Wednesday, November 08, 2006

ஈரானின் அணு ஆயுத உரிமை

"அணு சக்தி என்பது எங்களது தேசத்தின் கடைசி சொட்டு இரத்தம் வரை கலந்துவிட்ட உரிமை என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்." இது கடந்த டிசம்பரில் மக்களால் ஈரான் மிகவும் மதிக்கப்படக்கூடிய மதத் தலைவரான அகமது கடாமி தொழுகைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களின் முன்னிலையில் பேசியது. சர்வதேச அணுசக்தி அமைப்பும், ஐரோப்பிய நாடுகளும் ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சியை நிறுத்தி விடும்படி கூறியதற்காக ஈரான் தரப்பில் இருந்து வந்த பதில் தான் இது. 1967ல் இருந்து ஈரான் அணுசக்தி உலைகளை அமைத்து அதன் மூலமாக மின்சார தேவையை ப+ர்த்தி செய்து வருகிறது. 1968ல் அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எந்தவிதமான பிரச்சனைகளையும் சந்திக்காத ஈரானின் அணுசக்தி துறை 2002ம் ஆண்டு அணு சக்தியை அணு ஆயுதம் தயாரிப்பதற்காக பயன்படுத்துவதாக உலக நாடுகளால் சந்தேகிக்கப்பட்டது. ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவும் குற்றம் சாட்டியது. எனினும் ஈரானில் அணு ஆயுதங்கள் இருப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என பலவிதமான சோதனைகளுக்குப்பின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் நவம்பர் 2003ல் அறிவித்தது. ஆனால் ஒரு வருடம் கழித்து தனது நிலையை மாற்றி ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிப்பிற்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்தது. மேலும் அணு ஆயுத சோதனையாளர்கள் சில இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என ஈரான் மேல் குற்றம் சாட்டியது. 1968ல் இஸ்ரேலும் 1974ல் இந்தியாவும் 1998ல் பாகிஸ்தானும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அதனை மீறி அணு ஆயுதங்கள் தயாரித்தன. இதில் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை எந்த நாடும் பெரிய அளவில் எதிர்க்கவில்லை. நெல்சன் மண்டேலாவின் ஆட்சியில் தென்னாப்பிரிக்காவும் அணு ஆயுத நாடாக மாறியது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனையானது பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. ஏனெனில் அங்கு மிகவும் ரகசியத்தன்மை மிக்க ஆட்சி நடைபெறுகிறது. பாகிஸ்தானிடமிருக்கும் அணு ஆயுதங்கள் மிகவும் அபாயகரமானது. ஏனெனில், அங்கு ராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்போதடல்லாமல் அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாலிபான்களுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர்களாவர். தற்போது இதே போன்றதொரு கண்ணோட்டத்தில் தான் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சியும் விமர்சிக்கப்படுகிறது. ஈரான் தரப்பு வாதங்களை எடுத்துப் பார்த்தோமேயானால் சில காரணங்கள் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். 20 வருடங்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும் மக்கள் தொகைக்கு போதுமான அளவு அடிப்படை வசதிகள் செய்து தர அணுசக்தி மிகவும் அவசியமாகிறது. மேலும் ஈரானில் பெருமளவு கிடைக்கும் பெட்ரோலியம் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை விட அணுசக்தி மிக எளிதான ஒன்றாகும். அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தின் விதி 4ல் கூறப்பட்டுள்ளது போல நல்ல நோக்கங்களுக்காக அணுசக்தியை பயன்படுத்தலாம் என்பதையும் ஈரான் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் உண்மையில் ஈரானுக்கு அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என அமெரிக்கா கூறுகிறது. ஏனெனில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பது பெட்ரோலியத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதைக் காட்டிலும் மிகவும் செலவு அதிகமானதாகும். மேலும் இரசாயன ஆயுதங்கள் ஈரானில் அதிகமான அளவில் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஈரான் - ஈராக் போரின் போது ஈரான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது பின்னர் கண்டறியப்பட்டது. தற்போதும் கூட, உடம்பில் கொப்புளங்களை உருவாக்கக் கூடிய, இரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு செல்களை அழிக்கக் கூடிய, நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய பல வகையான இரசாயன ஆயுதங்கள் ஈரானிடம் உள்ளன. இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை சீனா ஈரானுக்கு வழங்குகிறது. ஈரானில் தயாராகும் இரசாயன ஆயுதங்கள் லிபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதட்டமான சூழ்நிலையால், ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சி மிக முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது. ஆகவேதான் உலக நாடுகள் பல, ஈரான் தனது அணு சக்தியை அணு ஆயுதங்கள் தயாரிப்பிலிருந்து தனித்து பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை கொடுக்கின்றன. ஏனெனில் ஈரானில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட வகையான அணுசக்தி உலைகள், மின்சாரம் தயாரிப்பிற்கும், அதே நேரத்தில் அணுஆயுதம் தயாரிப்பதற்கும் பயன்படுத்த முடியும். இதே போன்றதொரு யுக்தியைப் பயன்படுத்தித்தான் இந்தியா அணுஆயுதங்களைத் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் அணுஆயுத நாடாக மாறிவிட்டால் அது மேற்கத்திய நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும். அது மட்டுமில்லாமல் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும், ஒரு போரைத் துவக்குவதற்கு அதிக முகாந்திரம் உள்ள நாடு என ஈரான் கருதப்படுவதால் இஸ்ரேலை விட ஈரானின் அணு ஆயுதமே மத்திய கிழக்குப் பகுதியில் மிகப்பெரும் ஆபத்தாகும். ஈரானின் புதிய அதிபரான மக்மூத் அகமதின்ஜக், "இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழித்து விடுவோம் " என ஏற்கனவே மிரட்டியுள்ளார். ஈரானின் அணு ஆயுதப் பிரச்சனை ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டால் யுரேனியத்திற்கு செறிவ+ட்டும் பணியை முன்பை விட மிக அதிகமாக செய்யப்போவதாகவும் அவர் தற்போது கூறியுள்ளார். ஈரானின் ஆட்சியாளர்களின் பார்வையில் உலகத்திலுள்ள அணு ஆயுதங்கள் அனைத்துமே முஸ்லிம் தேசங்களுக்கு எதிராகவே ஒரு எச்சரிக்கும் கருவியாக பயன்பட்டு வருகிறது. எப்படி இருப்பினும் அணுஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படாதவரை மத்திய கிழக்கில் அமைதி திரும்புவது கேள்விக்குறிதான்.

No comments: