Tuesday, November 17, 2009

சிறுகதை: கனவுக் கன்னி!

பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்கிற துடிப்பில் சென்னை வந்த எனக்கு, ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டிருந்த சமயம். சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் நண்பனுடன் ஒட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் வரை எந்த வேலையும் கிடைக்காததால் தன்னம்பிக்கையும் சுயமுனைப்பும் அடி வாங்யிருந்தன. ஊருக்குப் போய்விடுவது என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டபோதுதான், எப்போதோ விண்ணப்பம் அனுப்பிய பள்ளியில் இருந்து வேலை நியமனக் கடிதம் வந்தது.

தி.நகரின் நெருக்கடிகளுக்கு மத்தியில் அடக்கமாக இருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளி அது. மகாகவி வித்யாசாலா என்ற போர்டை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தேன். அங்கு மாணவர்களைக் கண்காணித்தபடி நின்று கொண்டிருந்த இளம் வயதுப் பெண் ஒருத்தி என்னருகில் வந்தாள்.

பெண் என்றதும் அவள் எப்படி இருந்தாள் என எழுதுவது மரபுதானே எனக் கேட்கிறீர்களா? கம்பனைப் போல் எனக்கு வர்ணிக்கத் தெரியாது. இப்போது டென்னிஸ் ஆடிக் கொண்டிருக்கிறதே புஷ்டியான ஒரு பெண், அதற்கு சேலை உடுத்தியது போல இருந்தாள் அவள். அவ்வளவுதான்

அருகே வந்து "கேன் ஐ ஹெல்ப் யூ, சார்?' என்றாள்.

"யெஸ் மேடம்' என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசுவதற்கு ஆங்கில சொற்களைத் தேடிக் கொண்டிருந்தேன். ஆங்கில பாடத்தையே தமிழில் நடத்திய பள்ளியில் படித்ததால் எவ்வளவு தேடியும் எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை. ஒன்றுமே பேசாமல் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டி, "இன்னிக்கு வரச் சொன்னாங்க' என்றேன்.

அதைப் பார்த்தவள், "ப்ளீஸ், வெய்ட் இன் த ஆஃபீஸ். பிரின்சிபல் வில் கம் அட் நயன் தேட்டி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். வாட்சைப் பார்த்தேன் மணி 9 ஆகியிருந்தது. அலுவலகம் சென்று சேரில் அமர்ந்திருந்தேன். அங்கு மேஜைகளை ஆக்கிரமித்திருந்த பெண்கள் என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

சிறிது நேரம் கழித்து முதலில் பேசிய அதே பெண் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளிடம் ஆங்கிலம் பேச வேண்டும் என்று நினைத்தபோதே, எனக்குத் தொண்டையில் ஏதோ சிக்கிக்கொள்ள ஆரம்பித்தது. அவள் என்னைப் பார்த்து சினேகத்துடன் சிரித்த பிறகுதான் படபடப்பு அடங்கியது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நெருக்கமாக வந்து, "இங்க தமிழ்ல பேசக்கூடாதுன்னு தெரியுமா உங்களுக்கு?' கேட்டாள். எனது தர்மசங்கடத்தை புரிந்துகொண்டு விட்டாள் என்று தோன்றியது.

"தெரியும் மேடம். ஆனா நான் தமிழ் பாடம் எடுக்கத்தான் வந்திருக்கேன்'

"ஓ... சரிதான், ஏற்கெனவே இருந்தவரு வேற வேலை கிடைச்சுப் போய்ட்டாரு. அதனால உங்களக் கூப்பிட்டிருப்பாங்க போல.'

"உங்க பேரென்ன' நேரடியாகக் கேட்டேன்.

"ரஞ்சனி. கம்யூட்டர் சயின்ஸ் டீச்சர்'

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, இன்னொரு சின்னப் பெண் தூரமாக வந்து கொண்டிருந்தாள். அவளைச் சுட்டிக்காட்டி, "அவங்கதான் பிரின்சிபல்' என்று என்னிடம் சொல்லிவிட்டு அவளை நோக்கி நடந்தாள் ரஞ்சனி. என்னைக் காட்டி அவளிடம் ஏதோ சொன்னாள்.

  அதிகம் போனால், 25 வயதுதான் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. "குட் மார்னிங் மேடம்' என்றேன்.

"யூ ஆர் மிஸ்டர்...'

"சிவராஜன்'

"தமிழ் கிளாஸஸ் ஹேண்டில் பண்ண வந்திருங்கீங்கதானே?'

"யெஸ் மேடம்'

"உங்க அப்பாயின்ட்மென்ட கரெஸ்பான்டென்ட் கன்ஃபர்ம் பண்ணியாச்சு. இன்னிக்கு நான் கொஞ்சம் பிஸி. அதனால், டைம் டேபிள கிளார்க்குக்கிட்ட வாங்கிட்டு இன்னிக்கே வேலைல சேர்ந்திடுங்க. நாம பிறகு பேசலாம்'   என்னிடம் பேசிவிட்டு அங்கிருந்த தனது அறைக்குள் நுழைய முற்பட்ட பிரின்சிபல் மீண்டும் என்னிடம் திரும்பி, "இந்த ஸ்கூல் கேம்பஸ்ல யாரும் தமிழ்ல பேசக்கூடாதுன்னு ரூல் இருக்கு. தமிழ் பாடம் நடத்தறதுனால, உங்களுக்கு மட்டும் இந்த ரூல் அப்ளிகபல் ஆகாது' சொன்னதும் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

"ஓகே மேடம்' என்றேன்.

முதல்நாள் வகுப்பு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. பட்டணத்துப் பிள்ளைகள் தமிழ் வாத்தியாரை வேண்டாத ஜென்மம் போலத்தான் பார்த்தார்கள். ஆனாலும் போகப் போக கதைகளையும் ஜோக்குகளையும் சொல்லி திருக்குறளையும் நாலடியாரையும் கவனிக்கச் செய்தேன். அங்கு வேலை செய்பவர்களில் பியூன் மற்றும் டிரைவர் தவிர மற்ற அனைவரும் பெண்கள்தான் என்று தெரிந்ததும் ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பள்ளியிலேயே டிரைவர் உள்பட மற்ற அனைவரையும் விடக் குறைவான சம்பளம் வாங்குவது நான்தான் என்பதுதான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. தமிழுக்கு கடைசி இடம் கிடைத்திருப்பதை நினைத்து அப்போது உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.

இந்த நாள்களில் ரஞ்சனி எனக்கு நெருக்கமானாள். பள்ளி முடிந்ததும் பஸ் ஸ்டாப் வரையிலும் என்னுடனே வருவாள். மிக இளம் வயதுப் பெண் என்பதால், சினிமா பற்றித்தான் எப்போதும் பேசுவாள். பெண் வாசனையே படாத ஆள் என்பதாலோ என்னவோ, அவள் பேச்சில் எனக்கு ஒருவித மயக்கம் ஏற்படத்தான் செய்தது. இருவரும் பெயர் சொல்லிப் பேசிக் கொள்வோம். அந்த அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும்போது, "எனக்கு ஞான திருஷ்டி மாதிரி ஒரு சக்தி இருக்குது ராஜன்' என்றாள்.

"அப்டீன்னா'

"நடக்கப் போறது எல்லாம் எனக்கு முன்னாலேயே கனவுல தெரிஞ்சிரும்'

"நல்லாத்தானே இருந்த... திடீர்னு என்ன ஆச்சு'

"விளையாடாதீங்க ராஜன். நான் நெஜம்மாத்தான் சொல்றேன்' சீரியஸôக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

நக்கலாகச் சிரித்தேன். நான் நம்பவில்லை எனப் புரிந்து கொண்டு மெüனமானாள். நான் சிரித்தது அவளைச் நோகச் செய்திருக்க வேண்டும். ஏதோ தப்பு செய்துவிட்டோம் என எனக்குத் தோன்றியது.

சமாதானப் படுத்துவதற்காக, "சாரி. விவரமாச் சொல்லு' என்றேன்.

அதற்கு அவள் எதுவும் சொல்லவில்லை. என்றாலும் கொஞ்சம் இயல்புக்கு வந்தாள்.

காபி சாப்பிடத் தீர்மானித்து அருகில் இருந்த காபி ஷாப்புக்குள் இருவரும் நுழைந்தோம். காபி ஆர்டர் செய்ததும் பேச்சுத் தொடர்ந்தது.

"பெரும்பாலும் எனக்குக் கனவு வராது. வந்தால் அதுபடியே நடந்திரும். 2 வருஷத்துக்கு முன்னாடி திருவொற்றியூர் பக்கம் இருக்கிற அம்மன் கோயிலுக்குப் போயிட்ட வந்த பிறகுதான் இந்த மாதிரியெல்லாம் நடக்குது' என்று ஒருவித பயம் கலந்த முகத்துடன் சொன்னாள்.

"என் அப்பா இறந்து போவது ரெண்டு நாளுக்கு முந்தியே எனக்கு கனவுல தெரிஞ்சது. அதுக்கப்புறம் பக்கத்து வீட்டுப் பையனுக்கு ஆக்சிடென்ட் ஆனது, மாமாவுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது என எல்லாமே என் கனவுப்படி நடந்தது' அவள் அடுக்கிக்கொண்டே போனாள்.

இதுபோன்ற சங்கதிகள் என்றால் சின்னவயதிலிருந்தே எனக்குப் பயம்தான். அதனால், ரஞ்சனி கூறியதைக் கேட்டதும் எனக்கு அடிவயிற்றைப் பிசைந்தது. ஏதோ பேய் பிடித்த பெண்ணுடன் பழக்கம் வைத்துக் கொண்டோமோ என்று நினைத்துக் கொண்டேன். இவளிடம் இதைப்பற்றி இனிமேல் பேசவே கூடாது எனத் தீர்மானித்தேன்.

காபி வந்தது. குடித்துவிட்டு இருவரும் கிளம்பினோம். வேறெதுவும் பேசவில்லை.

அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. அவள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று மனம் ஆடிக் கொண்டிருந்தது. இரவில் ஒரே பேய்க் கனவாக வந்தது. அடிக்கடி எழுந்து தண்ணீர் குடித்துக் கொண்டேன். மறுநாள் பள்ளி முடிந்ததும் அவளே என்னுடன் வந்து சேர்ந்து கொண்டாள். அவள் அருகே வந்ததும் நேற்று எடுத்துக் கொண்ட தீர்மானத்தை மறந்து அவளிடம் பேசத் தொடங்கிவிட்டேன். ஏற்கெனவே சொன்ன மயக்கம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். இருவரும் நடந்தோம்.

"நேற்றைக்கும் ஒரு கனவு வந்தது' என்றாள்.

கொஞ்சம் திக்கென்று இருந்தாலும் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் வந்தது.

"என்ன கனவு?' நான் கேட்டேன்.

"ஏதோ ஒரு தெரிஞ்சவங்களோட மரண ஊர்வலத்த கனவுல பாத்தேன்' என்றாள்.

கனவு என்றதும் ஏதோ சாவு செய்தி சொல்லப் போகிறாள் என்று நான் ஏற்கெனவே ஊகித்திருந்தேன். ஆனாலும், தெரிந்தவர்கள் என்றதும் எனக்கு நாக்கு வறண்டே போய்விட்டது. என்ன கேட்பது என்றும் தெரியவில்லை. துக்கமும் பயமும் என்னுள் பரவின. உடம்பெங்கும் ஊசிகளைச் செருகியது போன்று வலித்தது. என்னைப் போன்றே ரஞ்சனியின் முகத்திலும் பயம் அப்பிக்கொண்டிருந்தைப் பார்க்க முடிந்தது.

இப்போதைக்குப் புதிதாக அவளிடம் நெருங்கிக் கொண்டிருப்பது நான்தான் என்பதால் என்னைத்தான் கனவில் பார்த்திருப்பாளோ என்ற பீதியில் நான் சிக்கியிருந்தேன்.

"யார் என்பது சரியாகத் தெரிந்ததா? செத்தது ஆணா? பெண்ணா? உண்மையிலேயே இது நடக்குமா? இதைத் தடுக்க வழியேயில்லையா?' என்று ரஞ்சனியிடமே கேட்டேன்.

"ரொம்ப பழக்கப்பட்ட முகமாத்தான் இருந்தது. ஆனா தெளிவா எதுவுமே தெரியல. ஒரே குழப்பமா இருக்கு. எனக்கு கனவு வந்தா அது நடந்தே தீரும். அதான் பயமா இருக்கு' என்றாள் பீதியுடன். அவளிடம் உண்மையான கலவரம் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

என்ன செய்யலாம் என நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவள் செல்ல வேண்டிய பஸ் வந்தது. பை சொல்லிக் கிளம்பினாள்.

பத்து ரூபாய் செலவு செய்து போன் போட்டு எங்க ஊர் சாமியார் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன். "கனாக்கள் பலிப்பது சாத்தியம்தான்' என்றார்.

அவள் கனவில் வந்தது நான்தான் எனக் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டேன். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பயத்தில் என்னவெல்லாமோ சிந்தனை ஓடியது.

இறுதியாக, பள்ளிக்குச் செல்வதில்லை எனத் தீர்மானித்தேன். டைபாய்டு எனக்கூறி அடுத்த தெருப் பையன் மூலமாக விடுப்புக் கடிதம் கொடுத்தனுப்பினேன்.

இரண்டு நாள்கள் ஓடின. மரண பயம் கொஞ்சம் குறைந்துவிட்டது. லீவை கேன்சல் செய்துவிட்டு பள்ளிக்குச் செல்லலாம் போலத் தோன்றியது. மறுநாள் பள்ளிக்குச் சென்றேன். கேட் பூட்டியிருந்தது. பியூன் மட்டும் வாசலுக்கு வெளியே நின்று வரும் மாணவர்களிடம் ஏதோ கூறி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான்.

பதற்றத்துடன் அவனிடம் சென்று விசாரித்தேன். "ரஞ்சனி மேடம் இறந்துட்டாங்க சார்' என்றான்.

என் கண்களில் நீர் கொப்பளித்தது. உடல் சரிந்து விழுவது போல இருந்தது.

"நேற்று சாயங்காலம்வரை நல்லாத்தான் இருந்தாங்க சார். ரோட்ட கிராஸ் பண்ணும்போது பைக்ல வந்தவன் மோதிட்டு நிக்காமப் போயிருக்கான். தலைல அடிபட்டதால ஆஸ்பத்திரிலேயே உசிரு போய்டுச்சு சார்' என்றான்.

அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். பிரின்ஸிபால் உள்பட சிலர் அங்கு சோகமான முகத்துடன் அங்கு நின்றிருந்தனர். காக்கி அணிந்த ஒரு ஆள் வந்து "பாடி யார் வாங்கப் போறீங்க' என்று கேட்டான். எல்லோரும் தயங்கியிருந்தபோது, நான் சென்று அவன் சொன்ன இடங்களில் கையெழுத்துப் போட்டேன்.

அவளது முகத்தைப் பார்க்கக் காத்திருந்தேன். அப்போது, என்னருகே வந்த வெள்ளை யூனிபாஃர்ம் ஆள் ஒருவன், "இத்தனை பேரும் நேத்து சாயங்காலம் எங்கசார் போனீங்க. ஏபி பாசிட்டிவ் பிளட் கொடுக்க நாதியில்லாம நாலு மணி நேரமா துடிச்சிக்கிட்டு கிடந்துதே சார் இந்தப் பொண்ணு. எங்களால ரெண்டு யூனிட்தான் வாங்க முடிஞ்சது. இன்னும் ஒன்னு ரெண்டு யூனிட் கிடைச்சிருந்தா பொழைச்சிருக்கும் சார்' என்றார்.

இனம்புரியாத குற்ற உணர்ச்சி என்னைத் தாக்கியது. எனக்கும் ஏபி பாசிட்டிவ்தான். நான் கூட வந்திருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நினைத்தபோது, இதயம் சுருக்கென்று வலித்தது. கடைசியில் கனவு அவளையே பலிவாங்கிவிட்டது போலும்; சுயநலத்தை எண்ணி நான் இன்னமும் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

7 comments:

Unknown said...

thats good :-)

Jebastin said...

chubby ranjani?


sania Mirza?
Saina Nehwal?
Joshna Chinnappa?

முனைவர் மு.இளங்கோவன் said...

தங்கள் எழுத்தில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கை உண்டு.
நல்ல கற்பனை,இயல்பான நடை.
தொடர்ந்து தங்களிடம் சிறுகதைகளையும் எதிர்பார்க்கிறோம்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

கனவுக்கன்னி கதை

நல்ல ஆரம்பம்
நல்ல திருப்பம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

முனைவர் அண்ணாகண்ணன் said...

இந்த முடிவை நான் பாதியிலேயே கணித்துவிட்டேன். ஆயினும் நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

புளியங்குடி said...

குளியலறைப் பாடகன் போலப் "பொத்தி" வைத்திருந்தது வெளியிடப்பட்ட கதைதான் இது. புதிதாகக் கிடைத்திருக்கும் ஊக்கத்தால் இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.

Dawn said...

Dear Brother Very nice to see your all articles posted here. Everyday used to see ur mail and somewhat could not read. Today read all those pages. Really superb.When i reading all those, my luv and respect on you increases a lot. Keeps it up.

With Luv

Velmurugan