Monday, November 30, 2009

எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்


பள்ளிக்காலத்தில் ஒரே பெஞ்சை தேய்த்தவர்கள். பட்டாம்பூச்சிப் பருவத்தில் உறவு வலுவானது. எப்படியாவது இவரது நட்புக் கிடைத்துவிடாதா என பலர் ஏங்கியிருந்தபோது, என்னை மனதில் ஒட்டிக் கொண்டவர். என்னுடைய எல்லாப் பலவீனங்களையும் நேர்மறையாகப் புரிந்துகொண்ட முதல் மனிதர். வாழ்க்கையின் பிரச்னைகளை போகிறபோக்கில் சமாளிக்கத் தெரி்ந்தவர்.

சிவகாசி கல்லூரியில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எங்களிருவருக்கும் இடையேயிருந்த கடிதப் போக்குவரத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிலிர்த்துக் கொள்ளும். மனிதர்களை நோக்கிச் செல்லும் குணம் என்னுள் எழுந்ததற்கு பாலாவின் நட்பு முக்கியக் காரணம். 

திருமணத்துக்காக அவர் செய்த புரட்சியையும் துணிச்சலையும் எண்ணி நான் எப்போதும் அதிசயித்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் மனப்போக்கையே தனது திருமணத்தால் மாற்றிய பெருமை பாலாவுக்கு உண்டு. பூஜ்ஜியத்திலிருந்து கோடிகளை உருவாக்கும் நுணுக்கங்கள் இவருக்குத் தெரியும். சென்னை அண்ணா நகரை ஒட்டிய பகுதிகளில் ஐ.ஏ.எஸ். பயிற்சிபெறுபவர்கள் யாரும் இவரைத் தெரியாது எனச் சொல்ல முடியாது.

ஒரே மாதத்தில் 30 இரண்டாம் ஆட்டங்கள், வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட், பெங்களூர் ரயில் பயணம் என மறக்க முடியாத தருணங்கள் நிறைய இருக்கின்றன. அவரது திருமணத்தில் கலந்து கொள்ளாதது போன்ற குற்ற உணர்ச்சிக்கு என்னை ஆளாக்கும் சம்பவங்களும் சில இருக்கின்றன.


அடுத்தது:

எ கம்ப்ளீட் மேன் : ஜெபஸ்டின் காசிராஜன்.


 முந்தையது:


எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்


--------

ஹமாஸை நோக்கி ஒரு கரிசனப் பார்வை!


அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி எந்த அமைப்பும் வெற்றி பெற முடியாது என்பது தற்கால அரசியல் சூழல். அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இயக்கங்களை ஒழிப்பதற்கு அரசுகள் என்ன வேண்டுமானாலும் செய்யும். அதிகமாகப் பயன்படுத்தப்படும் உத்தி, அந்த இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துவது. அடக்கு முறைக்கு எதிராக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அதை சட்டங்களைக் கொண்டு தடுக்கும். ராஜதந்திரமாகக் காய் நகர்த்தி எந்த நாடுகளும் இதுபோன்ற அமைப்புகளுக்கு ஆதரவளிக்கவிடாமல் செய்யும். சில நேரங்களில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள், ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதைக்கூட இந்தக்கால அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். இதையும் மீறி பல அவமானங்களையும் தாண்டி சில இயக்கங்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியிருக்கின்றன. இதற்கு நல்ல உதாரணம், நேபாள மாவோயிஸ்டுகள்.

பயங்கரவாதிகளாக அறியப்பட்டவர்களுக்கு ஒரே நாளில் ஜனநாயக அங்கீகாரம் கிடைத்தது. அதன் தலைவர் நாட்டின் பிரதமராகவே ஆக முடிந்தது. ஆனால், அரசியல் சதிகளால், அவர் தூக்கியெறியப்பட்டார். இன்னொரு போராட்டத்தை நடத்த அவர்கள் தயாராக இல்லையென்றாலும், இந்த நிகழ்வு,  ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப நினைக்கும் பல இயக்கங்களின் எண்ணங்களை மாற்றியிருக்கக்கூடும்.

ஹமாஸும் இப்படியொரு இயக்கம்தான். உலகம் முழுவதுமே ஹமாஸை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் சித்தரிக்கின்றன. அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும் உண்மைதான். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் அந்த இயக்கம் வெற்றி பெற்று பாலஸ்தீனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்கள் என்பதை உலகம் அவ்வப்போது மறந்து விடுகிறது. இன்றைக்கு ஆயுதம் ஏந்து்ம் நிலைமைக்கு அவர்கள் மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஹமாஸ் ஆட்சியில் இருந்தபோது, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பாலஸ்தீனப் பிரச்னையைத் தீர்க்கும் வாய்ப்புக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை உலகம் உதாசீனப்படுத்தியது. விளைவு, இன்று ஹமாஸ் இயக்கம் காஸா பகுதியில் ஆயுதங்களுடன் முடங்கிக் கிடக்கிறது.

சோற்றுக்குக்கூட வழியில்லாத மக்கள் வாழும் பகுதியிது, மின்சாரமும், எரிவாயுவும் பொக்கிஷங்களைப் போன்றவை. இவர்கள் ரயிலைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். பசியும் பட்டினியும் இவர்களது மத உணர்வுகளைக்கூட மழுங்கடிக்கச் செய்திருக்கும். உண்மையில் இவர்களை எந்த மதத்தையும் இனத்தையும் சேர்ந்தவர்களாகப் பார்க்கவே முடியாது. இவர்கள் எந்த அடையாளமும் இல்லாத வெறும் மனிதர்கள். எதுவும் கிடைக்காத ஏழைகள். எந்த நோக்கத்துக்காகச் சண்டை போடுகிறோம் என்ற தெளிவையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தும் அளவுக்குக் கல்வியறிவுகூட இவர்களிடம் இல்லை. இவர்களை மதம் இணைக்கவில்லை புறக்கணிப்புகள்தான் இணைத்திருக்கின்றன.

யாரும் பயங்கரவாதத்தை ஆதரிக்க வேண்டாம். கூடவும் கூடாது. அதேநேரத்தில் பயங்கரவாதிகள் உருவாவதைத் தடுப்பதற்கான பணிகளைச் செய்ய வேண்டும் . கொஞ்சம் கரிசனத்தோடு அணுகினால் ஹமாஸ் போன்ற இயக்கங்கள் ஒரே நாளில் ஜனநாயகப் பாதைக்குக் திரும்பிவிடும். பரந்த விரிந்த அறிவுடைய உலகம் இவர்களைக் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதும், எச்சரிக்கை விடுவதும், தாக்குதல் நடத்துவதும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் எந்த வகையிலும் உதவாது. எல்லோரையும் அழித்துவி்ட்டு சிம்மாசனத்தை எங்குதான் போடப்போகிறார்கள்?

இந்தியாவின் அலட்சியம்

இந்திய, பாகிஸ்தான் உறவில் "ஹாட் நியூஸ்' பலுசிஸ்தான் விவகாரம். அணிசாரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற மன்மோகனும், கிலானியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பிறகே, இரண்டு நாடுகளுக்கு இடையேயும், இந்தியாவுக்குள்ளும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.
 இந்தக் கூட்டறிக்கை பலுசிஸ்தான் பற்றி விவகாரமாக எதையும் கூறிவிடவில்லை. "இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது, பலுசிஸ்தானுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என பாகிஸ்தானுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மன்மோகனிடம் கிலானி கூறினார்' என்கிறது அந்த சர்ச்சைக்குரிய வாசகம். எங்கேயும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பழிபோடும் முயற்சிதான்.
 1970-களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதி, தனி நாடாக சுதந்தரித்துக்கொள்ள இந்தியா வெளிப்படையாக உதவி செய்தது. அப்போதைய சூழலில் அது நியாயமாகவே கருதப்பட்டது. பலுசிஸ்தான் தொடர்பாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அது அந்தக் காலம். இந்தியா இப்போது பலுசிஸ்தானை மறந்துவிட்டது. இன்றைய சூழலில், பலுசிஸ்தானை சுட்டிக்காட்டுவதை இந்தியா அனுமதித்தது மாபெரும் தவறுதான். அதற்குக் காரணம் அலட்சியம். அந்த அலட்சியம்தான் இப்போது விபரீதமாகியிருக்கிறது.
 வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் இன்னொரு விஷயத்திலும் இந்திய அரசு அலட்சியமாகவே இருக்கிறது. அது கிரிக்கெட் வாரியம். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. இப்படியொரு பயங்கரமான சந்தேகம் எழுந்ததற்கான அடிப்படைக் காரணம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான்.
 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 49 போட்டிகளில் இந்தியாவுக்கு 21 போட்டிகளும், பாகிஸ்தானுக்கு 14 போட்டிகளும், இலங்கைக்கு 8 போட்டிகளும், வங்கதேசத்துக்கு 6 போட்டிகளும் ஒதுக்கப்பட்டன. நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு வாய்ப்பாகவே கருதப்பட்டன.
 இந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைக் காரணம்காட்டி, பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் முடிவுக்கு ஐசிசி வந்தது. போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கப்பட்டது.
 போட்டிகளை துபை, சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடத்துகிறோம் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையும் எடுபடவில்லை. இந்த இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை; நிர்வாகச் சிக்கலும் இல்லை. அப்படியிருந்தும் இந்தக் கோரிக்கையை ஏற்காததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏக அதிருப்தி.
 இறுதியில், பாகிஸ்தானில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட 8 போட்டிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகளின் தலைமையிடம் லாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு நோஞ்சான் கிரிக்கெட் வாரியத்தை எல்லோருமாகச் சேர்ந்து நசுக்கினார்கள்.
 இதெல்லாம் ஐசிசியின் முடிவு என்று கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை. உண்மையில் ஐசிசியின் எந்தவொரு முடிவையும் மாற்றும் வலு இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. சைமண்ட்ஸ்-ஹர்பஜன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போதும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பேசியது என்பது அனைவருக்கும் தெரியும்.
 இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் சூழ்நிலை மாறக்கூடும். ஒரே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும் என்றால், சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச காலம் கழித்து முடிவெடுக்கலாமே? அப்படியில்லாமல், அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு கொழுத்த லாபம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?
 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிச் சந்தேகப்படுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடமும் கசப்புணர்வு அதிகரிக்கும்.
 இப்படி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்க, அதற்கு நேரெதிர் பாதையில் கிரிக்கெட் வாரியம் சென்று கொண்டிருக்கிறது. உரிய கட்டுப்பாடுகளை விதிக்காதவரை, விளையாட்டு என்கிற பெயரில் வெளியுறவுக் கொள்கையுடன் இவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் அலட்சியமாக இருந்தால், நாட்டுக்கு ஆகாது.

சிக்கியது யாகூ !


இணையத்தில் நவீன தேடல் தொழில்நுட்பத்தின் முன்னோடி யாகூ. இன்று அதே தொழில்நுட்பத்துக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் கையேந்தியிருக்கிறது. இதற்காக அண்மையில் இரு நிறுவனங்களும் ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் தோல்விக்கான யாகூவின் ஒப்புதல்தான் இந்த ஒப்பந்தம். யாகூவிடம் தனித்து வெற்றி பெறுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படையாகியிருக்கிறது.

இரு நிறுவனங்களும் ஏதோ மனமுவந்து இந்தக் கூட்டுக்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன என நினைத்தால் அது தவறு. இந்த நிறுவனங்களுக்கு கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத மைக்ரோசாஃப்ட், யாகூவைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. கடந்த ஆண்டில் 44 பில்லியன் டாலர்களுக்கு ஒட்டுமொத்தமாக யாகூவை விலை பேசியது. இந்த பேரம் படியாமல் போனதால், இப்போது புதிய ஒப்பந்தம் போட்டு யாகூவை வளைத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

இந்த ஒப்பந்தப்படி, யாகூ இணையதளத்தில் இயங்கிவரும் தேடும் வசதி, மைக்ரோசாஃப்டின் "பிங்' தேடுபொறியின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும். இதற்குப் பதிலாக மைக்ரோசாஃப்டின் ஆன்லைன் விளம்பரங்களைச் சந்தைப்படுத்தும் பணியை யாகூ மேற்கொள்ளும். இதற்காக 400 பேர் கொண்ட யாகூ ஊழியர் குழுவை மைக்ரோசாஃப்ட் சுவீகரித்துக் கொள்ள இருக்கிறது. யாகூ தேடுபொறி, பிங் உதவியுடன் செயல்பட்டாலும் தேடல் வருவாயில் 88 சதவீதம் யாகூவுக்கே கிடைக்கும் என்கிறது இந்த ஒப்பந்தம்.

10 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்க இந்த ஒப்பந்தத்தின் முதல் நோக்கம், இணையத் தேடல் சந்தையில் 65 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கூகுளை வீழ்த்துவதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.

இரண்டாவது நோக்கம், வீழ்ந்து கிடக்கும் யாகூவைச் சுதாரிக்கச் செய்வது. இதற்காக யாகூவுக்கு 4 பில்லியன் டாலர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொடுத்து உதவப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குச் சற்று முன்வரை யாகூவின் பங்குகளின் மதிப்பு சரசரவென உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, நிதியுதவி எதுவும் தரப்படாததால், யாகூ பங்குகள் சரியத் தொடங்கின. அதேநாளில் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை சற்று உயர்ந்தது. இதிலிருந்தே ஒப்பந்தம் யாருக்குச் சாதகமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

யாகூ முதலீட்டாளர்கள் இப்போது தலையில் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக யாகூவை விற்றிருந்தால்கூட, ஒரு பங்குக்கு 33 டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இன்று அந்த விலையில் பாதிக்கும் கீழே பங்குகளின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும், இந்தப் புதிய கூட்டு மூலம் தேடுபொறிச் சந்தையிலும் பங்குகளின் விலையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (அறிவிக்கப்படவில்லை) ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (இதுவும் அறிவிக்கப்படவில்லை) எட்ட முடியாவிட்டால் உறவை முறித்துக் கொள்ளலாம் என்னும் விதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது யாகூவுக்கு மிகச் சாதகமானது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவில் நிதியுதவியை அளிக்க மைக்ரோசாஃப்ட் முன்வந்திருக்கிறது. இப்போதைய நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த நிதி யாகூவுக்கு உதவும்.

இன்னொரு பக்கம், இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் யாகூவை வீழ்த்தும் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, யாகூ இணையதளத்தில் பிங் தொழில்நுட்பத்துடன் கூடிய தேடல் வசதி அமைக்கப்பட்டாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இணையதளங்களில் பிங் தேடும் வசதியைத் தொடர்ந்து இயக்கும். இதுபோக, தனியாக பிங் இணையதளமும் செயல்படும். இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் ஒப்பந்தத்தில் இல்லை. இதனால், தேடல் சந்தையில் மைக்ரோசாஃப்டின் பங்கு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும்.

அதேநேரம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது தேடல் தொழில்நுட்பத்தை விட பிங் தொழில்நுட்பம் சிறந்தது என யாகூ மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால் பிங் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தப் பரபரப்பு, யாகூ இணையதளத்தில் தேடுவதைவிட பிங் இணையதளத்துக்கே சென்று தேடலாம் என்கிற மனோபாவத்தை இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் பிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆக, பிங் தேடுபொறியைப் புதிதாகப் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், யாகூவைக் கைவிட்டுவிட்டு வந்தவர்களாக இருப்பார்களேயொழிய, கூகுளிலிருந்து வந்தவர்களாக இருக்கப்போவதில்லை. இதனால், கூகுளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், தனது தேடல் சந்தையையும் யாகூ இழக்க வேண்டியிருக்கும்.

எப்படியோ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆக்டோபஸ் கரங்களில் யாகூ சிக்கிவிட்டது. தூக்கி விடுவதும் போட்டு உடைப்பதும் கால மாற்றங்களைப் பொறுத்தது.

ஈரானுக்கு அக்னிப் பரீட்சை!

அரசியல் தலைவர்களைப் பார்ப்பதற்காகவும் அவர்களது பேச்சைக் கேட்பதற்காகவும் தொண்டர்கள் திரளாக வருவது அந்தக் காலம். தற்கால அரசியல் மாநாடுகளுக்கு "தொண்டர்கள்' எப்படித் திரட்டப்படுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அரசியல்வாதிகளின் பொறுமையைச் சோதிக்கும் பேச்சைக் கேட்பதற்காக தொண்டர்களுக்கு பலவகையான கையூட்டுகளைத் தரவேண்டியிருக்கிறது. மேம்பட்ட ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் காட்டிக்கொள்ளும் நாடுகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அகமதிநிஜாத் இந்த அரசியல் விதியைத் தகர்த்திருக்கிறார்.

  இன்று (ஜூன் 12) அதிபர் தேர்தலுக்கான முதல்சுற்று வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் அகமதிநிஜாத் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக தெஹ்ரான் மைய மசூதி வளாகத்தில் பிரமாண்டமான பிரசாரக் கூட்டத்துக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலுமிருந்து தொண்டர்கள் வந்ததால், மைதானம் நிரம்பி வழிந்தது. தெஹ்ரானின் அனைத்துச் சாலைகளும் தொண்டர்களின் வாகனங்களால் திக்குமுக்காடின. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதிநிஜாத் வந்த வாகனம்கூட மேடையை நெருங்க முடியவில்லை. குறித்த நேரம் முடிந்த பிறகும் அவரால் மேடைக்குச் செல்ல முடியாததால், வேறு வழியின்றி வாகனத்திலிருந்தபடியே தொண்டர்களை நோக்கிக் கையசைத்துவிட்டு, வீடுதிரும்பிவிட்டார். இரவு முழுவதுமே தெஹ்ரானில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது. எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லாதபோது, ஒரு அரசியல் தலைவருக்கு இவ்வளவு அதிகமான கூட்டம் கூடியிருப்பது உலகத்தையே திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறது.

  அகமதிநிஜாத்துக்கு அமோகமான ஆதரவு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. மதத் தலைவர் கோமேனியின் பரிபூரண ஆசியும் இவருக்கு இருக்கிறது. அப்படியிருந்தும், தேர்தலில் அகமதிநிஜாத்தான் வெற்றிபெறப் போகிறார் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. இஸ்லாமிய விதிமுறைகளைக் கடுமையாகத் திணிப்பவராகக் கருதப்படும் அவருக்குப் போட்டியாக இன்னும் மூவர் களத்தில் இருக்கின்றனர். அவர்களுள் மிக முக்கியமானவர், முன்னாள் மற்றும் கடைசிப் பிரதமரான மிர் ஹூசைன் மெüசவி. தொடக்கத்தில் முன்னாள் அதிபர் கடாமியும் களத்தில் இருந்தார். பெரும்பான்மை ஆதரவுடன் அகமதிநிஜாத் வெற்றிபெற்றுவிடுவார் என்றுதான் அப்போது கருதப்பட்டது. ஆனால், தமது நீண்டகால நண்பரான மெüசவிக்கு ஆதரவாகப் போட்டியிலிருந்து கடாமி விலகியதும், அகமதிநிஜாத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது.

  அமெரிக்காவுடன் நட்பைப் புதுப்பித்துக் கொள்ளவும், சமூக அமைப்பிலும் சட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவரவும் போவதாக மெüசவி அறிவித்திருக்கிறார். பெண்கள் மத்தியில் இவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது.

  கச்சா எண்ணெய் விலை சரிவு, அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம், வேலையிழப்பு, இரட்டை இலக்கப் பணவீக்கம் ஆகியவை தேர்தலில் அகமதிநிஜாத்துக்கு எதிராக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பில்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரச் சீரழிவை நாடு சந்தித்திருப்பதாக அவரது ஆதரவாளர்களேகூட ஒப்புக் கொள்கிறார்கள். அணுசக்தி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அவரது நெகிழ்வற்ற வெளியுறவுக் கொள்கையால் உலக நாடுகளிலிருந்து ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது.

  இந்தத் தேர்தலில் அகமதிநிஜாத், மெüசவி தவிர மெஹ்தி கரோபி, மோசன் ரேசை ஆகியோரும் போட்டியில் இருக்கின்றனர். எனினும் மெüசவிக்கும் அகமதிநிஜாத்துக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்தவர்களில் இந்த நால்வரைத் தவிர மற்ற அனைவரது மனுக்களையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது.

  ஜூன் 12-ம் தேதி நடக்கும் முதற்சுற்று வாக்குப் பதிவில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவரே அதிபராவார். யாரும் 50 சதவீத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையெனில், அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதற்காக ஜூன் 18-ம் தேதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடத்தப்படும். அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இதுவரை நடந்த தேர்தல்களில் அதிகம் எதிர்பாராத பலர் அதிபர்களாகியிருக்கிறார்கள். 1997-ல் கடாமியும், 2005-ல் அகமதிநிஜாத்தும் வெற்றிபெற்றதுகூட யாரும் எதிர்பார்க்காததுதான்.

  மத்திய கிழக்குப் பிராந்தியத்திலேயே தங்கள் நாட்டில்தான் மேலான மக்களாட்சி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் ஈரானுக்கு இந்தத் தேர்தல் ஓர் அக்னிப் பரீட்சையாகும். ஆனால் அது முறையாக நடப்பதில் பல்வேறு தடைகள் உள்ளன. பத்திரிகை சுதந்திரத்தில் உலக அளவில் கிட்டத்தட்ட கடைசி நிலையில் ஈரான் வைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் தொலைக்காட்சிகளும் அரசுவசம் உள்ளன. போட்டியாளர்களின் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே "ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களை அகமதிநிஜாத் முடக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  எல்லாவற்றுக்கும் மேலாக அரசு ஊழியர்களால் "பல்வேறு' வகையிலும் தமக்கு "உதவ' முடியும் என்பதற்காகவே, அவர் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியாகவும் குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும், அரசுத் தொலைக்காட்சியில் அனைத்து வேட்பாளர்களும் நேருக்குநேர் விவாதிப்பதற்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டது உள்ளிட்ட விஷயங்களைப் பார்க்கும்போது, தேர்தல் நியாயமாக நடக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி நடந்தால் யார் தோற்றாலும் ஈரானுக்கும் ஜனநாயகத்துக்கும் வெற்றிதான்.

ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தேசம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தந்தையும் மூதாதையர்களும் வாழ்ந்த நாடு கென்யா. அவரது உறவினர்கள் பலர் இன்னமும் அங்குதான் இருக்கிறார்கள். 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "எனது தந்தையின் கனவுகள்' என்கிற சுயசரிதைப் புத்தகத்தில் தமக்கும் கென்யாவுக்கு உள்ள உறவைப் பற்றி ஒபாமா உணர்ச்சிமயமாக எழுதியிருக்கிறார். அதிபரான பிறகு முதன்முறையாக ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்குச் சுற்றுப் பயணம் செய்வது என்று ஒபாமா முடிவு செய்துவிட்டால், அவர் செல்ல வேண்டிய முதல் நாடு கென்யாதான். அந்த அளவுக்கு ஒபாமாவுக்கும் கென்யாவுக்கும் ரத்தப் பிணைப்பு இருக்கிறது. ஆனால், இது கென்யாவின் தேசப்பிதா ஜோமோ கென்யாட்டா காலமல்ல. சீனியர் ஒபாமாவும் இப்போது உயிருடன் இல்லை.

  தேர்தல் வெற்றிகளைத் திருடும், இனப் பிரச்னையைக் கொண்டு அரசியல் நடத்தும், முடிந்தவரை மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்தான் கென்யாவில் தற்போது நிறைந்திருக்கிறார்கள். இப்படியாக, முன்பிருந்த பெருமையை கென்யா இழந்துவிட்டதாக ஒபாமா கருதியிருக்கக்கூடும். அதனால், அங்கு செல்வதை அவர் தவிர்த்துவிட்டார்.

  கென்யாவை விட்டால், ஒபாமா சென்றிருக்க வேண்டிய நாடு நைஜீரியா. காரணம் எண்ணெய். அமெரிக்காவின் பெட்ரோலிய இறக்குமதியில் முக்கியப் பங்களிப்பு நைஜீரியாவுக்கு இருக்கிறது. இதுபோக, ஆப்பிரிக்க நாடுகளைப் பொருத்தவரை, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நைஜீரியாவில் அமெரிக்கா முதலீடு செய்திருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும், பணியாளர்களும் நைஜீரியாவில் முகாமிட்டிருப்பது இன்னொரு சிறப்பு. அந்த வகையில், ஒபாமா விஜயம் செய்து சிறப்பிக்க வேண்டிய தகுதி நைஜீரியாவுக்கு இருக்கிறது. ஆனால், அரசு?

  பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு மக்களையும், இயற்கையையும் நசுக்குவதாக நைஜீரிய அரசு மீது குற்றச்சாட்டு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறை மிக்கவை. பணத்துக்காக வெளிநாட்டினரைக் கடத்துவது சர்வசாதாரணம். ஒபாமாவின் பயணத்துக்கு இவையெல்லாம் சாதகமான அம்சங்கள் இல்லை. அதனால், ஒபாமாவின் பயணத்துக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து நைஜீரியா நீக்கப்பட்டது. இதன் பிறகுதான் ஒபாமாவின் முதல் ஆப்பிரிக்கப் பயணத்துக்காக கானா தேர்ந்தெடுக்கப்பட்டது.

  ஒபாமாவின் வருகைக்காக பல ஆப்பிரிக்க நாடுகள் காத்திருந்தது உண்மைதான். ஆப்பிரிக்கா முழுவதுமே மண்ணின் மைந்தராக ஒபாமா பார்க்கப்படுவதே இதற்குக் காரணம். கானாவுக்கு ஒபாமா வருகிறார் என்பது உறுதியானதும் சில நாடுகள் ஏமாற்றமடைந்தன. சில நாடுகளின் தலைவர்கள் அதை வெளிப்படையாகவே சொன்னார்கள். தந்தை பிறந்த நாட்டையும், அதிக வர்த்தகத் தொடர்பு உள்ள நாட்டையும் தவிர்த்துவிட்டு கானாவுக்கு ஒபாமா சென்றதற்கு அங்குள்ள மக்களாட்சியும், பொருளாதார வளர்ச்சியும்தான் காரணங்கள்.

  இது தவிர, ஒபாமாவின் கானா விஜயத்துக்கு வரலாற்றுக் காரணமும் ஒன்று உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் "ஆப்பிரிக்க அடிமை வியாபாரம்' நடந்தது.  மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் அடிமைகளை அடைத்து வைப்பதற்காக கானாவில் உள்ள கேப் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் சிறிய இருட்டு அறைகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது. இந்தப் பகுதியை ஆப்பிரிக்காவின் அடிமை வியாபார மையமாக பிரிட்டிஷார் பயன்படுத்தினர்.

  அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வரும்வரையில் இந்தக் கட்டடத்தில் ஆண்களும் பெண்களும் அடைத்து வைக்கப்படுவார்கள். இருட்டு அறைகளிலும் இருட்டுச் சுரங்கப் பாதைகளிலும் மூச்சுத் திணறி நூற்றுக் கணக்கானோர் மாண்டதாக வரலாறு கூறுகிறது. ஒரு காலத்தில் தம்மைப் போன்ற பலர் அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டடம் ஒபாமாவுக்குள் ஒரு உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

  பிரிட்டிஷாரிடமிருந்து 1957-ல் விடுதலையானபோது, ஆப்பிரிக்காவின் பிற நாடுகளைப் போலவே கானாவிலும் அரசியல் ஸ்திரமற்ற நிலைதான் இருந்தது. ராணுவ ஆட்சியும் மக்களாட்சியும் மாறிமாறி நடந்தன. பொருளாதாரமும் வீழ்ந்து கிடந்தது. ஆனால், 1992-ல் பெரிய அளவிலான மாற்றம் நடந்தது. ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களாட்சி மலர்ந்தது. சிறப்பான நிர்வாகமும் சுதந்திரமான நீதித்துறையும் இப்போது கானாவுக்குச் சிறப்புச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்புகளையும் வன்முறைகளையும் ஊழல் அரசியல்வாதிகளையும் பஞ்சத்தையும் பார்த்துப் பழகிப்போயிருக்கும் பிற நாட்டு ஆப்பிரிக்க மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் தேசமாக கானா உருவெடுத்திருக்கிறது. இவை போதுமே அமெரிக்க அதிபரின் விஜயத்துக்கு.

  பிற நாட்டுத் தலைவர் ஒருவரின் சாதாரணப் பயணமாக ஒபாமாவின் வருகையை கானா அரசும், மக்களும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது வருகைக்குச் சில நாள்களுக்கு முன்பிருந்தே கானாவில் கொண்டாட்டம் தொடங்கியது. ஒபாமாவின் முகம் பொறித்த ஆடைகளுக்கு மவுசு அதிகரித்தது. மேலை நாடுகளுக்கும் ஆப்பிரிக்காவும் புதிய உறவு ஏற்பட்டதைப் போன்ற உணர்வு மக்களுக்குள் இருந்தது.

  அண்மையில் ஒபாமா சென்றார். சொந்த ஊருக்குச் சென்ற உற்சாகத்திலிருந்த அவர், கானா நாடாளுமன்றத்தில் நண்பர்களுடன் உரையாடுவதைப் போல எளிமையாகப் பேசினார். ஆப்பிரிக்காவுக்கு வலிமையான தலைவர்கள் தேவையில்லை; வலுவான அரசு அமைப்புகளே தேவையென்றார். நீங்கள் நினைத்தால் நோய்களை ஒழிக்க முடியும், நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நம்பிக்கையூட்டினார்.  அவரது கானா பயணமும், பேச்சும் ஆப்பிரிக்கர்களுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்றில் கிடைத்தற்கரிய ஒபாமா என்ற வாய்ப்பை, ஆப்பிரிக்க நாடுகள் பயன்படுத்திக் கொண்டால் அவர் சொல்வதைப் போல நல்ல விதமான மாற்றம் வந்தே தீரும். நம்பலாம்.

வெளியுறவுச் சோதனை...

இந்திய வெளியுறவுத் துறைக்கு இது போதாத காலம். வாரம் தவறாமல் ஏதாவது ஒரு விவகாரம் பூதாகரமாகக் கிளம்பிவிடுகிறது. அந்த வரிசையில் இப்போது பரபரப்பாகியிருப்பது காஷ்மீர் விவகாரம். கொஞ்ச காலமாக சர்வதேச அளவில் அடக்கி வாசிக்கப்பட்ட இந்த விவகாரத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கிளப்பிவிட்டிருக்கிறது.
  இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு கசப்பாகவே தொடங்கியது. இன்றும் அப்படியே தொடர்கிறது. அதற்கு ஒரே காரணம் பாகிஸ்தான்.
  1969-ல் இந்தக் கூட்டமைப்பின் முதல் மாநாடு மொராக்கோவில் நடந்தபோது, இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 1965-ல் நடந்த போரால் ஏக கோபத்தில் இருந்த பாகிஸ்தான், மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதிநிதிகளுக்கு அனுமதியளித்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக மிரட்டியது. இதனால், மொராக்கோவுக்குச் செல்லாமலேயே இந்தியக் குழு திரும்பியது.
  அதன் பிறகும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது. இஸ்லாமிய மக்கள்தொகையில் உலகின் மூன்றாவது பெரிய நாடு என்ற தகுதியின் அடிப்படையிலும், காஷ்மீர் விவகாரத்துக்குப் பயன்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பிலும்தான் இந்தக் கோரிக்கையை இந்தியா முன்வைத்தது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், பாகிஸ்தானின் எதிர்ப்பால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதையாவது அறிவிப்பதை இந்த அமைப்பு வழக்கமாகவே கொண்டிருந்தது. அவற்றிலெல்லாம் காரசாரமாக ஒன்றுமில்லை. இப்போது சர்ச்சைக்குரிய வகையில், "இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர்' பகுதிக்கென சிறப்புத் தூதரை நியமித்திருக்கிறது.
  இஸ்லாமியக் கூட்டமைப்பில் சேராதிருந்ததால், இந்தியாவுக்கு இதுவரை பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், சிறப்புத் தூதர் நியமிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தால், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய பின்னடைவு.
  இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அறிவிப்பு, இரண்டு வகையில் இந்தியாவுக்கு எதிராக அமையக்கூடும். ஒன்று, காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைய புதிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அழைப்பின் பேரில் இஸ்லாமியக் கூட்டமைப்பு மாநாட்டுக்குச் சென்று வந்திருக்கும் பிரிவினைவாதத் தலைவர் மிர்வைஸ் உற்சாகமாக இருக்கிறார். இந்த உற்சாகத்துடன் பிரிவினைப் போராட்டங்களை அவர் முடுக்கிவிடப்போவது உறுதி.
  காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்விவகாரமாகவே இருந்து வருகிறது. எந்த மூன்றாவது நாட்டின் தலையீடும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இப்போதும், சிறப்புப் பிரதிநிதியை நியமிக்க இஸ்லாமியக் கூட்டமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இது ஒரு வகையில் வெற்றிதான் என்பதை மறுப்பதற்கில்லை.
  எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய சூழலால், அமைதிப் பேச்சில் காஷ்மீர் விவகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கை வலுப்பெறும். இது தவிர்க்க முடியாததாகக்கூடப் போகலாம்.
  சில நாள்களுக்கு முன்புதான் காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக விசா வழங்கி சர்ச்சையைக் கிளப்பியது சீனா. இதன் உள்நோக்கம் வெளிப்படை. இந்த நடவடிக்கைகள் மூலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானும் சீனாவும் இப்போது கூட்டமைத்துச் செயல்படுவது போலத் தெரிகிறது.
   இதனால், பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சில் காஷ்மீர் பிரச்னை தவிர்க்க முடியாததாகலாம்.
  திபெத் சுயாட்சி, தைவான் அங்கீகாரம், ஹாங்காங் ஜனநாயகப் போராட்டம் போன்ற விவகாரங்களில் சீனாவுக்கு ஆதரவாகத்தான் இந்தியா நடந்து கொண்டிருக்கிறது.
  அதேபோல், பலுசிஸ்தான் விவகாரத்திலும் இந்தியா ஒதுங்கிவிட்டது. இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்தியா இதுவரை எதுவும் செய்யாமல் நடுநிலைமை வகிப்பது அல்லது மௌனம் காப்பது, தேவைப்பட்டால் உதவுவது என்றுதான் செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்துமே இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன. சர்வதேச அமைப்புகளிலும், விவகாரங்களிலும் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படத் தயங்குவதே கிடையாது.
   இந்தியாவின் அண்டை நாடுகள் நட்பு பாராட்டுவதே அண்டிக் கெடுப்பதற்குத்தானோ எனும் அளவுக்கு அந்த நாடுகளின் செயல்கள் அமைந்திருக்கின்றன.   இந்தியாவின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்ட பொறாமையும் அமெரிக்காவுடனான அதிகப்படியான நெருக்கமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
  ஒன்று மட்டும் தெரிகிறது. நல்லெண்ணம் கொண்டிருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவை 1962-ல் சீனா வஞ்சித்தது. எதிர்பார்க்காத நேரத்தில் இந்தியா மீது படையெடுத்தது.   இந்திரா காந்தி காலத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த அண்டை நாடுகள் இந்தியாவை அவமானப்படுத்த, ஒற்றுமையைக் குலைக்கக் கைகோர்த்துச் செயல்படுகின்றன. நாம் சுதாரித்துக் கொள்ளாவிட்டால், சரித்திரம் நம்மை மன்னிக்காது!

Sunday, November 29, 2009

ஸ்விட்சர்லாந்தில் மசூதி கோபுரங்களுக்குத் தடை?


அமைதியான நாடு என்று இதுவரை அழைக்கப்பட்டு வரும் ஸ்விட்சர்லாந்து, இப்போது பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது. மசூதிகளில் மினார்களைக் கட்டத் தடை விதிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையையடுத்து, இன்று ஃரெபரண்டம் எனப்படும் கருத்துத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தடை விதிப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

இனி முஸ்லிம் உலகத்துடன் ஸ்விட்சர்லாந்து முறுக்கிக் கொள்ள வேண்டியதுதான். முஸ்லிம் நாடுகளிலுள்ள தனது கடைகளை ஸ்விஸ் நாடு மூடிக் கொள்ள வேண்டும். தன் தலையிலேயே தீயைக் கொட்டிக் கொண்டதுபோல, ஸ்விஸ் மக்கள் வன்முறையை வலிந்து சென்று அழைத்திருக்கிறார்கள். இனி அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் கொண்டாட்டம்தான். ஐரோப்பா ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகி வருகிறது.

(இது வெறும் செய்திதான். விரிவான கட்டுரை விரைவில்)

தேர்தலும் துப்பாக்கிகளும்!

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். மனித உரிமைகள் பேருக்குக்கூடக் கிடையாது. அரசை எதிர்த்து யாரும் வாய்திறக்க முடியாது. அடக்குமுறையே சட்டமாக இருந்தது. 10 ஆண்டுகள்வரை நீடித்த இந்த நிலைக்கு எதிராக யாரும் வெகுண்டு எழவில்லை. 2001-ல் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதும், ஆப்கனில் தலிபான்களின் அடக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற "பொதுநல' ஆவேசம் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் வந்தது.

  ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு நேரடிக் காரணம் இருந்தது. ஆனால் பிரிட்டனுக்கு அப்படி ஏதும் இருக்கவில்லை. போர் என்றால் ஏதாவது காரணம் வேண்டுமே? அதனால், ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை நிலை நாட்டப் போகிறோம்; பெண்ணடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று கூறி அமெரிக்காவுக்கு டோனி பிளேர் ஆதரவு தெரிவித்தார். மேற்கத்தியச் சிந்தனை கொண்டவராகக் கருதப்படும் ஹமீத் கர்சாயிடம் நாட்டின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

  எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. தலிபான்களுக்கு மாற்றாக யார், கருதப்பட்டாரோ, அந்த அதிபர் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். கணவனைக் கேட்காமல் பெண்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது; கணவனின் தாம்பத்ய விருப்பத்துக்கு இணங்காத பெண்களுக்கு சாப்பாடு போட வேண்டிய அவசியமில்லை என்றது அந்தச் சட்டம். பெண்கள் வேலைக்குப் போவதென்பது கணவனின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டது. குழந்தைகள் மீது பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், கணவனுக்குப் பிடிக்கும் விதத்தில் அவர்களை வளர்ப்பதுமே பெண்களின் பணி. இதில் உரிமை எடுத்துக் கொள்வதற்கு இடமேயில்லை என அந்தச் சட்டம் சொன்னது.

  சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியதும் சட்டத்தைப் படித்துப் பார்க்காமலேயே கையெழுத்திட்டுவிட்டதாக மழுப்பினார் கர்சாய். இப்போது அதே சட்டம் சிறிய மாறுதல்களுடன் மீண்டும் அமலுக்கு வந்திருக்கிறது. மத அடிப்படைவாத வாக்கு வங்கியைக் கவருவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, தலிபான்களின் ஆதிக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தான் விடுபட்டுவிட்டது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

  இப்படி ஆனதற்குக் காரணம் அமெரிக்காவும் பிரிட்டனும்தான். தலிபான்களின் ஒத்துழைப்புடன் நாட்டை ஜனநாயகப் பாதைக்குத் திருப்பப் போகிறோம் என்று கூறி, பயங்கரவாதத் தலைவர்களையும், போர்க் குற்றவாளிகளையும் உயர் பதவியில் அமெரிக்கா அமர்த்தியது. அதனால்தான், ஆட்சி நிர்வாகத்திலும் சட்டங்களிலும் மத அடிப்படைவாதம் புகுத்தப்படுகிறது.

  இப்படியான சூழலில் ஆப்கானிஸ்தானில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் நடக்கும் இரண்டாவது அதிபர் தேர்தல் இது. 2004-ம் ஆண்டு அமலுக்கு வந்த அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டுமுறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும். அந்தச் சட்டம் வருவதற்கு முன்னரே கர்சாய் அதிபராக இருந்தார் என்பதால், இது அவருக்கு மூன்றாவது முறை.

  இந்தத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிடும் கர்சாய் தவிர, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும், அஷ்ரப் கனியும் முக்கியப் போட்டியாளர்கள்.

  பெரும்பாலான நாடுகளைப் போலவே, இரண்டு சுற்று வாக்குப் பதிவைக் கொண்டது அதிபர் தேர்தல். முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை எனில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடும் இரண்டாவது சுற்று வாக்குப் பதிவு நடைபெறும்.

  தேர்தல் என்றாலே பண பலத்துடனும் அரசு ஊழியர்களின் துணையுடனும் நடத்தப்படும் மாபெரும் மோசடி என்னும் கருத்து இன்றைய மக்கள் மனங்களில் வேரூன்றியிருக்கிறது. இந்த விஷயத்தில் வளர்ந்த மற்றும் வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளுக்கு சற்றும் சளைத்ததல்ல ஆப்கானிஸ்தான். வாக்காளர் அடையாள அட்டைகள் 10 டாலர் விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதாக பிபிசி புலனாய்வில் தெரியவந்திருக்கிறது. கிராமப்புறங்களில் குட்டித் தலைவர்கள் மூலமாக வாக்கு வர்த்தகம் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அரசு ஊழியர்களும், அரசு ஊடகங்களும் கர்சாய்க்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக பிற வேட்பாளர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

  அதிபர் தேர்தலுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

  நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மொத்த வாக்குச் சாவடிகளில் 30 சதவீதத்துக்கும் மேலானவை தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் இருப்பதால், அங்கெல்லாம் தேர்தல் அமைதியாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

   ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளை வழங்குவது, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடுவது போன்ற வழக்கமான குழப்பங்களும் உண்டு.

  இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில், முன்பு இருந்ததைவிட கருத்துச் சுதந்திரம் மேம்பட்டிருப்பதும், ஊடகங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதும் முழுமையான ஜனநாயகம் மலர்வதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. பெண்ணடிமை முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும், முக்கிய பதவிகளுக்குப் பெண்கள் வந்திருப்பது பெரிய முன்னேற்றம்தான்.

   என்னதான் முறைகேடுகள் நடந்தாலும், பயங்கரவாதம் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு சுயாட்சி மலர்வதில் இந்த அதிபர் தேர்தல்கூட முக்கிய   பங்காற்றத்தான் போகிறது.

அதிர்ச்சியளிக்கும் இலங்கை

இந்த நவீன யுகத்தின் அனைத்து வகையான போர்த் தந்திரங்களும் பயன்படுத்தப்பட்ட ஒரே இடம் ஈழம்தான். இப்படியொரு மிகச் சிக்கலான போர்க்களத்தை வேறு எந்த நாட்டு ராணுவமும் அறிந்திருக்க முடியாது. அப்பாவி மக்கள் நிறைந்திருந்த இந்தப் போர்க்களத்தை பல்வேறு நாடுகளின் படைகளும் தங்களது பயிற்சிக்களமாகப் பயன்படுத்தின என்னும் குற்றச்சாட்டு பலமுறை எழுந்தது. இப்போது அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாமோ என்கிற சந்தேகம் வலுவடைந்திருக்கிறது.

 உலகின் மிக வலுவான ஆயுதப் போராளிகளை வீழ்த்திவிட்ட இலங்கை ராணுவம் இப்போது புதிய ராஜீய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் ஈழ மண்ணைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது.

 அதற்காக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் படைகளுக்கு பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் போர்ப் பயிற்சிக்களங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கருதப்படும் நிலையில், இப்படியொரு செய்தி இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஏற்கெனவே, வடக்கு இலங்கையின் அம்பாந்தோட்டையில் "வணிகப் பயன்பாட்டுக்கான' துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது. இந்தத் துறைமுகத்தை கடற்படைத் தளமாக மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

 தொடக்க காலத்தில் இந்தத் துறைமுகத்தை வர்த்தகத்துக்காகப் பயன்படுத்தினாலும், சில வசதிகளை மேம்படுத்தினால் எப்போது வேண்டுமானாலும் கடற்படைத் தளமாக மாற்றிக்கொள்ள முடியும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

 சாலைகள், மின் நிலையங்கள் என இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சீனாவின் பங்கு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை இருநாட்டு உறவு தொடர்பான நடவடிக்கைகள் என ஒதுக்கிவிட முடியாது.

 இலங்கையில் காலடி வைத்ததன் மூலமாக இந்தியாவைத் "தாக்கும்' தொலைவுக்கு சீனா வந்துவிட்டது என்பதுதான் உண்மை. "தாக்கும்' தொலைவுக்குள் முக்கிய அணுமின்நிலையங்கள் இருக்கின்றன என்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீன-இலங்கை உறவு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

 இந்தச் சூழலில், தலிபான்களுடன் போரிடுவதற்கு பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை கூறியிருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு நேரடியான எதிரிகள். இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்ட ஒரே விஷயம் இலங்கை விவகாரம்தான்.

 ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புகளில் இலங்கையைக் காப்பாற்றுவதற்கு மூன்று நாடுகளும் போட்டிபோட்டன. ஆனால், போரில் உதவியும் சர்வதேச அரசியலில் ஆதரவும் அளித்த இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யப்போகிறது என்றே தோன்றுகிறது.

 ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இப்போது, இலங்கை-பாகிஸ்தான், இலங்கை-சீனா இரு தரப்பு உறவுகள் வலுவடைந்தால், இந்தப் பிராந்தியத்தில் இந்த மூன்று நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கக்கூடும்.

 இதனால் பொருளாதார அளவில் இல்லையென்றாலும், பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தியாவிடம் இலங்கை உதவி கேட்டிருக்கும் தற்போதைய நிலைமை மாறி, ஆதரவு கேட்டு இந்தியா இறங்கி வரவேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

 இந்த விஷயத்தில் இலங்கை மிகத் தந்திரமாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவைவிட பாகிஸ்தானும் சீனாவுமே நம்பகமான நாடுகள்.

 அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக எந்த நேரத்திலும் தமக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்கக்கூடும் என்கிற சந்தேகம் இலங்கைக்கு இன்னும் இருக்கிறது.

 அதனால், சீனாவை தாஜா செய்வதற்காகவே தைவானை தனிநாடாக அங்கீகரிக்க இலங்கை மறுத்திருக்கிறது.

 அதே நேரத்தில், காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை எடுக்கத் தயக்கம் காட்டி வருகிறது. இந்தியா மீது சந்தேகப்படாமல் இருந்திருந்தால், இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையையே இலங்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானையும் சீனாவையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ராஜதந்திரம்தான் இலங்கையை மெüனம் காக்க வைத்திருக்கிறது.

 விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருக்கும்வரை இந்தியாவுக்குப் பிடிக்காத எதையும் வெளிப்படையாகச் செய்ய இலங்கை தயங்கியது.

 இனியும் அப்படி இருக்கத் தேவையில்லை எனக் கருதியே, பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்க வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. அதனால், விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவியது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பெரிய சறுக்கலாகவே கருதப்படுகிறது.

 முன்பிருந்ததைப் போன்று இலங்கை பலவீனமான நாடல்ல. விடுதலைப் புலிகளுடனான போர் மூலமாக, புதிய போர் உத்திகளைக் கற்றுக் கொண்டிருப்பது இலங்கையின் முதல் பலம்.

 இதுதவிர, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தால்கூட, உலக நாடுகளைச் சமாளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் புதிய அனுபவங்கள் மூலம் இலங்கை தெரிந்து கொண்டிருக்கிறது.

 இப்படி போர்த் தந்திரத்திலும், ராஜதந்திரத்திலும் வலுவடைந்துள்ள இலங்கை, இந்தியாவின் எதிரிகளுடன் கூட்டு இப்போது வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் வெளியுறவு உத்திகளை வகுப்பதில் இந்தியா கொஞ்சம் பிசகினாலும் அது வரலாற்றுத் தவறாக முடிந்துவிடும்.

ப்ரிக்: புறப்படுகிறது மாற்று அணி!

அமெரிக்காவும் அதன் டாலரும் இன்னும் நீண்ட காலத்துக்கு உலகின் முதன்மைகளாக இருக்கப் போவதில்லை. உலகப் பொருளாதார வல்லரசுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி-6 குழுவுக்கு மாற்றாக பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டணியான "ப்ரிக்' தயாராகிவிட்டது. 2003-ம் ஆண்டில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலேயே இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. 2011-ம் ஆண்டிலிருந்து இந்த நால்வரணியின் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சியடையும்; 2025-ம் ஆண்டிலேயே ஜி-6 நாடுகளுக்கு இணையான பொருளாதார வலுவை எட்டும்; 2039-ம் ஆண்டில் ஜி-6 அணியை இந்த மாற்று அணி முந்திச் செல்லும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
  2050-ம் ஆண்டில் இந்த உலகம் முழுவதுமாக மாறியிருக்கும். அப்போது, உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக சீனா விளங்கும். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் ரஷியாவும் அணிவகுக்கும் என அந்த அறிக்கை ஆரூடம் சொன்னது. இந்தக் கருத்துதான் "ப்ரிக்' எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டணி உருவாக வித்திட்டது.
  கோல்ட்மேன் சாக்ஸ் சொன்னவையெல்லாம் நடக்கத்தான் போகிறது என்பது உலகப் பொருளாதார வல்லுநர்கள் பெரும்பாலானோர் ஒப்புக் கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனா 9.75 சதவிகிதத்தையும், இந்தியாவும் ரஷியாவும் 7 சதவிகிதத்தையும் பிரேசில் 3.5 சதவிகிதத்தையும் எட்டியிருக்கின்றன. இந்த வேகத்தில் இன்னும் 20 ஆண்டுகளைக் கடந்தால், "ப்ரிக்' அணியின் கனவு நனவாகிவிடும்.
  ஏற்கெனவே, ஐ.நா.பாதுகாப்பு அவையிலும், ஜி-8 அமைப்பிலும் உறுப்பினராக உள்ள ரஷியாவுக்கு அரசியல் ரீதியாக இழந்த செல்வாக்கை மீட்பதற்கு ப்ரிக் கூட்டணி பயன்படும் எனக் கருதப்படுகிறது. வளரும் நாடுகளின் பிரதிநிதிகளாகக் கருதப்படும் பிரேசிலும் இந்தியாவும் "ப்ரிக்' செல்வாக்கு மூலமாக ஐ.நா. பாதுகாப்பு அவை, உலக வங்கி உள்ளிட்ட முக்கிய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். மற்ற மூன்று நாடுகளின் கூட்டுப் பொருளாதாரத்தைவிட மிக வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுக்கு ப்ரிக் அமைப்பால் பெரிய அளவில் நன்மை ஏதும் இல்லை. எனினும், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு இந்தக் கூட்டணி சீனாவுக்கு உதவும்.
  இருந்தபோதும், ப்ரிக் அணியை விமர்சிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த 4 நாடுகளுக்கும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியான ஒற்றுமை ஏதும் கிடையாது. அதனால், தனிப்பட்ட நோக்கங்கள் நிறைவேறியதும் 4 நாடுகளும் பிரிந்துபோகவே விரும்பும் என சிலர் கூறுகின்றனர். அரசியல் ரீதியாக இந்த நாடுகள் அனைத்துக்கும் ஏதாவது ஒருவகையில் பெரிய பிரச்னை இருக்கிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால், பாகிஸ்தானுடனான மோதலும், சீனாவுடனான எல்லைப் பிரச்னையும் எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்கலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நக்சலைட் பிரச்னையும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம்.
  அதேபோல், ஒரு கட்சி ஆட்சி முறையைப் பின்பற்றும் சீனாவில், முழுமையான ஜனநாயகம் கோரி நடைபெறும் போராட்டங்கள் இன்னும் சில ஆண்டுகளில் வலுவடையும் எனக் கருதப்படுகிறது. சிறப்பு அந்தஸ்து பெற்ற பகுதிகளும் தைவானும்கூட சீனாவுக்குப் பெரிய தொல்லைகளாக இருந்து வருகின்றன. இவைகளால் அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாப்பிருப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர்.
  ரஷியாவின் பொருளாதாரம் எண்ணெய் வளங்களைச் சார்ந்தது. அண்மைக்கால எண்ணெய் விலை வீழ்ச்சியால் அந்த நாடு பெரும் பாதிப்புக்குள்ளாகியது. இதுபோக, ஜார்ஜியா போன்ற நாடுகளுடனான அரசியல் பிரச்னையும் இருக்கிறது. இவைகள் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடைகளாக அமையும்.
  எல்லாவற்றுக்கும் மேலாக, ஒப்பீட்டளவில் வலுவான பொருளாதார அமைப்புடைய சீனா, அமெரிக்காவுடன் கைகோர்த்து ஜி-2 அணியை உருவாக்க விரும்பினால் ப்ரிக் அமைப்பு சிதைந்து போகும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
  எது எப்படியோ, வரும் 16-ம் தேதி இந்த நாடுகளின் தலைவர்கள் ரஷியாவில் கூடிப் பேசப் போகிறார்கள். உலகை மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் புதிய அணி புறப்பட்டு விட்டது. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இந்த நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இலக்கை எட்ட வேண்டும் என்பதில் இந்த நாடுகளுக்கு இருக்கும் தீவிரம் தெரிகிறது. வெற்றியை எட்டுவதற்கு எல்லோருமே நாசூக்காக நடந்து கொள்ள வேண்டும். காலமும் ஒத்துழைக்க வேண்டும். ஆகட்டும், பார்க்கலாம்...!

Saturday, November 28, 2009

ஆனந்த விகடனின் அக்கறை!



ஆனந்த விகடன் 2.12.2009 தேதியிட்ட இதழில் "உங்கள் அருகில் உளவாளியிருக்கலாம்" என்னும் தலைப்பில் ப.திருமாவேலன், பா.பிரவீன்குமார் ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரை சரியான நேரத்தில் வந்திருக்கிறது. நமது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உளவாளிகளாக இருக்கலாம் என்கிற எச்சரிக்கை இப்போது மிகவும் அவசியமானது.

பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும், நாடுகளுக்கு இடையேயான போராக இருந்தாலும் உளவு முக்கியம். உளவறியாமல் நடத்தப்படும் போர்கள், வலியச் சென்று வலையில் சிக்குவதற்கு ஒப்பாகும். உளவறிதலும், பிறநாட்டு உளவாளிகளைக் களையெடுப்பதும்தான் ராஜதந்திரத்தின் முதன்மையானது. இந்த வலு இல்லாத நாடுகள் எந்தக் காலத்திலும் வல்லரசாக முடியாது.

வெல்ல முடியாது எனக் கருதப்பட்ட இராக் அதிபர் சதாம் உசேனை வீழ்த்துவதற்கு அவரது சகாவையே உளவாளியாகப் பயன்படுத்தியது அமெரிக்கா. இதுபோலவே அரசுகளையும், பயங்கரவாத இயக்கங்களையும், போராளிகளையும் அடக்குவதற்கு உளவாளிகளை அனுப்புவது காலம்காலமாக நடந்து வருகிறது.

இந்தியா என்னதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், மதம் மற்றும் பொருளாதார அடிப்படையிலான பிளவு வலுவாக இருக்கிறது. மக்களிடையே கசப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கசப்புணர்வை பயங்கரவாதம் பயன்படுத்திக் கொள்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டங்களால்கூட தடுக்க முடியாத ஊழல் மலிந்த நிர்வாகத்தை உளவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனந்த விகடன் சொல்வதுபோல எல்லோரைச் சுற்றியும் உளவாளிகள் இருக்கலாம். இந்த விஷயத்தில் ஆனந்த விகடனின் அக்கறை பாராட்டப்பட வேண்டியது.

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்

எல்லோரையும் போல நட்பு கொள்ள எனக்கும் பிடிக்கும். பரந்து விரிந்ததாக இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் பெரிய நட்பு வட்டம் எனக்கும் உண்டு. சிலர் என்னை வெறுமனே கடந்து சென்றிருக்கிறார்கள். சிலர் தொட்டபடியும், சிலர் தழுவியும் சென்றிருக்கிறார்கள். நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பலரது தாக்கம் என்னுள் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் எனது நண்பர்களை அறிமுகம் செய்கிறேன். இங்கு அறிமுகப்படுத்தப்படும் வரிசைக்கும் நட்பின் தரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதன் விளைவுகள் என்னவாக இருக்குமென இதுவரையில் எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தன்னம்பிக்கை ஏணி: என். ராஜாராமன்

உறவிலும், நடப்பிலும், எண்ணங்களிலும், பிறவற்றிலும் பல போலிகளை எனக்கு அடையாளம் காட்டியவர் ராஜாராமன். உண்மையான யதார்த்தவாதி. புளியங்குடி முதன்மைச் சாலையில் பல ஆண்டுகளாக தேநீர்க் கடை நடத்தி வருகிறார். தந்தையின் மரணத்துக்குப் பிறகு சகோதரிகளையும் சகோதரர்களையும் தோள் மீது சுமந்த இவரது பொறுப்புணர்வை எண்ணி நான் எப்போதும் வியப்பதுண்டு.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கத்தின்போது இவரது கடையின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது. ஒரே இரவில் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் நெருக்கடி. அந்தச் சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மீண்டு வருவது கடினம் எனப் பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் ஒரே வாரத்தில் இடிந்திருந்த கடையே மீட்டெழுப்பி தனது பணியைத் தொடக்கினார். இன்றைக்கும் நான் தளர்வுற்றிருக்கும்போது இந்த நிகழ்வை நினைத்துக் கொண்டால் என்னால் புத்தாக்கம் பெற முடிகிறது.

தீவிர இசைப் பிரியர். குறைந்த படிப்பிருந்தாலும் உலகளாவிய ஞானம் கொண்டவர். நசரத் பதே அலிகான் போன்றோரின் இசையையும், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான்.

நான் மட்டுமல்ல, இவரது நண்பர்கள் யாரைக் கேட்டாலும் இதையேதான் ஒப்பிப்பார்கள்.


அடுத்தது: 
ஆழ்கடலின் அமைதி கொண்டவன் 
- எம். பாலசுப்பிரமணியன் 

.................................




ஈரானில் பச்சைப் புரட்சி

தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் கிடையாது. அதுவும், வெற்றி பெறப் போவது உறுதி என பத்திரிகைகள் கூறிக் கொண்டிருக்கும்போது, தோல்வி வந்துவிட்டால்...? அதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் தேர்தல் நடைமுறைகளைக் குறை கூறுவார்கள். அல்லது எதிரணியினர் மோசடி செய்து ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகக் கண்டபடி குற்றம்சாட்டுவார்கள். சிலர் வன்முறையைக் கையிலெடுப்பார்கள். இன்னும் சிலர் மக்களின் துணையுடன் போராட்டம் நடத்துவார்கள். இதுபோன்ற உச்சகட்டப் போராட்டம்தான் ஈரானில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
  அண்மையில் நடந்த அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலேயே அகமதிநிஜாத் தலைமைக்கு மக்கள் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். ஆனால், தேர்தல் முடிவை முன்னாள் பிரதமரும் தோற்றுப்போன வேட்பாளருமான மெüசவி ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக தொடக்கத்திலிருந்தே அவர் கூறி வந்தார். முதல் சுற்றிலேயே அகமதிநிஜாத் 63 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதன் மூலம் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகிவிட்டது என்று அவர் வாதிடுகிறார். அவரும் அவரது கூட்டாளிகளும் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பச்சைப் புரட்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள் இப்போது வன்முறையாக மாறி, பல உயிர்களைப் பலிவாங்கிவிட்டது. நடப்பது மத அடிப்படைவாதத்தை விரும்பாத மக்களின் எழுச்சியா அல்லது அரசியல்வாதிகளின் திட்டமிட்ட வன்முறையா என்பதைப் பற்றி விதவிதமான விளக்கங்கள் கூறப்படுகின்றன. இந்த விளக்கங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடியவில்லை.
  உலக அரங்கில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மாற்றாக பல நாடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் அவற்றுள் முக்கியமானவை. ஆனால், இவை வெறும் பொருளாதார ரீதியிலான மாற்றுகள்தான். சீனாவும் இந்தியாவும் மேற்கத்திய சிந்தாந்தங்களுக்கு எதிராக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை வேறு.
  மேற்கூறிய எல்லா நாடுகளுமே ஒரே நட்பு வளையத்துக்குள் வந்துவிட்டன. அணுசக்தி கழகத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததே இதற்குச் சாட்சி. வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் என்று இந்தியாவும் பிரேசிலும் கூறிக்கொண்டிருப்பதுகூட நீண்டகாலத்துக்குப் பொருந்தாது. பொருளாதார சீர்திருத்தங்களால், உலகமே ஒரே மாதிரியான சித்தாந்தத்தின் கீழ் வந்துகொண்டிருக்கிறது. ஆசியாவிலும், மத்தியகிழக்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
  இப்படிப்பட்ட சூழலில், சித்தாந்த ரீதியாகவே உலகத்துடன் மாறுபட்டிருக்கும் ஒரு சில நாடுகளில் ஈரானும் ஒன்று. அதுவும் அகமதிநிஜாத் தலைமையிலான ஈரான், உலகத்தின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே கருதப்படுகிறது.
   பராக் ஒபாமா பதவிக்கு வந்த பிறகு ஹுகோ சாவேஸ் போன்றோரே அடக்கி வாசித்துக் கொண்டிருக்கையில், அகமதிநிஜாத் மட்டும் தமது மேற்கத்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். அவர் அதிபராகத் தொடரும் வரையில் ஈரானின் அணுஆயுதத் திட்டங்களையோ தன்னிச்சையான போக்கையோ முடக்கவே முடியாது என்பதை மேலைநாடுகள் உணர்ந்திருக்கின்றன. இதற்காகவே மக்கள் போராட்டம் என்ற போர்வையில் ஈரானைச் சிதைக்கும் நடவடிக்கையில் மேற்கு இறங்கியிருப்பதாக ஒருசாரார் நம்புகின்றனர். மெüசவி மேற்கத்திய ஆதரவாளர் என்பது இந்த நம்பிக்கைக்கு கூடுதல் வலுச் சேர்க்கிறது. வழக்கம்போல் பிரிட்டன் தரப்பு இதை மறுத்திருக்கிறது.
  இன்னொருபக்கம், போராட்டத்தை தாம் தூண்டிவிடவில்லை என மெüசவி கூறுகிறார். மத அடக்குமுறை, பெண் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கி அகமதிநிஜாத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர். ஈரானில் மேற்கத்திய சிந்தனை பெருகிவிட்டதே மக்கள் எழுச்சிக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
  போராட்டத்தில் ஈடுபடுவோர், சீர்திருத்தம் தேவை என்கிறார்களே தவிர, இஸ்லாமுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பதில்லை. அதனால்தான், மக்கள் மத்தியில் இந்தப் போராட்டத்துக்கு பலமான ஆதரவும் கிடைத்திருக்கிறது.
  தேர்தலில் முறைகேடு நடந்ததா என்பதும், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் நியாயம் உள்ளதா என்பதும் விவாதத்துக்கு உரியவை. ஆனால், போராட்டத்தை அடக்குவதற்கு அகமதிநிஜாத் அரசு கையாண்டு வரும் அடக்குமுறை, நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கது. பொறுப்பற்றது. போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கொல்வதால், பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை.
  எதிரணியின் போராட்டத்துக்குப் பிரிட்டன்தான் காரணம் எனக்கூறி, அந்நாட்டின் ராஜாங்க அதிகாரிகளை அகமதிநிஜாத் நிர்வாகம் வெளியேற்றியிருக்கிறது. ஜிம்பாப்வேயில் இனவெறி அரசுக்கு எதிராக அந்நாட்டுக் கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் நடத்தியதைப்போல, ஈரான் கால்பந்து வீரர்கள் சிலரும் அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தென் கொரியாவுக்கு எதிராக சியோலில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர்கள் தங்கள் கைகளில் பச்சைப் பட்டைகளைக் கட்டியிருந்தார்கள். இப்படி அமைதியாகப் போராடிய வீரர்கள் அனைவருக்கும் அகமதிநிஜாத் தடை விதித்திருக்கிறார்.
  இதுபோன்ற தடாலடியான, தேவையற்ற நடவடிக்கைகள் மக்களைச் சலிப்படையச் செய்திருக்கின்றன. ஈரானின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு, மேம்பட்ட கருத்துச் சுதந்திரம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நாடுகளுக்கு இது ஒரு வாய்ப்பாகியிருக்கிறது. ஈரானில் பெருங் கலவரத்தைத் தூண்டி ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு அவை காத்துக் கொண்டிருக்கின்றன. ஈரான் நிலைமை குறித்து மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைக் கவனித்தாலே இந்த உண்மை புரியும். போராட்டம் தொடங்கி சில நாள்கள்வரை மௌனமாக இருந்துவந்த அமெரிக்காவும் பிரிட்டனும் அகமதிநிஜாத் நிர்வாகத்தை இப்போது விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.
  இவற்றைப் பார்க்கும்போது, ஒரு சதிவலை பின்னப்பட்டிருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அது அகமதிநிஜாத்தைச் சுற்றியா அல்லது ஒட்டுமொத்த ஈரானைச் சுற்றியா என்பதுதான் தெரியவில்லை.

Friday, November 27, 2009

எனது வலியும் தெரியாத வழியும்

இதன் தலைப்பு மட்டுமே கவிதைக்குரியது. மற்றபடி இது கவிதையல்ல. கவிதையின் வாசனையும் ருசியும் இல்லாத புலம்பல் இது. எங்கேயும் எழுத முடியாததால், இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.



எனது வலியும் தெரியாத வழியும்



முடியாதவைகளுக்காக மட்டும்
கடவுளை நினைப்பவன் நான்.

எந்த முகவரியும் எழுதாமல் ஒருநாள்
அவருக்குச் சம்மன் அனுப்பினேன்.

போனால் போகிறதென
நடுநிசிக் கனவில் வந்தார்.

எட்டடிக் கால்விரல் நகத்தைக்கூட
எட்டித்தான் பார்க்க முடிந்தது.

உயரமும் ஒளியும்
கடவுளென்பதைச் சொல்லின.

என்ன வரம் வேண்டுமென
வழக்கம் போலக் கேட்டார்.

ஒன்றல்ல சில வேண்டுமென
உரிமையோடு கேட்டேன்.

ஆகட்டும் பார்க்கலாம். ஆனாலும்
அளவோடு நிறுத்தி்க் கொள் என்றார்.

காதலியைத் தவிர
யாரையும் தெரியாது எனக்கு.

அவளின் அழகைக் கூட்ட
கூடை நிறைய நகைகள் கேட்டேன்.

இதோ தந்தேன்
அப்புறம் என்றார்.

என் வேர்களில் நீரூற்றிய
அவளுக்கு அரண்மனை வீடு.

அதோ வந்தது.
வேறென்ன என்றார்.

என்றும் மாறாத இளமை
அவளுக்கு மட்டும்.

சரி தரலாம்.
கடைசியாக என்ன வேண்டும்?

நான் காத்திருப்பதைச் சொல்லி
அவளைப் பூமிக்கு அனுப்பும்.

கான்பூர் மைதானத்துக்கு தடை வருமா?

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தியிருக்கும் நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பது அசவுகரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இப்படியொரு கோரிக்கை எழு்ந்ததை அதிதீவிரக் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.



கடந்த ஆண்டில் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்தது. சென்னையில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. ஆமதாபாத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதுவரை எந்தப் பிரச்னையும் எழவில்லை

கான்பூரில் நடந்த மூன்றாவது போட்டி மூன்றாவது நாளே முடிவுக்கு வந்தது. அதுவும் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 121 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியாவுக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.



இந்தியாவின் வெற்றிக்கு, எகிறும் பிட்ச்தான் காரணம் எனக் கதை கட்டப்பட்டது. இந்தக் கதைக்கு ஆசிரியர் மேட்ச் ரெஃப்ரியான இலங்கைக்காரர் மகானம. பிட்ச் தொடர்பாக பிசிசிஐயிடம் ஐசிசி என்னவெல்லாமோ விளக்கம் கேட்டது. ஆனால், இந்தியா எதில் சூப்பர் பவரோ இல்லையோ கிரிக்கெட்டில் சூப்பர் பவர்தான் என்பதை நிரூபித்தது. என்ன செய்து சரிக்கட்டினார்கள் என்று தெரியவில்லை இந்த ஆண்டும் கான்பூரில் டெஸ்ட் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு என்ன நடந்ததோ கிட்டத்தட்ட அதேதான் கான்பூர் மைதானத்தில் இன்றைக்கும் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வென்றதால் டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்குப் பாதுகாப்பான இடம் கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டு முதலிடம் கிடைத்திருக்கிறது.


கடந்த ஆண்டு 3 நாள்களில் ஆட்டம் முடிந்ததைப் போல இந்த ஆண்டும் 4-வது நாளிலே மேட்ச் முடிந்துவிட்டது. இப்போதும் இலங்கை அணி குறைந்த ரன்களில் சுருண்டிருக்கிறது. மகானம என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.






Thursday, November 26, 2009

விக்கிபீடியாவுக்கு அஸ்தமனம்?



முதலில் இரு விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். இது விக்கிபீடியாவின் அஸ்தமனத்தை ஆதரிக்கும்  எதிர்மறையான கட்டுரையல்ல. இதை எழுதுபவரும் விக்கிபீடியாவின் அஸ்தமனத்தை விரும்புபவரல்ல.

இணையத் தேடல்கள் பெரும்பாலும் விக்கிபீடியாவில்தான் முடியும். அந்தத் தொழில்நுட்பமும் உத்தியும் அப்படி. உலகின் செல்வாக்கு மிகுந்த இணையதளங்களில் விக்கிபீடியாவுக்கு மேலான இடமிருந்து வருகிறது. இந்த உலகமே விக்கிபீடியாவைச் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது என்றேகூடச் சொல்ல முடியும். ஆனால், தற்போது வெளி வந்திரு்க்கும் ஒரு ஆய்வு அறிக்கை இந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியிருக்கிறது. இணையத்தில் இதுதான் இப்போது பெரிய விவாதப் பொருள்.

மாட்ரிட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுப்படி, இந்த ஆண்டில் சுமார் 49 ஆயிரம் தன்னார்வக் கருத்து ஆசிரியர்கள் விக்கிபீடியாவிலிருந்து விலகியிருக்கிறார்கள். இது உண்மையெனில், யார் வேண்டுமானாலும், கட்டுரைகளை மாற்றி எழுதலாம் என்கிற தொழில்நுட்பம் மக்களுக்கு அலுத்துப் போய்விட்டது என்று அர்த்தமாகிறது. பல நேரங்களில் இதே உத்தி, வெறும் சொற்போருக்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறது. என்சைக்ளோபீடியா என்கிற அடைமொழியுடன் இருக்கும் விக்கிபீடியாவில் பல கட்டுரைகளில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பதும் அதன் நம்பகத்தன்மையைக் குலைத்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இணையக் கூட்டம் அதிகரித்திருப்பதும் பழைய கருத்து ஆசிரியர்களின் ஆர்வக் குறைவுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் இருக்கிறது.

விக்கிபீடியா அழிவதால் கூகுளின் நால் போன்ற இணையதளங்கள் பயனடையும். இப்போதே நால் இணையதளத்துக்கான வரவேற்பு அதிகமாகிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. யார் கண்டது, விக்கிபீடியாவுக்கு எதிரான ஆய்வு அறிக்கையேகூட ஜாம்பவன்களின் சதிவேலையாக இருக்கக்கூடும்.

அசாருதீனை அனுமதிக்கலாமா?


எண்பதுகளில் கிரிக்கெட்டை கவனிக்கத் தொடங்கியவர்களுக்கு அசாருதீனின் அதிரடி பற்றித் தெரிந்திருக்கும். குச்சி போல மட்டைப் பிடித்துக் கொண்டு அவர் மைதானத்துக்குள் நுழைவதே தனி அழகுதான். ஜான்டி ரோட்ஸ் போன்றவர்களின் வருகைக்கு முன்பு, ஃபீல்டிங் என்றாலே அசாருதீனைத்தான் உதாரணமாகக் காட்டுவார்கள். தன்னை நோக்கி வரும் பந்தை கால்களால் தடுத்து எடுக்கும் முறையை அவர்தான் அறிமுகப்படுத்தினார்.


ஆனால், தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்தே அவரது ஆட்டத்திறன் மங்கியது. வெறும் அலங்கார கேப்டனாகவே அவர் இருந்து வந்தார். ஆனாலும், அவரது தலைமைப் பண்புக்கு இந்திய அணி தலை வணங்கியிருந்தது. கபில்தேவ், ரவிசாஸ்திரி போன்றோர் அணியில் இருந்தாலும் அசாருதீனின் தலைமைப் பண்பு வேறு யாருக்கும் வாய்க்கவில்லை.

சூதாட்டப் புகார்தான் அவருக்கு ஏற்பட்ட களங்கம். இதனால், அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஒருமுறை கிரிக்கெட் ரேட்டிங் தொடர்பான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அசாருதீன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையேறினால், நாங்கள் இருக்க மாட்டோம் என கபில்தேவ், ரவிசாஸ்திரி, வெங்சர்க்கார் உள்ளிட்டோர் மிரட்ட, கூனிக் குறுகி வெளியேறினார் அசார்.



இன்று நிலைமை மாறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார். ஒரு வகையில் அவருக்கு மக்கள் வழங்கியிருக்கும் அங்கீகாரம்தான் இது.

இப்போது அவருக்கு இன்னோர் ஆசை வந்திருக்கிறது. கிரிக்கெட்டில் தமக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என அவர் கோரியிருக்கிறார். இதன் மூலம், பயிற்சியாளராகவோ, வர்ணணையாளராகவோ, ஐபிஎல் அணியின் உரிமையாளராகவோ மாற அவர் முயற்சிக்கிறார் எனத் தெரிகிறது.



அசாருதீனின் இந்த முயற்சி பலிக்கக்கூடும். அது அரசியல் பலம். ஆனால், கிரிக்கெட் உலகம் அவரை வரவேற்கத் தயாராக இல்லை. இப்போதைக்கு கிரிக்கெட்டுக்கு அவரால் எந்த வகையிலும் சேவை செய்யவும் முடியாது. அவரைத் திரையில் பார்க்கும்போதெல்லாம், அவரது அதிரடிகள் நினைவுக்கு வரப்போவதில்லை. வேலையையும், படிப்பையும் ஏன் தேர்வையும்கூட விட்டுவிட்டு இந்திய அணியின் வெற்றிக்காக வேண்டிக் கொண்டிருந்த பல கோடி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர் செய்த துரோகம்தான் நினைவுக்கு வரும்.

கால்பந்தால் பிரிகிறது அரபு உலகம்

கால்பந்து ஆட்டம் ஒரு விளையாட்டு மாத்திரமல்ல. பலருக்கு அதுவே உலகம்; அதுவே மதம். தேசப் பற்றுடனும், அரசியலுடனும் பிணைந்திருக்கும் ஓர் ஆழமான விஷயமும்கூட. சில நாடுகளில் அரசையும் வெளியுறவு உத்திகளையும் நிர்ணயிக்கும் காரணியாகவே கால்பந்து இருந்து வருகிறது.

    கால்பந்துப் போட்டியால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்காவின் எல்சால்வடாருக்கும் ஹோன்டூராஸýக்கும் இடையே 4 நாள் யுத்தமே நடந்தது. இதைக் கால்பந்து யுத்தம் என்றார்கள். சில மாதங்களுக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் நடந்த போட்டி, ஸ்பெயினின் கத்தோலினா பிராந்தியத்துக்குத் தன்னாட்சி அளிக்கும் போராட்டத்தை வலுவடையச் செய்தது. இவற்றையெல்லாம் தாண்டிய ஓர் அசாதாரணமான நிகழ்வுதான் இப்போது ஆப்பிரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது.

   இந்தக் கண்டத்திலிருந்து இத்தனை நாடுகள்தான் உலகக் கோப்பைப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்று சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் விதிமுறை வகுத்து இருக்கிறது.  அந்த வகையில்,   ஆப்பிரிக்காவிலிருந்து 5 நாடுகள் உலகக் கோப்பைக்குச் செல்லமுடியும். இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் அண்மையில் நடந்து முடிந்துள்ளன.

    5 பிரிவுகளாக நடந்த இந்தப் போட்டிகளில் எகிப்தும் அல்ஜீரியாவும் ஒரே பிரிவில் இருந்தன. அப்துல் நாசர் காலத்திலிருந்தே இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான நல்லுறவு இருந்து வந்திருக்கிறது. அல்ஜீரியாவின் விடுதலைப் போராட்டத்துக்கே நாசர் உதவினார் என வரலாறு சொல்கிறது. ஆனால், கால்பந்துப் போட்டிகள் இந்த இருநாட்டு உறவுகளில் பதற்றத்தை  ஏற்படுத்தியிருக்கிறது.

     கடந்த வாரம் இந்த இரு நாட்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி லீக் போட்டி கெய்ரோவில் நடந்தது. எகிப்துக்கு வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம். அல்ஜீரியா தோற்றால், இன்னொரு முறை ஆட வேண்டும். போட்டிக்காக அல்ஜீரிய அணி கெய்ரோவுக்குள் நுழைந்ததுமே பதற்றமும் கூடவே வந்தது. தங்களது வீரர்கள் தாக்கப்பட்டதாகவும், அதற்கு எகிப்துதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அல்ஜீரியா குற்றம்சாட்டியது. அவர்களே தாக்கிக் கொண்டு எங்கள் மீது பழிசுமத்துகிறார்கள் என எகிப்து அதிரடியாகச் சொன்னது. தங்கள் பங்குக்கு ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். உச்சநிலைப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

   மிகுந்த பதற்றத்துக்கு இடையே நடந்த இந்தப் போட்டியில் 2-0 என்கிற கோல் கணக்கில் எகிப்து வென்றதால், இன்னொரு போட்டி ஆட வேண்டிய கட்டாயம் வந்தது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டி அது. எகிப்திலோ அல்ஜீரியாவிலோ அந்தப் போட்டியை நடத்தும் சூழல் இல்லாததால் சூடான்  தேர்ந்தெடுக்கப்பட்டது.

  ஆனால், இந்தக் கால்பந்து, எல்லைகளைக் கடந்தது போலும். 45 விமானங்களில் அல்ஜீரியர்களும், 18 விமானங்கள் மற்றும் சாலை மூலமாக ஆயிரக்கணக்கான எகிப்தியர்களும் சூடானை முற்றுகையிட்டனர். வரலாறு காணாத பாதுகாப்பு என்பார்களே, உண்மையிலேயே அப்படியொரு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் போட்டிக்கு முன்னும் பின்னும் ரசிகர்களின் கைகலப்புகளைத் தவிர்க்க முடியவில்லை. போட்டியில் ஒரு கோல் அடித்து அல்ஜீரியா வெற்றி பெற்றது.

   இதன் பிறகுதான் கால்பந்துக்கு அரசியல் மெருகேற்றப்பட்டது. கால்பந்து என்கிற வட்டத்தைத் தாண்டி இந்த விவகாரம் உருப்பெருக்கம் அடைந்தது.

    கெய்ரோவிலும் சூடான் தலைநகரிலும் அல்ஜீரியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்காக எகிப்து நாட்டுத் தூதரை அழைத்து அல்ஜீரியா விளக்கம் கேட்டது. இதைப் பொறுக்காத எகிப்து, அப்படியொரு தூதரே வேண்டாமெனத் திரும்ப அழைத்துக் கொண்டது. இதனிடையே சூடானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என எகிப்து பத்திரிகைகள் விமர்சித்ததால், அந்த நாட்டுக்கும் கோபம் வந்திருக்கிறது. எகிப்து தூதரை அழைத்து சூடான் தனது கோபத்தைக் கொட்டியிருக்கிறது. இதனால்  எகிப்து - சூடான் இடையே புதிய பகை உருவாகியிருக்கிறது. விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை.

  அல்ஜீரியாவில் எகிப்தியர்களுக்கு எதிராகவும், எகிப்தில் அல்ஜீரியர்களுக்கு எதிராகவும் வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. நாடுகளைக் கடந்தும், இணையத்திலும்கூட இந்தச் சண்டை நடக்கிறது. பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையேயான கடந்த கால நட்புறவின் அடையாளங்களை நினைவூட்டும் புகைப்படங்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் பதற்றம் இன்னமும் தணிந்த பாடில்லை.




  பகை காரணமாக நீண்ட காலமாகவே, எகிப்து -அல்ஜீரிய கால்பந்துப் போட்டிகள்  நடைபெறும் மைதானங்கள் யுத்தகளங்களாக இருந்து வந்திருக்கின்றன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போட்டியின்போது அல்ஜீரிய கால்பந்து வீரர் ஒருவர், எகிப்து அணி டாக்டரின் முகத்தில் பாட்டிலால் தாக்கி குருடாக்கினார். அந்த அளவுக்கு ஆட்டம் வினையான சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருப்பது முன்னெப்போதும் நடந்திராத அளவுக்கு மோசம்.



    அண்மைக்காலங்களில் சர்வதேச அரங்கில் பெரும்பாலான பிரச்னைகளில் அரபு நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அரபு நாடுகளான எகிப்தும் அல்ஜீரியாவும் முறுக்கிக் கொள்வதால் இந்த ஒற்றுமை  குலையக் கூடிய ஆபத்து இருக்கிறது. 

  அல்ஜீரியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளுமே பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பிரச்னைகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவைதான். வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசியும் இந்த நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது இந்த நாட்டு மக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் புதிய பகையுணர்வால் இந்தப் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. வேலைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம், இப்போது அடுத்த நாட்டுத் தேசியக் கொடியை எரித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தானே எதிர்பார்த்தோம் என்பதைப்போல அரசியல்வாதிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

   பகையுணர்வு அதிகமாக இருந்தால் எதிர்பார்ப்பும் ரசிப்பும் அதிகமாக இருக்கும் என்பது விளையாட்டு நியதி. தொழில்முறையிலும் இந்தப் பகை லாபகரமானதாகவே கருதப்படுகிறது. அதனால்தான் இந்தப் பகையைத் தணிக்கவோ போட்டிகளைத் தவிர்க்கவோ எந்தத் தரப்பும் விரும்புவதில்லை. பகையை வியாபாரமாக்கும் உத்தி இது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விளையாட்டுப் போட்டிகள், ஆஷஸ் கிரிக்கெட் தொடர் போன்றவற்றின் முக்கியத்துவத்துக்கும் இந்த உத்தியே அடிப்படை.

   இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் ரீதியான பதற்றத்தைத் தணிப்பதற்காக நல்லெண்ண அடிப்படையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதுதான் காலம்காலமாக இருந்து வரும் வழக்கம். வெற்றிபெறுவோர் அடக்கமாகவும் தோல்வியுறுவோர் அமைதிகாப்பதும்தான் அந்த மாதிரியான நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.

    வன்முறை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்ஜீரிய, எகிப்து இடையேயான போட்டிகளின்போது இரு நாட்டு வீரர்களும் கால்பந்து நிர்வாகிகளும் ஊடகங்களும் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்திருக்க வேண்டும். லாபம் கருதி எந்தத் தரப்புமே அதைச் செய்யவில்லை.  இரு நாட்டு மக்களும் இந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே விளையாட்டு வினையாவதைத் தடுக்க முடியும்.

கோப்புகளை மொத்தமாகப் பெயர் மாற்ற ஒரு எளிய மென்பொருள்

கணினியில் உள்ள கோப்புகளைப் பெயர் மாற்றம் செய்வதற்கு மென்பொருள் தேவையா? சாதாரணமாகத் தேவையில்லைதான். ஒரு கோப்பை பெயர் மாற்றம் செய்வதற்கு நிச்சயமாகத் தேவையேயில்லை. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயக்க அமைப்புகளில் ஒட்டு மொத்தமாக பெயர் மாற்றம் செய்யும்போது, கோப்புகளின் பெயர்கள் நாம் விரும்பும்படி அமைவதில்லை.




உதாரணத்துக்கு நம்முடைய செல்போன் அல்லது கேமராவில் இருந்து படங்களை ( 20, 50, 100 என அதிக எண்ணிக்கையில்)பதிவிறக்கம் செய்கிறோம். அதன் பெயர் dc001.jpg, dc002.jpg.... என்பது போல இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அவற்றை meet1, meet2, meet3... எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது என்றால்,  ஒவ்வொன்றாக பெயர் மாற்றம் செய்வது எரிச்சலான வேலையாகத்தான் இருக்கும். mp3 பாடல்களுக்கு வரிசையாகப் பெயர் கொடுக்கும்போதும் இதே கதைதான். அதுவும், முன்னாலும் பின்னாலும் பெயரைச் சேர்க்க வேண்டுமென்றால் கொடுமைதான். டாஸ் தெரிந்தவர்களுக்கு (ஆழமாக) இந்த வேலை கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால், இறுதிநிலைப் பயன்பாட்டாளர்கள்?

அவர்களுக்காகவே, நிறைய மென்பொருள் கருவிகள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் ரீநேமர் (renamer) என்கிற கருவி கொஞ்சம் வசதியானதாகத் தெரிகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்தக் கருவி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. பாஸ்கல் ஸ்கிரிப்ட் தெரிந்தவர்கள் இன்னும் முறையாகப் பயன்படுத்தலாம்.

பதிவிறக்கம் செய்ய...

http://rapidshare.com/files/312501957/ReNamer.zip

Sunday, November 22, 2009

இந்தியாவில் மனித மூலதன அமைப்பு (மொழிபெயர்ப்பு)

    மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒரு அம்சம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. மனிதன் தனக்குத் தெரிந்த அறிவை சேர்த்து வைத்து பிறருக்குத் தெரியுமாறு பரப்புவதுதான் அது. உரையாடுவதன் மூலமாகவும் பாடுவதன் மூலமாகவும் உரையாற்றுவதன் மூலமாகவும் மனிதன் இதைத் செய்கிறான். எனினும் திறம்படச் செயலாற்றுவதற்கு முறையான பயிற்சி வேண்டும் என்பதன் அவசியத்தை அவன் விரைவிலேயே உணர்ந்தான். படிக்காத ஒருவரைவிட படித்த ஒருவரால் திறம்படப் பணியாற்ற முடியும் என்பது நமக்குத் தெரியும். படித்தவர் அதிக வருவாயை ஈட்டி அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறார்.



    கல்வி ஒருவருக்கு சம்பாதிக்கும் திறமையை மட்டும் தருவதில்லை, இதுபோக சில மதிக்கத்தக்க பலன்களையும் அது தருகிறது; வாழ்க்கையில் தனக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுக்க கல்வி உதவுகிறது. சமூகத்தில் பெருமையுடன் வாழ வழி செய்கிறது. சமூகத்தில் நடக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அறிவை வழங்குகிறது. புதுமையான ஆக்கப்பூர்வமான பணிகளை ஊக்குவிக்கிறது. இது தவிர கல்வி அறிவு பெற்ற பணியாளர்களால் புதிய தொழில்நுட்பங்களை எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதனால்தான் பொருளாதார வளர்ச்சியை முடுக்குவதற்கு மக்களுக்கு கல்வி அறிவைப் புகட்டுவது அவசியம் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


    நிலம் போன்ற இயற்கையில் இருக்கும் வளங்களை தொழிற்சாலைகள் போன்ற மூலதனங்களாக மாற்றலாம். அதேபோல், மாணவர்கள் போன்ற மனித வளத்ததை மன மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற மனித மூலதனமாக மாற்றலாம். ஒவ்வொரு சமூகத்துக்கும் முதலில் தேவை மனித மூலதனம்தான். அதுவும் படித்து பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மற்றும் வித்தகர்களாக இருப்பவர்கள் அவசியம் தேவை. அவர்களால் மேலும் பல மனித மூலதனத்தை உருவாக்க முடியும். அதாவது ஒரு பேராசிரியர் பல்வேறு மருத்துவர்கள், பொறியாளர்களை உருவாக்குவது போன்று. இதனால் மனித மூலதனத்தைப் பெருக்குவதற்கு நாம் முதலீடு செய்தால் அது மனித வளத்தை மனித மூலதனமாக மாற்ற உதவும் என்பது தெளிவாகிறது.



    மனித மூலதனத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்காணும் சில கேள்விகள் பயன்படும்.



    1. மனித மூலதனத்துக்கான ஆதாரங்கள் என்னென்ன?

    2. மனித மூலதனத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

    3. மனித மூலதன அமைப்பு, மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையதா?

    4. இந்தியாவில் மனித மூலதன அமைப்பை மேம்படுத்துவதில் அரசு என்னென்ன செய்ய முடியும்?



மனித மூலதன ஆதாரங்கள்


    கல்வியில் முதலீடு செய்வதே மனித மூலதனத்தின் முக்கிய ஆதாரமாகும். இது தவிர வேறுபல ஆதாரங்களும் உள்ளன. சுகாதாரம், வேலைக்கான பயிற்சி, இடம்பெயர்வு, தகவல் ஆகியவையும் மனித மூலதனத்துக்கான வேறு ஆதாரங்களாகும்.



    பெற்றோர்கள் ஏன் கல்விக்காக பணத்தைச் செலவு செய்கிறார்கள்? தனிநபரின் கல்விக்காகச் செய்யும் செலவு, நிறுவனங்கள் தங்களவு வருவாயைப் வருங்காலத்தில் பெருக்கிக் கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் தங்களுக்குத் தேவையான மூலதனக் கருவிப் பொருள்களை வாங்குவதற்காகச் செய்யும் செலவுக்குச் சமமாகும். அதேபோல், தனிநபரின் கல்வியில் செய்யப்படும் மூதலீட்டுக்குப் பின்னால் வருங்காலத்தில் அவர்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளமுடியும் என்ற நோக்கம் இருக்கிறது.



    இதேபோல், சுகாதாரமும் தனிநபர் வளர்ச்சிக்காகப் பயன்படுவதைக் காட்டிலும் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



    நோய்வாய்ப்பட்டவர், ஆரோக்கியமானவர்; இவர்களில் யார் சிறப்பாக வேலை செய்வார்? நோய்வாய்ப்பட்ட ஒரு தொழிலாளருக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை எனில், அவர் வேலை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். அவரது உற்பத்தித் திறன் குறைகிறது. எனவே, சுகாதாரத்துக்காகச் செலவிடுவது மனித மூலதன அமைப்பில் முக்கியப் பங்குவகிக்கிறது.



    நோய் தடுக்கும் மருந்துகள் (தடுப்பூசி), நோய் நீக்கும் மருந்துகள் (நோய் வாய்ப்பட்டிருக்கும்போது தரப்படும் மருந்துகள், சமூக மருந்துகள் (சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது), பாதுகாப்பான குடிநீர் வழங்குவது, சுகாதார வசதிகளைச் செய்து தருவது ஆகியவை சுகாதாரத்துறையில் செய்யப்படும் செலவுகளாகும். சுகாதாரச் செலவுகள் ஆரோக்கியமான தொழிலாளர்களை வழங்குவதால், அது மனித மூலதனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



    நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வேலையுடனே பயிற்சியளிக்கின்றன. இது போன்ற பயிற்சிகள் பல்வேறு வகைகளில் உள்ளன. திறன் பெற்ற தொழிலாளர் ஒருவரின் கீழ் புதிய தொழிலாளர்கள் பயிற்சி பெறலாம் அல்லது நிறுவனத்துக்கு வெளியே பயற்சியளிக்கும் நிறுவனத்தில் பயிற்சிக்காக ஊழியர்களை அனுப்பி வைக்கலாம். இந்த இரு முறைகளிலும் நிறுவனம் தங்களது ஊழியர்களின் பயிற்சிக்காக செலவு செய்தாக வேண்டும். எனவே  பயிற்சிக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும் என நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. அந்த காலகட்டத்தில் பயிற்சிக்காலத்தில் நிறுவனம் இழந்த உற்பத்தித் திறனை ஈடுகட்டும். அதேபோல் பயிற்சிக்காக நிறுவனங்கள் செலவு செய்திருந்தால், செலவு செய்த தொகையைக் காட்டிலும் அதிகமான ஆதாயத்தை நிறுவனங்கள் அடைந்துவிடுகின்றன.



    தங்களது சொந்த ஊரில் கிடைக்கும் சம்பளத்தைக் காட்டிலும் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேடி பலர் இடம் பெயர்கிறார்கள். வேலையின்மையே இந்த கிராம-நகர இடம்பெயர்வுக்கு முக்கியக் காரணம். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற தகுதிவாய்ந்தவர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். உள்நாட்டில் கிடைக்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் வெளிநாடுகளில் கிடைப்பதே இதற்குக் காரணம். இந்த இரு இடம்பெயர்வுகளையும் எடுத்துக்கொண்டால், அதில், இடம்பெயர்வதற்கான போக்குவரத்துச் செலவு, புதிய இடத்தில் வசிப்பதனால் அதிகமாகும் செலவு, புதிய சமூகத்தில் வசிப்பதற்கு உளம்சார்ந்த செலவு ஆகியவை அடக்கமாகும். வருமானம் அதிகரிப்பதால் இடம்பெயர்வதற்கான செலவு ஈடுகட்டப்படுகிறது. ஆக, மனித மூலதனத்தை உருவாக்குவதில் இடம்பெயர்வும் முக்கியப் பங்கு வகிக்கிறது.



    தொழிலாளர், கல்வி, சுகாதாரம் போன்ற விவரங்களை அறிய மக்கள் செலவு செய்கின்றனர். உதாரணமாக, வெவ்வேறு வகையான வேலைகளுக்குக் கிடைக்கும் சம்பளத்தின் அளவைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனர். கல்வி நிறுவனங்கள் வேலைக்குத் தேவையான திறன்களை வளர்க்கின்றனவா, அதற்கு எவ்வளவு செலவாகிறது என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்கள் விடை தேடுகின்றனர். மனித மூலதனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு இந்தத் தகவல் மிக அவசியமாகும். மற்றொருபுறம் மனித மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கும் இது அவசியமாகிறது. எனவே, தொழிலாளர் சந்தை மற்றும் இதர சந்தைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காகச் செய்யப்படும் செலவுகள் மனித மூலதனத்தை உருவாக்குதற்கான ஆதாரமாகிறது.



    மனித மூலதனம் என்ற கருத்தை உருவாக்குவதில் இயற்கை மூலதனம் அடிப்படையானதாகும். இந்த இரு மூலதனங்களுக்கும் சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு.



மனித மூலதனமும் பொருளாதார வளர்ச்சியும்

    நாட்டின் வருமானத்துக்கு அதிகப் பங்களிப்பைச் செய்வது ஒரு தொழிற்சாலைப் பணியாளரா அல்லது சாப்ட்வேர் பொறியாளரா? நன்கு படித்தவரின் வேலை செய்யும் திறன், படிக்காதவரின் திறனைக் காட்டிலும் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். ஆக, இந்த இருவரில் சாப்ட்வேர் பொறியாளர்தான் நாட்டின் வருமானத்தில் அதிகப் பங்களிப்பைச் செய்கிறார். பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் வருமானம் அதிகரிப்பதாகும். பொதுவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படித்தவரின் பங்களிப்பு படிக்காதவரைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கிறது. அதேபோல், ஆரோக்கியமான ஒருவர் நோய்வாய்ப்பட்ட ஒருவரைவிட நீண்டநேரத்துக்கு தொடர்ச்சியாக வேலை செய்ய முடியும் என்பதால், ஆரோக்கியமும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவையும் வேலைக்கான பயிற்சி, வேலைச் சந்தை தொடர்பான தகவல்கள், இடம்பெயர்வு ஆகியவை போலவே ஒருவரின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.



    மனிதர்கள் அல்லது மனித மூலதனத்தின் உற்பத்தித் திறன் அதிகமாவதால், புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவும், புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தவும் வழி ஏற்படுகிறது. சமூகத்தில் நடக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கும், கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கும் கல்வி பயன்படுகிறது. அதேபோல் படித்த பணியாளர்கள்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர்.



    மனித மூலதனம் அதிகரிக்கும்போது பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்பதற்கு போதுமான தெளிவான ஆதாரங்கள் இல்லை. இது அளவிடுதலில் ஏற்பட்ட குறைபாட்டால் இவ்வாறு தோன்றக்கூடும். உதாரணமாக, கல்வி என்பது எத்தனை ஆண்டுகள் கல்வி கற்றார் என்பதை வைத்து அளவிடப்படுகிறது. ஆனால், ஆசிரியர்-மாணவர் விகிதம் மற்றும் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை ஆகியவை கல்வியின் தரத்தை நிர்ணயிக்காது. அதேபோல் சுகாதாரச் சேவைகள் பணத்தின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன. சராசரி ஆயுள் மற்றும் இறப்பு விகிதம் ஆகியவை நாட்டின் சுகாதார நிலையை அப்படியே காட்டுபவையாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை வளர்ச்சி மதிப்பிடப்படுவதால் வளர்ந்த நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் இத் துறைகளில் கிட்டத்தட்ட ஒரே அளவில் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், தனிநபர் வருமானத்தில் அதிகமான வேறுபாடு இருக்கிறது. அதாவது, வளரும் நாடுகளில் மனித மூலதன வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது; ஆனால் அதற்கேற்றாற்போல் தனநபர் வருமானம் இல்லை. மனித மூலதன வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதாவது அதிக வருமானம் இருந்தால் அதிக அளவு மனித மூலதனத்தை உருவாக்கலாம். அதேபோல், அதிக அளவு மனித மூலதனம் இருந்தால் வருமானத்தை அதிகரிக்கலாம்.

    பொருளாதார வளர்ச்சிக்கு மனித மூலதனம் அவசியம் என்பதை இந்தியா நீண்ட காலத்துக்கு முன்பே உணர்ந்துவிட்டது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், Ôஎந்த வளர்ச்சி உத்தியிலும் மனித வள மேம்பாட்டைக் (மனித மூலதனம்) கணக்கில் எடுத்துக் கொள்வது மிக அவசியம். அதிலும் குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டுக்கு இது மிகவும் பொருத்தமாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி அறிவு கொண்ட, முறையாகப் பயிற்சிபெற்ற மக்கள், நாட்டை வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் சொத்தாக இருப்பர். விரும்பும் திசையை நோக்கிய சமூக மாற்றத்தையும் அவர்கள் உறுதி செய்வர்.

Friday, November 20, 2009

சொற்களைப் படிக்க எழுத்துக்களின் வரிசை முக்கியமல்ல: நண்பரின் மின்னஞ்சல்

Only great minds  can read this 
This is weird, but 
interesting!
 

fi yuo cna 
raed tihs, yuo hvae a sgtrane mnid too 
Cna yuo raed tihs? Olny 55 plepoe out of 100 can. 
i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae.. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!







தமிழில் ஒரு முயற்சி

 

தகழமித்தில் உளள்  சு உநியர்லை மறுற்ம் மேநில்லைப் பளிள்களில் தழ்மிப் பாத்டதை றபி ழிமொக் கப்லபு இலால்த யதூ தழிமில் நத்டத வேடுண்ம் னஎ பளிள்க் கவில்துத்றை அவுறிறுத்யுதிளள்து.

Thursday, November 19, 2009

நோய்களுக்குக் காரணம் என்ன? இயற்கை மருத்துவ விளக்கம்

அண்மையில் இயற்கை மருத்துவ நிபுணர் ஏ.வி.ஜி.ரெட்டி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். நோய் வரும் காரணம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயற்கை மருத்துவர் பீச்சாம்ப் பற்றி அவர் கூறினார்.

பீச்சாம்பும் லீயி பாஸ்டரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். நோய்கள் வருவதற்கு நோய்க் கிருமிகளே காரணம். நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் எனப்படும் எதிர் உயிரிகளை உடலுக்குள் செலுத்தினால் கிருமிகள் அழிந்துவிடு்ம், நோய் நீங்கும் என்பது லூயி பாஸ்டரின் தத்துவம். ஆனால் பீச்சாம்பின் தத்துவம் இதற்கு நேர் எதிரானது.

நோய்க்குக் கிருமிகள் காரணம் அல்ல. கிருமிகளை அழிப்பதால் மட்டும் உடல் நலம் பெற முடியாது. உண்மையில், உடல் கழிவுப் பொருள்களை அகற்றுவதற்காகவே கிருமிகள் உடலில் வந்து தங்குகின்றன என்றார் பீச்சாம்ப். உடலைக் கழிவுகளற்றுச் சுத்தமாக வைத்துக் கொள்வதே ஆரோக்கியத்துக்கான வழி என்றும், நோய் வராமல் இருப்பதற்கான வழி என்றும் அவர் கூறினார். அப்படியானால் நோய் வந்ததும், கழிவுகளை அகற்றும் பணியைத்தான் மருத்துவர் செய்ய வேண்டுமே தவிர, கழிவுகளை நாடி வந்த நோய்க்கிருமிகளைக் கொல்லும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றார் பீச்சாம்ப். சில உதாரணங்கள் மூலம் அவர் இதை நிரூபித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், என்ன நடந்ததோ மரத்தில் கட்டிவைத்து அவர் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாம் இன்னமும் எதிர் உயிரிகளை நம்பிக் கொண்டு கழிவுகளுடனும் கிருமிகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நார்ட்டான் கோஸ்ட் - டிஸ்க் க்ளோனிங்




டிஸ்க் க்ளோனிங் எனப்படும் வன்தட்டைப் பிரதியெடுக்கும் மென்பொருட்கள் பற்றி நாம் நிறையவே கேள்விப் பட்டிருப்போம் அந்த வகையி்ல நம்மில் மிகப் பலருக்கு நார்ட்டான் கோஸ்ட் (Norton Ghost) பரிச்சயமாகியிருக்கும். எனினும் ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயக்க அமைப்புகளை நிறுவுவதற்குப் புதிதாகப் பயின்று கொண்டிருப்போருக்கும் டிஸ்க் க்ளோனிங் பற்றிக் கேள்விப்படாதோருக்கும் இது பயன்படக்கூடும்.

டிஸ்க் க்ளோனிங் அறிமுகம்...

எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயக்க அமைப்புகள் கணினியில் நிறுவிய சில நாள்கள்வரை நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். சில நாள்களில் அவை வேகம் குறைவது போலவோ, நச்சு நிரல்களால் தாக்கப்பட்டது போலவோ தோன்றும். சில நேரங்களில் ஏதாவது புதிய மென்பொருளை நிறுவும்போது நமது இயக்க அமைப்பு பாதிக்கப்பட்டு வேகம் குறையலாம். இந்தச் சமயங்களில் நமக்குத் தெரிந்த தீர்வு ரீஇன்ஸ்டால் எனப்படும் மறுநிறுவுதல்தான். ஆனால், இது கொஞ்சம் நேரம் பிடிக்கும் வேலை. இயக்க அமைப்பு, ஆன்டிவைரஸ், வேர்ட் பிராசசர், போட்டா மென்பொருள் என எல்லாவற்றையும் மீண்டும் நிறுவ வேண்டும் இந்த வேலையை எளிமையாக்குவதற்காக இயக்க அமைப்பு நிறுவப்பட்ட வன்தட்டின் பிரிவையோ முழு வன்தட்டையோ பிரதி எடுத்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குத்தான் டிஸ்க் க்ளோனிங் என்று பெயர்.


இதில் முன்னணியில் இருப்பது நார்ட்டான் கோஸ்ட். இதில் பல பதிப்புகள் வந்தாகிவிட்டது. கடைசியாக வந்திருக்கும் பதிப்பு 15.0. இத்தனை பதிப்பு வந்த பிறகும் இன்னும் நானும் என்போன்ற நண்பர்களும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பதிப்பையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

டிஸ்க் க்ளோனிங் செய்வதற்கு பூட்டபிள் சிடி எனப்படும் எக்கித்தள்ளும் குறுவட்டும், 1.5 எம.பி. அளவுள்ள கோஸ்ட் மென்பொருளும் போதுமானவை.

இவையிரண்டும் இலவசமாகவே கிடைக்கிறது. இந்த விவரம் வெறும் அறிமுகம் மட்டுமே.. இதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இணையத்தில் தேடலாம்.

தகு்ந்த முன் அனுபவம் இல்லாவிட்டாலோ, கணினியில் முக்கியத்தகவல்கள் இருக்கும்பட்சத்திலோ பிரதியெடுத்துக் கொள்ளாமல் பரீட்சித்துப் பார்க்க வேண்டாம்.

Wednesday, November 18, 2009

புளியங்குடி பாலம்... வெள்ளத்தைத் தாங்குமா?



புளியங்குடி மார்க்கெட் பாலத்தின் தாங்குதிறன் பற்றியும், அது உடைந்தால் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல் பற்றியும் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம அந்த எச்சரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. இப்போது நிலைமை வெகு மோசமாகவே பாலம் இடிக்கப்பட்டது. ஆயினும் புதிய பாலம் துரித கதியில் கட்டப்பட்டது என்பதை மறுக்கவே முடியாது. ஏற்கெனவே, இருந்த பாலத்தைக் காட்டிலும் அகலமானதாக இருப்பதால், அந்த இடத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், பாலத்தின் உயரமும், ஓடையில் வெள்ள நீர் போவதற்கான பாதையும் குறைந்து போயிருப்பதால், பாலத்தின் வாழ்நாள் குறையக்கூடும என்ற ஐயம் எழுந்திருக்கிறது. எனினும், இந்தப் பாலம் இடிக்கப்பட்ட ஓரிரண்டு மாதங்களும் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விடுவதற்காகச் செய்யப்பட்ட பணிகளில் அரசு நிர்வாகம் திறம்படவே செயலாற்றியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.








மூன்று விதமான நிலைகளில் புளியங்குடி மார்க்கெட் பாலத்தின் உருவாக்கம்.

படங்கள்: அருண்குமார் 


பசுமையாகுது புளியங்குடி!



சில ஆண்டுகளுக்கு முன்புவரை புளியங்குடி புழுதிபறக்கும் நகரமாக இருந்துவந்தது. இன்றைக்கு அந்த நிலை இல்லை. விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், வனத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியின் காரணமாக புளியங்குடி நகரத் தெருக்களெங்கும் பசுமையான மரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் குறைந்தது ஒரு மரம் என்கிற வகையில் புளியங்குடி, சிந்தாமணி என ஊரின் பல பகுதிகள் இப்போது பசுமையாய் இருக்கின்றன. பருவநிலை மாற்றத்துக்குக் காரணமா பூமி வெம்மையாதலை எதிர்கொள்வதற்கு நமது நகரம் தயாராகி விட்டது. இதில் தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு நாம் முன்னோடிதான். இதை மற்றவர்களுக்குப் பரப்புவதற்கும், பணியை எடுத்துச் செய்வதற்கும் உள்ளூர்க்காரர்களும், ஊர் கடந்து வாழ்வோரும், நாடு தாண்டி வாழ்வோரும் இன்னும் முயற்சிக்க வேண்டும்.




 

Tuesday, November 17, 2009

பத்திரிகையாளர்களிடம் கெஞ்சுகிறார் விவேக்!


தினமலர் பத்திரிகையில் வந்த செய்தியால் நடிகைகள் மீது ஏற்பட்ட கறையைத் துடைப்பதற்காக நடந்த கண்டனக் கூட்டத்தில் சில நடிகர்கள் சினிமாவில் நடிப்பதுபோலவே ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்கள். பத்திரிகையாளர்களை பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் அலைபவர்கள் எனவும் பேசினார் குட்டைக் கலைவாணர். அவரைப் பற்றி செய்தி வந்தால் பிரசுரிக்கக்கூடாது எனவும், ஏதாவது செய்தியென்றால் நெகடிவாக எழுதுவதெனவும் பல பத்திரிகைகள் முடிவெடுத்துவிட்டன. ஏற்கெனவே வடிவேலுவின் அதிரடியில் மார்க்கெட் போயிருக்கும் விவேக்குக்கு இந்த விவகாரம் இன்னும் பீதியைக் கிளப்பியது. பார்த்தார், பேசாமல் பத்திரிகையாளர்கள் காலில் விழுந்துவிடுவது என முடிவெடுத்து கடிதம் எழுதியிருக்கிறார். இதோ அந்தக் கடிதம்... ஈனப்பசங்க என்று பேசிய நடிகர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.





விவசாயிகளுக்கு நன்றி சொல்லுங்கள்!

விவசாயம் என்பது தெரிந்தே நஷ்டப்படும் தொழில் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் நிலையைப் பார்த்தால் அது ஓரளவுக்கு உண்மைதான்.  கிராமங்களும் விவசாய நிலங்களும் இப்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன. கலாசாரம் திரிந்து போயிருக்கும் சமூகம், விவசாயிகளை வேண்டாதவர்களாகப் பார்க்கிறது. பயிர்த் தொழிலைக்கூட பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துவிட இன்றைய உலகம் முயன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலிலும் விவசாயத்தை விடாப்பிடியாகக் கட்டிக் காப்பவர்கள் உலகமெங்கிலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் அப்படிச் சிலர் சேர்ந்து விவசாய சேவா சங்கம் என்கிற அமைப்பை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்கள். இன்றைக்கும் தீவிரமாகச் செயல்பட்டுவரும் இந்தச் சங்கம், கடன் கேட்பது, உரங்களுக்கு மானியம் கோரிப் போராடுவது என்ற வழக்கமான வேலைகளைச் செய்வதில்லை. பாரம்பரியம் மாறாத அறிவுசார்ந்த தொழில்நுட்பமே விவசாயத்தை வலுப்படுத்த முடியும் என்பது இந்தச் சங்கத்தின் நம்பிக்கை. யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருப்பது இந்தச் சங்கத்தின் சிறப்பு.

இந்தச் சங்கத்தின் மூத்த உறுப்பினரான கோமதி நாயகம், ரசாயன உரங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதுடன், அதன்படியே விவசாயம் செய்தும் வருகிறார். இடுபொருள்களுக்காக உர நிறுவனங்களையும் அரசையும் நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதே விவசாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்; விவசாயிகள் யாரையும் சாராதவர்களாக இருந்தால்தான் விவசாயத்தைத் தொடர முடியும் என்னும் கருத்தை இவர் வலியுறுத்துகிறார். தமிழகத்தின் பல இடங்களுக்கும் பயணம் செய்து இயற்கை விவசாயத்தைப் பரப்பும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

கால்நடைப் பண்ணையில், சாண எரிவாயுக் கலன்கள் அமைத்து அதன் மூலம் கிடைக்கும் எரிவாயுதான் இவரது வீட்டுக்குப் பயன்படுகிறது. இதனால் சமையல் எரிவாயுவுக்கு அரசு வழங்கும் மானியம் மிச்சமாகிறது. கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு, உரமும் பூச்சிக் கொல்லிகளும் தயாரித்து தனது வயலுக்கு அதைப் பயன்படுத்துகிறார். இது போன்று வெளி இடுபொருள்களை எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நின்றால் மட்டுமே விவசாயத்தை லாபகரமாக நடத்த முடியும் என்பது இவரது அனுபவப் பாடம்.

கூட்டுக் குடும்பத்தைப் பராமரிக்கும் இவருக்கு வெளிநாட்டினர் மத்தியிலும் மிகுந்த மரியாதை இருக்கிறது. இவரது வீட்டில் தங்கி, கூட்டுக் குடும்ப நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளவும், இயற்கை விவசாய உணவுகளை உண்ணவும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள்.

இயற்கைவழி விவசாயம் கட்டுபடியாகாது, விளைச்சல் குறைவாக இருக்கும் என்கிற வழக்கமான கருத்தையெல்லாம் மறுக்கிறார் இந்தச் சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த உறுப்பினர் அந்தோனிசாமி. ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக பஞ்சகவ்யம், பசுந்தாள் உரம், பூச்சி விரட்டி என இவரும் இயற்கை வழி வேளாண்மையையே தேர்ந்தெடுத்திருக்கிறார். எலுமிச்சையில் புதிய ரகம் கண்டுபிடித்ததற்காக மத்திய அரசு இவருக்கு "சிருஷ்டி சன்மான்' என்கிற விருதை வழங்கியிருக்கிறது.

இந்தச் சங்கத்தில் எழுபது வயதைத் தாண்டிய வேலு என்கிற பெரியவர் ஒருவர் இருக்கிறார். மரங்களை அடிப்படையாக கொண்ட தோட்டத்தை உருவாக்கியவர் இவர். வயதான காலத்தில் மரங்களைக் கொண்ட தோட்டத்தை அமைப்பதற்கு மிகப் பரந்த மனம் வேண்டும். ஏனெனில் இந்த மரங்கள் பிற்காலத்தில் தரப்போகும் பலன் இவருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். இப்படித் தமது வாழ்நாளில் எந்தப் பலனும் கிடைக்காது எனத் தெரிந்தும் தரிசு நிலங்களில் இவர் மரங்களை வளர்த்தார். இந்தத் தன்னலமற்ற சேவைக்காக மத்திய அரசின் விருட்ச மித்ரா விருது இவருக்குக் கிடைத்தது.

விவசாயம் தவிர, நகரைப் பசுமையாக்கும் பணிகளையும் இந்தச் சங்கம் செய்து வருகிறது. தன்னார்வ அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஆண்டுக்கு 5000 மரக்கன்றுகளை தெருவெங்கும் நடும் பணிகளை இந்தச் சங்கம் மேற்கொண்டிருக்கிறது.