Wednesday, November 08, 2006

இடதுசாரிப் பாதையில் லத்தீன் அமெரிக்கா

தற்போது இருக்கும் லத்தீன் அமெரிக்கா முப்பது ஆண்டிற்கு முந்தைய காலத்தில் இருந்ததை விட மிகவும் வேறுபட்டதாகும். முன்புபோல் அல்லாமல் தற்போது தேர்தல் நடைமுறைகள் எல்லா நாடுகளிலுமே மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது எந்த ராணுவ அரசுமே பதவியில் இல்லை என்பதுதான் மாற்றத்திற்கான மிக முக்கியமான காரணமாகும். தேர்தல்கள் மிகவும் நடுநிலைமையுடன் நடைபெறுவது மட்டுமன்றி பத்திரிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் கூட தேர்தலில் வெற்றி பெறுகின்றன என்பதே இந்த மாற்றத்திற்கு சிறந்த சான்றாகும். இங்குள்ள சமுதாயச் சூழலும் முற்றிலுமாக மாறித்தான் போய்விட்டது. நகரமயமாக்கலும், அரசு சாரா அமைப்புகளின் வளர்ச்சியும், மொபைல்போன்கள், இணையம், டிவி சேனல்கள் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியும் லத்தீன் அமெரிக்காவின் சமூக மாற்றத்திற்கான காரணங்களாகும்.பொதுவுடமை எண்ணம் கொண்ட கம்ய+னிச சித்தாந்தவாதிகள் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவு பலம் பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு இல்லை.அர்ஜெண்டினா, பிரேசில், வெனிசுலா, உருகுவே போன்ற நாடுகளில் ஏற்கனவே இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளனர். தற்போது பொலிவியாவிலும், சிலியிலும் இடதுசாரி ஆட்சியாளர்கள் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மெக்ஸிகோவிலும் பெருவிலும் நடக்க இருக்கும் தேர்தலில் கூட இடதுசாரிகளுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிகளுக்கெல்லாம் முக்கிய காரணம் 21ம் நூற்றாண்டின் பொதுவுடமைவாதியாக வர்ணிக்கப்படும் வெனிசுலாவின் அதிபர் சாவேஸ் ஆவார். அவர் கிய+பாவின் பிடல் சாஸ்ரோவை விட பல நாடுகளில் மக்களின் செல்வாக்கு பெற்றவராக விளங்குகிறார். பொலிவியாவில் ஈவோ மாரல்ஸ் தலைமையில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றமே பொதுவுடமைக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். அதன் அமெரிக்க நாடுகளிலே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான பொலிவியாவிற்கு பொதுவுடமையின் மூலம் நல்ல வளர்ச்சி ஏற்படும் என கருதப்படுகிறது. இயற்கை எரிவாயு மூலமாக இந்நாடு தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்த வாய்ப்பு உள்ளது. சிலி நாட்டின் முதலாவது பெண் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மிஷல் பேக்லட் 1973ல் நடந்த ராணுவப் புரட்சியால் சித்திரவதை செய்யப்பட்டவர். மிகப்பெரும் போராளியான இவர் பொதுவுடமை தேசமாக சிலியை மாற்றுவதில் மிகுந்த ஆர்வமுடையவர். பெரு நாட்டின் பொதுத் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே பொலிவியாவின் தேர்தல் முடிவுகள் இந்த நாட்டின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும். இங்கு தேர்தல் முடிவுகள் இடதுசாரி கட்சிக்கு சாதகமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்ஸிகோவில் மே மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் வெனிசுலா அதிபர் சாவேஸ்-ன் பிரசார யுக்திகள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கத்தோலிக்க சர்ச்சும், ஏகாதிபத்தியவாதிகளும் இங்கு இடதுசாரிகளுடைய வெற்றியைத் தடுக்க போராடுகின்றனர். மிகவும் நெருக்கமான பந்தயத்தில் இடதுசாரிகள் வெற்றிபெற அதிகமான வாய்ப்பிருக்கிறது. தற்போது லூலா தலைமையில் இடதுசாரி ஆட்சி நடைபெற்று வரும் பிரேசில் அக்டோபர் மாதத்தில் தேர்தலைச் சந்திக்கிறது. லூலாவின் தொழிலாளர் கட்சி பல ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருக்கிறது. 2003 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்ற அதிருப்தியும் இக்கட்சி மீது உள்ளது. எனினும் மக்களின் ஆதரவு போதுமான அளவு இருப்பதால் மீண்டுமொரு 4 ஆண்டுகளுக்கு இக்கட்சியே இங்கும் ஆட்சி செய்யக் கூடும். வரும் அக்டோபரில் தேர்தல் நடக்க இருக்கும் ஈக்வடாரில் பணம் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். இடதுசாரியான ஒரு வேட்பாளரே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. வெனிசுலாவின் தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதில் சாவேஸ் வாக்காளர்களைச் சந்திக்கிறார். இவருக்கு மிகப்பெரும் செல்வாக்கு இருப்பதனால் ஏதாவது அதியம் நடந்தாலன்றி இவர் தேர்தலில் தோற்பார் என்பதை கற்பனை கூட செய்யக் முடியாது. மே 2006ல் தேர்தல் நடக்க இருக்கும் கொலம்பியாவில் மட்டுமே வலதுசாரி அதிபர் வர வாய்ப்பிருக்கிறது. இங்கு இடதுசாரிகள் புரட்சியாளர்களாக இருப்பதனால் அவர்களை அடக்க அமெரிக்க உதவியோடு அரசு போராடி வருகிறது. பொலிவியாவின் அதிபரும், வெனிசுலாவின் அதிபரும் இணைந்து தங்களது கொள்கைகளையும், திட்டங்களையும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பிரச்சாரம் செய்து இடதுசாரிகளுக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். இனி வரும் சில ஆண்டுகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதுமே இடதுசாரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது உறுதியாகி விட்டது. இந்த மாற்றம் உலக அளவில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக அமெரிக்கா சற்று எச்சரிக்கையுடனேயே நடந்து கொள்கிறது. சில நாடுகள், இடதுசாரிகளாக இருந்தாலும் கூட, அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளுக்கு அமெரிக்கா பலவிதமான கடனுதவிகளை அளிப்பதோடு, தடையிலா வர்த்தகமும் செய்கிறது. இந்த நாடுகள் இடதுசாரித் தலைவர்களைக் கொண்டிருந்தாலும் உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கின்றன. எனினும் பொலிவியாவும், வெனிசுலாவும் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. ஏற்கனவே கோகா பயிரிடுவது சட்டப+ர்வமாக்கப்படும் என அறிவித்து பொலிவியா தனது அமெரிக்க எதிர்ப்பை காட்டியது.ஆனால் தற்போது பதவியிலிருக்கும் அல்லது வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் எல்லா இடதுசாரி ஆட்சியாளர்களும் ஒரே மாதிரியான கொள்கைகளும் கோட்பாடுகளும் கொண்டவர்களாக கருத முடியாது. பிரேசிலிலும் அர்ஜெண்டினாவிலும் உள்ள இடதுசாரி ஆட்சியாளர்கள், சாவேஸ் போன்று மிகத் தீவிரமான பொதுவுடமைவாதிகளாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் செயல்படுகிறார்கள். புதிதாக பதவியேற்கும் இடதுசாரிகள் முதலில் சமாளிக்க வேண்டியது அமெரிக்க அரசின் நேரடி மற்றும் மறைமுகமான நெருக்கடிகளைத்தான். அது மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் பல பிரச்சனைகள் உள்ளன. சமூக கலவரங்களும், ஆள் கடத்தலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக பிரேசிலில் ஒரு நாளைக்கு 100 துப்பாக்கிச் சூடு இறப்புகள் நடக்கின்றன. போதை மருந்து கடத்தல் மிகப்பரவலாக நடைபெறுவது தேசங்களின் சமூக நலனைப் பாதி;க்கின்றன. பெண்ணுரிமை மறுக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையான 55 கோடியில் சுமார் 22 கோடி பேர் இன்னமும் வறுமையில் வாழ்கிறார்கள். மேலும் 10 கோடி பேர் தினமும் ஒரு டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் தனி நபர் வருமானம் தொடர்ந்து எந்த வித அதிகரிப்பும் இல்லாமல் நிலையாகவே இருந்து வருகிறது. உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வளர்ச்சி விகிதத்தில் இது மிகவும் குறைவானதாகும். வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமான அளவில் காணப்படும் பகுதியாக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஐ.நா.வின் 2005 வளர்ச்சி அறிக்கை கூறியுள்ளது. பிரேசிலின் சமூக ஏற்றத்தாழ்வுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். எண்ணை வளம் மிக்க வெனிசுலாவின் பெட்ரோலிய ஏற்றுமதியில் மிகப்பெருமளவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிய+பாவிற்கு குறைந்த விலையில் பெட்ரோலியம் விற்கப்படுகிறது. சாவேஸ் தனது செல்வாக்கையும், பொதுவுடமைக் கருத்துக்களையும் நிலைநிறுத்துவதற்காக பெட்ரோலிய ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் மிகப்பெருமளவு பணத்தை லத்தீன் அமெரிக்க நாடுகளில் செலவு செய்கிறார். எனினும் ஏகாதிபத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி லத்தீன் அமெரிக்கா முழுவதும் சிவப்புக்கொடி எவ்வளவு நாள் பறக்கும் என்பதை புதிய ஆட்சியாளர்களின் திறமையான ஆட்சி தான் முடிவு செய்யும்.

No comments: