள் போன்றவை மூலமாகவே மின்கழிவுகள் அதிகமாக உருவாகின்றன. மின்கழிவுகளில் ஒருபகுதி மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வளர்ந்த நாடுகளில் உருவாகும் மின்கழிவுகள் வளரும் நாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் வளரும் நாடுகளில் மின்கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட கம்ய+ட்டர்களும் அச்சுப் பொறிகளும் நைஜீரியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு சாரா அமைப்புகளுக்கும் நன்கொடையாகத் தரப்படுகின்றன. உண்மையில் இதன் உள்ளார்ந்த நோக்கம் என்னவெனில், அமெரிக்காவின் மின்கழிவுப் பொருட்களை வளரும் நாடுகளுக்கு அனுப்புவதுதான்.
உபயோகித்த பொருளை மீண்டும் மறுசுழற்சி முறையில் உபயோகிக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உண்மையான வேண்டுகோள். ஆனால் இதே காரணத்தைக் காட்டி வளாந்த நாடுகள் சட்டத்திற்குப் புறம்பாக தங்களது நாட்டு கழிவுகளை வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைத்து மிகப் பெரும் மோசடி செய்து வருகின்றன.
மின்கழிவுகளில் ஒரு பகுதி மறுசுழற்சிக்கு உகந்ததாக இருந்தாலும் பெரும்பகுதி நச்சுத்தன்மை மிக்கதாகவே உள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக புதிய மின்சாதனப் பொருட்களின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக மக்கள் பழைய சாதனங்களை சரி செய்து பயன்படுத்துவதைவிட புதிய பொருட்களை வாங்குவதையே விரும்புகின்றனர். இதனால் மின்கழிவுகள் அதிகமாகி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு தொழில்நுட்ப தீர்வுகள் இருந்த போதிலும் முறையான சட்டமோ, விழிப்புணர்வோ இல்லாததால் பிரச்சனையின் தன்மை வீரியமிக்கதாய் உள்ளது.
அமெரிக்காவில் உருவாகும் எண்பது சதவீத மின்கழிவுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தியாவில் பெங்களுர் பகுதியிலும் சீனாவில் கிய+ பகுதியிலும் மின்கழிவுகள் மறுசுழற்சி செய்து தரும் நிறுவனங்கள் உள்ளன. மறுசுழற்சி செய்ய இயலாத சில நச்சுத்தன்மை மிக்க பொருட்கள் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படுகிறது. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் காரீயம், பாதரசம், காட்மியம் போன்ற பொருட்கள் மிகவும் நச்சுத் தன்மையுடையனவாகும்.
மின்கழிவுகளை மறுசுழற்சி செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில், மின்சுற்று அட்டைகளில் நூற்றுக்கும் அதிகமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றில் சில பொருட்களை மட்டுமே மறுசுழற்சி செய்ய இயலும். பொதுவாக மின்சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் கூட ஹேலஜன்கள் பயன்படுத்தப்படுவதால் பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த இயலாது. மறுசுழற்சியாளர்கள், மின்சாதனங்களில் உள்ள சில மதிப்பு மிக்க தங்கம் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு சுற்றுச் சூழல் சீர்கேட்டைத் தரும் சில பொருட்களை குப்பையில் போடுகின்றனர்.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள சில மறுசுழற்சி செய்வோருக்கு இது வயிற்றுப் பிழைப்பாக இருப்பதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தைப் பற்றியோ அல்லது சுற்றுச்சூழலைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. தங்கம் போன்ற வலுவான உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்காக வீரியமிக்க அமிலங்களை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். காற்றோட்டமில்லாத சூழலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகமூடியோ கையுறைகளோ அணிந்து கொள்ளாமல் வேலை செய்வதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் வேதிப் பொருட்களால் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது.
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மறுசுழற்சி செய்யும் பகுதிகளுக்கு வரும் மின் கழிவுகள் பெரும்பாலும் "நன்கொடைகள்" என்ற பெயரிலோ அல்லது "மீண்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்கள்" என்ற பெயரிலோ வளர்ந்த நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும். இவற்றில் சில பொருட்கள் கப்பலில் வரும் வழியிலேயே சட்டவிரோதமாக நடுக்கடலில் கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இந்தியாவிலும், சீனாவிலும் பயன்படுத்த முடியாத மின்கழிவுகள் ஆறுகளிலும் நிலங்களிலும், கடலிலும் கொட்டப்படுகின்றன.
மறுசுழற்சி செய்தது போக மீதமுள்ள மின்கழிவுகளை தனது எல்லையோர நாடுகளில் கொட்டுவதாக சீனாவின் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டை இவ்வளவு காலமும் மறுத்து வந்த சீனா, தற்போது அதனை ஒப்புக் கொள்வதோடு மின்கழிவுகளை அப்புறப்படுத்த மாற்று வழி தேடுவதாகவும் அறிவித்துள்ளது.
சில நாடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை விற்பனை செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்பொருட்கள் பழுதடைந்தவுடன் தாங்களே திரும்ப எடுத்துக் கொள்ளவும் செய்கின்றன. 1991ல் சுவிட்சர்லாந்து குளிர்சாதனப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று முதன் முதலாக இந்த ஏற்பாட்டைச் செய்தது. அதன் பின்னர் ஐரோப்பியக் கூட்டமைப்பிலும், அமெரிக்காவிலும் உள்ள சில நிறுவனங்கள் இதனை செயல்படுத்தி வருகின்றன. மின்கழிவுகளை திரும்ப எடுத்துக் கொள்வதற்காக இந்நிறுவனங்கள் பொருட்களை விற்கும் போதே விலையோடு சேர்த்து கட்டணம் வசூலித்து விடுகின்றன. இந்த ஏற்பாடுகளையும் தாண்டி மின்கழிவுகள் அதிகமாகிப் போவதால் அவற்றை வளரும் நாடுகளில் கொட்டி விடுவதற்கு வளர்ந்த நாடுகள் பல வழிகளைப் பின்பற்றுகின்றன. இது போன்ற நச்சுத்தன்மை மிக்க கழிவுகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதை "பேசல் ஒப்பந்தம்" தடை செய்கிறது. 166 நாடுகள் இதில் கையெழுத்திட்டிருந்தாலும் அமெரிக்கா, இதனை உறுதிப்படுத்த வில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி மின் கழிவுகள் உட்பட எந்த ஒரு நச்சுக்கழிவுகளும் அண்டார்டிகா தவிர வேறெங்கும் ஏற்றுமதி செய்யப்படக்கூடாது. ஆனால் இந்த ஒப்பந்தம் கூட மற்ற கழிவுப் பொருட்களுக்கு சரியாக இருந்தாலும் மின் கழிவுகள் விஷயத்தில் இந்த ஒப்பந்தம் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், நவீன மயமாக்கல் என்ற பெயரில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நுழைந்துவிடும் பன்னாட்டு மென்பொருள், மின்சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உருவாகும் மின்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. கோடி கோடியாக பணம்; வருமானம் ஈட்டும் இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், கால் சென்டர்கள் போன்றவை ஒன்றிணைந்து கடந்த ஆண்டில் ஒரு சிறிய கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியதோடு இப்பிரச்சனையைக் கிடப்பில் போட்டுவிட்டன. கிரீன் பீஸ் போன்ற அரசுசாரா அமைப்புகள் இந்தியாவில் இருந்தபோதிலும் மின் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லாதது துரதிருஷ்டவசமானது. இதே நிலை நீடிக்குமானால் சில ஆண்டுகளில் இந்தியாவில் பெங்களுர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் நச்சுத்தன்மை மிகுந்த நகரங்களாக மாறிவிடும்.

No comments: